-தமிழ்த் திரையின் வெற்றித் தடங்கள் 10:
காதல் தோல்வி என்பது உலகம் முழுமைக்கும் பொதுவானது. ஆண், பெண் என்ற பாலின பேதம் கூட இதற்கு விதிவிலக்கல்ல.
ஆனால், காதலில் தோல்வியுற்ற ஆண் ஒருவன் முகம் நிறைய தாடியுடன், கண்களில் விரக்தியுடன், இதயம் முழுக்க சோகத்துடன், வாழ்வின் மீதியை அவநம்பிக்கையுடன் எதிர்கொள்வான் என்றொரு பிம்பம் சமூகத்தில் பொதிந்திருக்கிறது.
இதனைத் தமிழ் மக்கள் மனதில் உருவாக்கியதில் ‘தேவதாஸ்’ படத்துக்கு மிகப்பெரிய பங்கிருக்கிறது.
காதலன் பிரிந்து சென்ற துக்கத்தில் பெண்கள் வாடுவதும் காலம்காலமாக நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. கல்யாணமே செய்துகொள்ளாமல் வாழ்ந்து தீர்க்கும் பெண்கள் எக்காலத்திலும் இருக்கின்றனர்.
ஆனால், ஆண்களை மட்டுமே மையப்படுத்திய சமூகத்தில் அவர்கள் குறித்த விவாதம் குறைவு. ஒருவகையில் அதனை அதிகப்படுத்தும் விதமாகவும் தற்காலத்தில் ‘தேவதாஸ்’ திரைப்படம் மாறியுள்ளது.
காரணம், இதன் தாக்கம் இன்று வரை இளைஞர்களிடம் பரவியுள்ளது.
காதல் தோல்வியின் அடையாளம்!
ஒரு பெண் தன் காதலைத் துண்டித்தால், அந்த ஆணைப் பார்த்து ‘தேவதாஸ் ஆகிவிடாதே’ என்று பகடி செய்வதை ‘வழக்கம்’ என்ற சொல்லின் கீழ் வகைப்படுத்திட முடியாது.
காதலுக்கு மட்டுமல்ல மது போதைக்கு அடிமையாவதற்கும் ரோல் மாடல் தேவதாஸ் தான்.
இன்றைய சூழலில் தமிழ்நாட்டில் சுமார் 85 சதவிகிதத்துக்கும் அதிகமானோருக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இவர்களில் தினமும் அருந்துவோர் எண்ணிக்கை கணிசமாகவே இருக்கும். இதனால், அவர்களைத் தொற்றும் வாழ்நாள் உபாதைகளும் அதிகம்.
மிகவும் பலவீனமான, மனநிலை சமனற்ற, உணர்வெழுச்சி இல்லாத மனிதர்கள் சமூகத்தில் அதிகமாகும் சூழல் உருவாகியுள்ளது. இதுவே தேவதாஸ் திரைப்படம் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டிய அவசியத்தை உருவாக்குகிறது.
முதல் ‘தேவதாஸ்’!
வங்க மொழி எழுத்தாளரான சரத் சந்திர சட்டோபாத்யாயா எழுதிய புதினம் ‘தேவதாஸ்’. 1900-களில் எழுதப்பட்ட இந்த நாவல், ஒரு நூற்றாண்டைக் கடந்தும் உயிர்ப்புடன் மக்களிடையே பேசுபொருளாக இருப்பது ஆச்சர்யமான விஷயம்.
1936-ம் ஆண்டு பெங்காலி மொழியில் முதன்முதலாக ‘தேவதாஸ்’ கதை படமாக்கப்பட்டது.
இப்படத்தின் இயக்குநர் பிரமதீஷ் பரூவாவும் ஜமீன்தார் மரபில் பிறந்து வளர்ந்தவர்தான். இப்படம் தமிழில் டப் செய்யப்பட்டு பின்னர் வெளியானது.
வேறு நடிகர் நடிகைகளைக் கொண்டு இந்தி மற்றும் இஸ்ஸாமிய மொழிகளிலும் இப்படத்தை உருவாக்கினார் பிரமதீஷ்.
இத்திரைப்படங்களில் தேவதாஸ் மற்றும் பார்வதி என்ன சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று விளக்கப்பட்டிருக்கும். வர்க்க பேதம் மட்டுமல்லாது, சாதியும் அவர்களது காதலுக்கு குறுக்கே நின்றது சொல்லப்பட்டிருக்கும்.
1937-ம் ஆண்டு தமிழில் பி.வி.ராவ் ‘தேவதாஸ்’ படத்தை நடித்து இயக்கினார். இது பெரிய வரவேற்பைப் பெறவில்லை.
தடைகளை மீறிய தொடக்கம்!
சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் தமிழிலும் தெலுங்கிலும் மீண்டும் இதே கதை தயார் செய்யப்பட்டது. ‘தேவதாசு’ என்று தெலுங்கிலும் ‘தேவதாஸ்’ என்று தமிழிலும் ரிலீஸ் ஆனது.
இரு மொழிப் படம் என்றாலும், தெலுங்கில் 1953 ஜூன் 26-ம் தேதி வெளியானது. அதன்பிறகு மூன்று மாதங்களுக்குப் பிறகு செப்டம்பர் 11-ம் தேதி தமிழில் ரிலீஸ் ஆனது.
சொல்வதற்குச் சுலபமாக இருந்தாலும், இத்திரைப்படம் நீண்ட இடைவெளிக்குப் பிறகே வெளியானது. அதற்கிடையே ஏகப்பட்ட தடைகளும் இடையூறுகளும் ஏற்பட்டன.
வினோதா பிக்சர்ஸ் தயாரிப்பில் தேவதாஸ் கதை படமாக்க முடிவு செய்யப்பட்டது. நாகேஸ்வரராவ், சவுகார் ஜானகி ஆகியோர் தேவதாஸாகவும் பார்வதியாகவும் நடிப்பதென்று முடிவானது.
இப்படத்தின் திரைக்கதையைத் தெலுங்கில் அல்லூரி சக்ரபாணி எழுதினார். இவர்தான் பின்னாளில் பி.நாகி ரெட்டியோடு இணைந்து விஜயா வாஹினி பேனரில் பல படங்களைத் தயாரித்தார்.
தெலுங்கு பட டைட்டிலில் இவரது பெயர் இடம்பெற்றிருந்தாலும், தமிழ் பதிப்பில் ‘சீனரியோ’ என்று இயக்குநர் வேதாந்தம் ராகவய்யாவுக்கு கிரெடிட் கொடுக்கப்பட்டிருக்கும்.
சுமார் ஒரு வார காலம் படப்பிடிப்பு நடத்தப்பட்ட பிறகு, தேவதாஸை கைவிடுவதென்று முடிவெடுத்தனர் வினோதா பிக்சர்ஸ் நிறுவனத்தில் இருந்த பங்குதாரர்கள்.
காரணம், ரொம்பவும் சோகமான கதை தெலுங்கில் எடுபடாது என்ற கணிப்பு தான். இதனால், வேறு வழியின்றி ‘சாந்தி’ என்ற படத்தைத் தெலுங்கில் இயக்கினார் பங்குதாரர்களில் ஒருவரான வேதாந்தம் ராகவய்யா. அப்படம் படுதோல்வியைத் தழுவியது.
பார்வதியான சாவித்திரி!
சாந்திக்குப் பிறகு, சில பங்குதாரர்கள் அந்த தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து விலகினர்.
டி.எல்.நாராயணா என்பவர் வினோதா பிக்சர்ஸ் பொறுப்பைத் தன் கையில் எடுத்துக்கொள்ள, மீதமிருந்த பங்குதாரர்களான இசையமைப்பாளர் சி.ஆர்.சுப்பராமன், வேதாந்தம் ராகவய்யா, தெலுங்கு வசனகர்த்தா சமுத்ராலா ராகவாச்சார்யா ஆகியோர் தேவதாசு படத்தில் மீண்டும் பணியாற்றத் தொடங்கினர்.
ஆனால், சவுகார் ஜானகி இப்படத்தில் நடிக்க முடியாத சூழல் உருவானது. அதுவே ‘சாவித்திரி’ என்ற நடிப்பு இமயத்தைத் திரையுலகுக்குத் தந்தது.
ஆர்.என்.நாகராஜ ராவ் என்ற புகைப்படக் கலைஞர் படப்பிடிப்புக்கு முன்னதாக நாகேஸ்வர ராவின் ஸ்டில்களை எடுத்தார். அப்போது பயன்படுத்தப்பட்ட ஒப்பனை படப்பிடிப்பின் போதும் தொடரப்பட்டது.
அந்தக் காலகட்டத்தில் சாவித்திரியும் நடிக்க வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தார். அவரையும் புகைப்படம் எடுத்திருந்தார் நாகராஜ ராவ். அது இயக்குநர் வேதாந்தம் ராகவய்யாவின் கண்களில் பட்டது.
அதுவரை பாதாள பைரவி, பெல்லி சேசி சூடு, கல்யாணம் பண்ணிப் பார் ஆகிய படங்களில் மட்டுமே சாவித்திரி நடித்திருந்தார்.
சில மாத இடைவெளிக்குப் பின்னர் தேவதாஸ் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியபோது, சாவித்ரியை பார்வதியாக நடிக்க வைப்பதென்று முடிவு செய்தார் ராகவய்யா. உடனிருந்தவர்கள் ‘வேண்டாம்’ என்று சொன்னபோதும் அவர் ஏற்கவில்லை.
அதற்கான பலனைத் திரையில் வெளிப்படுத்தியிருந்தார் சாவித்திரி.
காதல் தோல்வியின் அடையாளம்!
ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ஆண், வசதியான குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணை மணக்க முற்பட்டால் எதிர்ப்பு எழும். அதுவே ஆண் வசதியான குடும்பத்திலும் பெண் ஏழ்மையிலும் இருந்தால் விளைவுகள் இன்னும் கடுமையாக இருக்கும். இரண்டாவதைத் தாங்கி அமைந்திருந்தது தேவதாஸ் கதை.
பேரூர் ஜமீன்தார் நாராயண ராவின் இரண்டாவது வாரிசான தேவதாஸும் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த நீலகண்டத்தின் மகள் பார்வதியும் ஒன்றாக வளர்கின்றனர்.
இருவரது வீடுகளும் அடுத்தடுத்து இருக்கின்றன. தேவதாஸின் குறும்புத்தனத்தைக் கண்டு வருந்தும் நாராயண ராவ், அவரை நகரத்துக்குப் படிக்க அனுப்புகிறார்.
நகரத்தில் வளர்ந்தாலும் பார்வதியின் மீதான அன்பு தேவதாஸின் மனதில் இருந்து மறையவில்லை. அது மேலும் அதிகமாகி காதலான நிலையில், பருவ வயதில் இருவரும் மீண்டும் சந்திக்கின்றனர்.
குறிப்பிட்ட காலகட்டத்தில் திருமணம் செய்வதென்று முடிவெடுக்கும்போது, இருவரது குடும்ப அந்தஸ்து குறுக்கே வருகிறது. அவர்களது காதல் உடைந்து போகிறது.
இதன் பிறகு துர்காபுரம் ஜமீன்தாரின் இரண்டாவது மனைவியாகிறார் பார்வதி. அவரது முதல் மனைவியின் குழந்தைகளை நல்வழிப்படுத்தி, அவர்களுக்கு அன்னையாக மாறுகிறார்.
இந்தக் காலகட்டத்தில், பார்வதியின் மீதான காதலை மறக்க முடியாமல் மதுவுக்கு அடிமையாகிறார் தேவதாஸ். அப்போது, சந்திரமுகி என்ற நடன மங்கையின் நட்பு அவருக்குக் கிடைக்கிறது. ஆனால், அவரது வாழ்வை விமர்சிக்கிறார் தேவதாஸ்.
தேவதாஸின் வார்த்தைகள் ஈட்டியாய் மனதில் குத்த, பலர் முன் நடனமாடும் வாழ்வைத் துறக்கிறார் சந்திரமுகி.
அவரையே உயிராக எண்ணி வாழ்கிறார். இடைப்பட்ட காலத்தில் தேவதாஸை சந்திக்கும் பார்வதி, அவரைத் திருமணம் செய்துகொண்டு சுகமாக வாழுமாறு வேண்டிக் கொள்கிறார்.
சோகத்தைத் தவிர வேறெந்த உணர்வும் தனக்குச் சொந்தமில்லை என்று தேவதாஸ் மனம் சுழன்று கிடக்க, அவரை அருகில் இருந்து கவனிப்பதே தன் மனதுக்கு நிம்மதி தரும் என்று சந்திரமுகி செயல்பட, தன்னைச் சுற்றி பலர் இருந்தாலும் மனதில் தேவதாஸ் குறித்த கவலைகளை மட்டுமே மலையாகச் சுமந்து வாழ்கிறார் பார்வதி.
கரையான் அரிக்கத் தொடங்கிய புகைப்படத்தில் எந்த பிம்பமும் தெளிவாகத் தெரியாது என்பதைப் போலவே, ஒருகட்டத்தில் மது போதையில் தேவதாஸின் உடல் நலிவுறத் தொடங்குகிறது.
மரணம் தன்னை நெருங்குகிறது என்பதை அறியும்போது, கடைசி முறையாக பார்வதியைப் பார்க்க விரும்புகிறார் தேவதாஸ்.
அவரது விருப்பம் நிறைவேறியதா, சந்திரமுகி தனது காதலை தேவதாஸிடம் உணர்த்தினாரா, பார்வதி தனது காதலனின் துக்கத்தை எப்படி எதிர்கொண்டார் என்ற பல கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது இப்படத்தின் திரைக்கதை.
மது போதையின் உச்சத்தில் கிறுகிறுத்துக் கிடக்கும் தேவதாஸ் தெருவில் நாயுடன் அமர்ந்திருக்கும் காட்சி, இன்றுவரை காதல் தோல்வியைக் கிண்டல் செய்யப் பல முறை பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
காலத்தின் அடையாளமாகிப்போன ஒன்றை மட்டுமே அதிகளவில் கிண்டல் செய்ய முடியும் என்பதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.
அரிய வகை பொக்கிஷம்!
தேவதாஸின் திரைக்கதை சோகத்தையும் மிக நுட்பமாக அழகியலுடன் அணுகியிருக்கும். தந்தையின் சொல் கேட்டு தேவதாஸ் திருமணம் வேண்டாம் என்று சொல்ல, அதேபோல தந்தையின் மானத்தைக் காப்பாற்றுவதற்காகவே பார்வதி ஒரு முதியவரை மணம் முடிக்கச் சம்மதம் தெரிவிப்பார்.
இரு காட்சிகளுமே அற்புதமாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.
அதேபோல, வயதான ஜமீன்தாருடன் பார்வதியின் இல்லற வாழ்க்கை எவ்வாறு உள்ளது என்பதையும் திரைக்கதை குறிப்பால் உணர்த்திவிடும்.
முதன்முறையாக மது அருந்த தேவதாஸை அழைத்துச் செல்லும் பகவான், கை ரிக்ஷாவில் ரிக்ஷாகாரரையும் உட்கார வைத்து இழுத்துக்கொண்டு வருவார்.
இறங்குமிடம் வந்ததும் தேவதாஸ் 1 ரூபாய் கொடுக்க, ரிக்ஷாகாரருக்கு 5 ரூபாய் கொடுக்கச் சொல்லும் பகவான் ‘அந்த கஷ்டம் இப்போல்ல தெரியுது’ என்பார்.
இதுபோல, பல காட்சிகளில் சமூக நீதியைப் பேசுவது போல பகவான் பாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
தேவதாஸ் படப்பிடிப்பு பெரும்பாலும் இரவு வேளையில் நடந்திருக்கிறது. சரியாகத் தூங்காத கண்களும், உடல் நலிவை வெளிப்படுத்தும் ஒப்பனையின் துணையுடன் தேவதாஸாகவே திரையில் மாறிப்போனார் நாகேஸ்வர ராவ்.
கிட்டத்தட்ட 50 நாட்கள் அவர் இது போன்று படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார். தேவதாஸின் வெற்றி மேலும் பல படங்களில் அவர் சோகமயமாகத் திரிய வேண்டிய கட்டாயத்தை உருவாக்கியது.

பின்னாட்களில் ‘மரோசரித்ரா’, ‘சாகர சங்கமம்’ போன்ற ஒரு சில தெலுங்கு திரைப்படங்கள் சோகமான முடிவைக் கொண்டிருந்தாலும் வெற்றியைச் சுவைத்தன.
ஆனால், தெலுங்கில் வெளியான பெரும்பாலான திரைப்படங்கள் இதற்கு எதிரான திசையிலேயே திரைக்கதை அமைக்கப்பட்டன.
இன்றுவரை அந்த வழக்கம் தொடர்வதே, அவற்றில் இருந்து ‘தேவதாஸ்’ போன்ற பொக்கிஷம் எந்த அளவுக்கு விலகியிருக்கிறது என்பதற்கு உதாரணம்.
காலத்தால் அழியா இசை!
‘கனவிதுதான் நிஜமிதுதான்’, ‘எல்லாம் மாயை தானா’, ‘உலகே மாயம், வாழ்வே மாயம்’, ‘உறவுமில்லை பகையுமில்லை’, ‘அன்பே பாவமா’, ‘துணிந்தபின் மணமே துயரம் கொள்ளாதே’ போன்ற பாடல்கள் சோகச் சுவையின் தடங்களாக இன்றும் விளங்குகின்றன.
‘ஓ.. தேவதாஸ்’, ‘சந்தோஷம் தரும் சவாரி போவோம் சலோ சலோ..’, ‘பாராமுகம் ஏனய்யா’, ‘சந்தோஷம் வேணுமென்றால் இங்கே கொஞ்சம் என்னைப் பாரு’ போன்றவை உற்சாகத்தை விதைக்கும் பாடல்களாக அமைந்துள்ளன.
இப்படத்திற்கு இசையமைத்த சி.ஆர்.சுப்பராமன் படம் வெளியாகும் முன்னரே மரணமடைந்தார். இதனால் அவரது உதவியாளர்களான விஸ்வநாதனும் ராமமூர்த்தியும் படத்தின் பின்னணி இசையைக் கவனித்தனர்.
‘உலகே மாயம்’, ‘எல்லாம் மாயை தானா’ பாடல்கள் இவர்களது இசையமைப்பில் உருவானதாகச் சொல்லப்படுகிறது. இப்படத்தின் டைட்டில் காட்சி தொடங்குவதற்கு முன்பாகவே, சி.ஆர்.சுப்பராமனுக்கு சமர்ப்பணம் என்ற கார்டு இடம்பெற்றிருக்கும்.
ஹெச்எம்வி நிறுவனம் இப்படத்தின் இசைத்தட்டுகளை தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியிட்டது. இரண்டு மொழிகளிலுமே பாடல்கள் ரசிகர்களால் பெரிதாகச் சிலாகிக்கப்பட்டன.
கண்டசாலா, ராவ் பாலசரஸ்வதி தேவி, ராணி ஆகியோர் பின்னணி பாடியிருந்தனர். தமிழில் கே.டி.சந்தானம், உடுமலை நாராயண கவி ஆகியோர் பாடல்களை எழுதியிருந்தனர்.
அதேபோல, இப்படத்தின் தமிழ் பதிப்புக்கு உதயகுமார் வசனம் எழுதியிருந்தார்.
காலத்தால் அழியா கதாபாத்திரங்கள்!
தேவதாஸின் தந்தை நாராயண ராவாக நடித்தவர் எஸ்.வி.ரங்காராவ். பின்னாட்களில் தெலுங்கு மற்றும் தமிழில் குறிப்பிடத்தக்க குணசித்திர பாத்திரங்களை ஏற்று நடித்து பெயர் பெற்றார்.
இதில் நடித்தபோது அவரது வயது 35தான். ஆனால், 65 வயது முதியவராக நடித்திருந்தார் ரங்காராவ்.
தேவதாஸின் நண்பன் பகவான் பாத்திரத்தில் பெக்கட்டி சிவராம் தெலுங்கில் நடித்திருந்தார். இப்பாத்திரத்தை தமிழில் எம்.என்.நம்பியார் ஏற்றிருந்தார்.
கொடூர வில்லனாகவே நம்பியாரை பார்த்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கு, இப்படத்தில் அவரது நடிப்பு வித்தியாசமாகவே தோன்றும்.
சுகமாக வாழ வேண்டுமென்ற சுயநலம் கொண்ட ஒருவன், தனது நண்பனைப் பயன்படுத்திக் கொள்ளும் பாத்திரம் அவருடையது.
சூழலுக்கேற்ப மனநிலை மாறும் என்பதை அவருடைய நடிப்பு பிரதிபலித்திருப்பது தேவதாஸ் தரும் ஆச்சர்யங்களுள் ஒன்று.
பின்னாட்களில் பகவான் போன்ற பாத்திரங்கள் ‘க்ளிஷே’வாக வடிவமைக்கப்பட்டதை இன்றுவரை திரைக்கதையாளர்களால் மாற்ற முடியவில்லை.
ஒரு காட்சியில் ‘எது சந்தோஷம்’ என்று காதல் தோல்வியில் உழலும் நாகேஸ்வர ராவ் கேட்க ‘சந்தோஷம் வேணுமென்றால்’ என்று சொல்லிவிட்டு நம்பியார் பாதியில் நிறுத்த..
அதன் தொடர்ச்சியாக ‘இங்கே என்னைக் கொஞ்சம் பாரு’ என்றவாறே லலிதா நடனமாடத் தொடங்குவார். அவரது அறிமுகமே அப்பாத்திரத்தின் தன்மை என்பதை விளக்கும் வகையில் அமைந்திருக்கும்.
இப்படத்தில் அவரது நடிப்பும் அழகும் சிலாகிக்கப்பட்டாலும், அவரது சகோதரி பத்மினியின் புகழே பின்னாட்களில் ரசிகர்கள் மனதில் படிந்துபோனது.
1940-களில் தெலுங்கு சினிமாவுலகில் நுழைந்தபோதும், பத்தாண்டுகளுக்குப் பின்னரே நாகேஸ்வர ராவ் புகழ் ஏணியில் ஏறத் தொடங்கினார். அதற்கு அடித்தளம் அமைத்த திரைப்படங்களில் தேவதாஸுக்கும் கணிசமான பங்குண்டு.
இப்படத்தின் தமிழ் பதிப்பில் மிகக்கவனமாக அவரது குரல் உச்சரிப்பு வெளிப்பட்டிருக்கும். ஆனால், தனது காதலை தந்தை ஏற்கவில்லை என்று பார்வதியிடம் தேவதாஸ் வெளிப்படுத்தும் காட்சியில் மட்டும் தெலுங்கு வாடை அதிகமிருக்கும்.
ஒருவேளை இதுவே அவர் டப்பிங் பேசியதில் முதல் காட்சியாகவும் அமைந்திருக்கக் கூடும். ஆனால், அதைத் தவிர வேறெந்த இடத்திலும் நமக்கு அவரது குரல் அன்னியமாகத் தெரியாது.
அற்புதமான ஒளிப்பதிவும் ஒலிப்பதிவும்..
தேவதாஸ் திரைப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்தவர் பி.எஸ்.ரங்கா. இவர் இப்படத்துக்கு லைட்டிங் செய்திருப்பது பெருவாரியான பாராட்டுகளைத் திரையுலகில் பெற்றுத் தந்தது.
துர்காபுரம் ஜமீன்தாரை மணம் முடித்தபிறகு, அவரது வீட்டு பூஜையறையில் நின்று பார்வதி பேசும் காட்சி கண்களில் ஒத்திக்கொள்ளும் வகையில் அமைந்திருக்கும்.
தமிழ் திரைப்பட இயக்குநர்கள் வரிசையில் முதன்மையான இடத்தை வகிக்கும் பாலு மகேந்திராவுக்குப் பிடித்த ஒளிப்பதிவுகளில் இதுவும் ஒன்று.
அதேபோல, இப்படத்தில் ராமச்சந்திரனின் ஒலிப்பதிவு இப்போதும் நம்மை ஆச்சர்யப்படுத்தும் வகையில் அமைந்திருக்கும். கிளைமேக்ஸில் பார்வதியைத் தேடி தேவதாஸ் செல்லும்போது மழை பெய்யும் காட்சி அதற்கொரு உதாரணம்.
மாட்டு வண்டி சத்தமும், இடியின் ஒலியும் சேர்ந்து அதே இடத்தில் இருப்பது போன்ற உணர்வை நமக்குள் தோற்றுவிக்கும்.
காலத்தால் அழியாதது!
காதலில் திளைக்கும் இரண்டு பேர் ஏதோ ஒரு காரணத்தால் பிரிவதென்பது எக்காலத்திலும் உண்டு. பல்வேறு காரணங்கள் அதன் பின்னிருக்கலாம்.
ஆனாலும், மனதில் அந்த பிரிவு ஒரு வலியாக, காயமாக, தழும்பாக ஒவ்வொருவரிடமும் படிந்திருக்கும். அந்த நினைவுகளைத் திரும்பிப் பார்ப்பதென்பது இன்றைய வாழ்வின் மாற்றங்களை நமக்கு உணர்த்தும்.
‘தேவதாஸ்’ திரைப்படத்தை ரசிக்கும்போது இந்த உணர்வு மிக எளிதாக ஏற்படும்.
இத்திரைப்படத்துக்கு முன்னரும், பின்னரும் இந்தியா முழுக்கப் பல்வேறு மொழிகளில் தேவதாஸ் கதை படமாக்கப்பட்டது.
ஏன், பாகிஸ்தானிலும் வங்க தேசத்திலும் கூட இக்கதை திரையில் உருவெடுத்துள்ளது.
ஆனாலும் நாகேஸ்வர ராவ், சாவித்திரி, லலிதா ஆகியோர் தேவதாஸாகவும், பார்வதியாகவும், சந்திரமுகியாகவும் உருமாறியதை எதுவும் ஈடு செய்ய முடியாது என்பதே இதன் சிறப்பு.
இன்றும் கூட தேவதாஸ் கதை ‘ரீபூட்’ என்ற பெயரில் தற்கால மாற்றங்களுக்கு ஏற்ப உருப்பெறுவது தொடர்கிறது. ஆனால், அதன் அடிநாதமாக இருப்பது ஒன்றே ஒன்றுதான். அதன் பெயர் ‘காதல்’!
படத்தின் பெயர்: தேவதாஸ், தயாரிப்பு: டி.எல்.நாராயணா, திரைக்கதை, இயக்கம்: வேதாந்தம் ராகவய்யா, கதை: சரத் சந்திர சட்டோபாத்யாயா (நாவல்), வசனம்: உதயகுமார்.
கலை இயக்கம்: வாலி, கொட்காங்கர், இசை: சி.ஆர்.சுப்பராமன், பின்னணி இசை: விஸ்வநாதன் – ராமமூர்த்தி, பாடல்கள்: கே.டி.சந்தானம், உடுமலை நாராயணகவி.
ஒளிப்பதிவு: பி.எஸ்.ரங்கா, ஒலிப்பதிவு: கே.ராமச்சந்திரன், வெஸ்டர்ன் எலக்ட்ரிக், புராசசிங்: விக்ரம் ஸ்டூடியோஸ் அண்ட் லேபரட்டரிஸ், படத்தொகுப்பு: பி.வி.நாராயணன், ஸ்டூடியோ: ரேவதி ஸ்டூடியோ, நரசு ஸ்டூடியோஸ்
நடிப்பு: நாகேஸ்வர ராவ், சாவித்திரி, லலிதா, எம்.என்.நம்பியார், எஸ்.வி.ரங்காராவ், சுரபி கமலாபாய், துரைஸ்வாமி, சந்திரகுமாரி மற்றும் பலர்.
-உதய் பாடகலிங்கம்.