Take a fresh look at your lifestyle.

எகிறும் ‘கூலி’ படத்தின் எதிர்பார்ப்பு!

தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு என்பது எப்போதுமே அதனைச் சார்ந்தவர்களால் ஏற்படுத்தக்கூடியது. படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னரே, அது குறித்த எதிர்பார்ப்புகளை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்துகிற வேலைகள் தொடங்கிவிடும்.

சுவரொட்டிகள், கட் அவுட்கள், சுவர் விளம்பரங்கள், ரசிகர் மன்றங்களில் வழங்கப்படும் டிசர்ட்கள் தொடங்கிப் பலவிதங்களில் அந்த விளம்பரங்கள் இருக்கும். இன்று அந்த இடத்தை ஒட்டுமொத்தமாக சமூகவலைதளங்கள் பிடித்திருக்கின்றன.

பத்திரிகை பேட்டிகள், ப்ளோ அப்கள் மூலமாக உருவாக்கிப் பெரிதாக்கப்பட்ட நாயக நாயகியரின் பிம்பங்கள் இப்போது காணொளிகள், தகவல்கள், படம் சம்பந்தப்பட்ட புகைப்படங்களைப் பகிர்வதன் வழியே நிகழ்த்தப்படுகிறது. அவை ஒரு படத்தின் எதிர்பார்ப்பினை எகிற வைக்கத் துணை நிற்கின்றன.

அந்த வகையில், இப்போது ‘கூலி’ படம் குறித்த கருத்துகள் சமூகவலைதள வெளியெங்கும் கொட்டிக் கிடக்கின்றன.

அந்தப் படத்தில் சம்பந்தப்பட்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத், அதில் நடித்த நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், அமீர்கான் என்று ஒவ்வொருவரும் ஊடகங்களில் தங்களது அனுபவங்களை, அபிப்ராயங்களைப் பகிர்வதன் வழியே எதிர்பார்ப்பினை அதிகப்படுத்தி வருகின்றனர்.

அந்தப் பகிர்வின் முத்தாய்ப்பாக, ‘கூலி’ பட ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நிகழ்ச்சி விரைவில் சன் டிவியில் ஒளிபரப்பாகவிருக்கிறது.

எத்தனை பகுதிகளாக அது ஒளிபரப்பானாலும், அதன் நிறைவாக இடம்பெறுகிற ரஜினியின் பேச்சு ‘டிஆர்பி’யை அள்ளும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

திசை மாற்றும் போக்கு!

‘புவனா ஒரு கேள்விக்குறி’ படம் நடித்துக் கொண்டிருந்த நேரத்தில், மேடைப்பேச்சில் வெளுத்துக் கட்டியவர்களைப் பார்த்து மலைத்து நின்றவர் ரஜினிகாந்த். அந்த அளவுக்கு அவருக்கும் மேடைப்பேச்சிற்கும் இடையே தூரம் இருந்தது.

வில்லனாக நடித்து நாயகன் ஆகி இளைஞர்களைக் கவர்ந்த ரஜினிகாந்த், மெல்லக் குழந்தைகள், பெண்கள், முதியோர் என அனைத்து தரப்பினரையும் கவர்ந்திழுக்கும் காட்சிகளைத் தனது படங்களில் புகுத்துகிற லாவகத்தைக் கண்டறிந்தார். அதேபோன்று மேடைப்பேச்சிலும் மெல்ல வித்தகர் ஆனார்.

தனது படங்களின் ரசிகர்கள் யார் எனத் தெளிவாகக் கண்டறிந்தது போலவே, தான் பேசுகிற மேடைகளின் எதிரே அமர்ந்திருக்கிற பார்வையாளர்கள் எத்தகையவர்கள் என்பதை அறிந்து உரையாற்றுவதிலும் வல்லவர் ரஜினிகாந்த்.

கடந்த ஐந்தாண்டுகளில் அவர் பங்கேற்ற விழாக்களை யூடியூபில் கண்டு ரசித்தாலே போதும்; அதனை உணர்ந்து கொள்ள முடியும்.

‘தர்பார்’ பட விழாவில் தன்னை படப்பிடிப்புத்தளத்திற்கு வரவழைத்து அவமானப்படுத்திய தயாரிப்பாளரை வெற்றிகொள்ளும் வகையில் ஒரே ஆண்டில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த காரை வாங்கிய அனுபவத்தைப் பகிர்ந்தார் ரஜினிகாந்த்.

பெங்களூருவில் தான் முதன்முறையாக மேடையேறி நடித்து ரசிகர்களின், நண்பர்களின் கைத்தட்டல்களை அள்ளியதைப் பற்றிப் பேசியிருக்கிறார்.

மருத்துவத் துறை சம்பந்தப்பட்ட கூட்டமொன்றில் பேசியபோது, இளம் வயதில் எப்படியெல்லாம் உண்டு, மது அருந்தி வாழ்ந்தேன் என்பதையும் அதனால் வயதான காலத்தில் பட்ட அவஸ்தைகளையும் பற்றிப் பேசியிருக்கிறார்.

எதைப் பற்றிப் பேசினாலும், அதன் வழியே தனது ரசிகர்களை, அந்த உரையைக் கேட்பவர்களை ஈர்க்கிற வித்தையை முழுமையாக அறிந்து வைத்திருக்கிறார் ரஜினிகாந்த்.

சமீபத்தில் நடந்த ‘வேள்பாரி’ புத்தகத்தின் ஒரு லட்சம் பிரதிகள் விற்பனை சாதனைக்கான விழாவிலும் கூடப் பார்வையாளர்கள் கைத்தட்டல்களை அள்ளினார்.

‘பொன்னியின் செல்வன்’ முதல் பாக ஆடியோ விழாவின் போது ரஜினி பேசிய பேச்சு, அந்தப் படத்தின் டிக்கெட் விற்பனையை எகிற வைக்க உதவியாக இருந்தாகவும் ஒரு பேச்சு உண்டு.

அந்த அளவுக்கு ரஜினி அப்பட விழாக்களில் ஆற்றுகிற உரைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

ஏற்கனவே நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் தொடங்கி ரக்‌ஷிதா ராம், ரெபோ மோனிகா  எனப் பலரது இருப்பைக் கொண்டிருக்கும் ‘கூலி’ ரஜினியின் பேச்சால் மேலும் எதிர்பார்ப்பை எகிற  வைக்குமா எனத் தெரியவில்லை.

ஏனென்றால், இப்படம் ‘ஏ’ சான்றிதழைப் பெற்றிருக்கிறது. ரஜினியின் பேச்சைக் கேட்டுவிட்டு படத்திற்கு குடும்பத்தோடு வருபவர்களுக்கு அது பெருந்தடையாக அமையும். அதேநேரத்தில், சாதாரண ரசிகர்களைப் படத்தை காணச் செய்யும்விதமாகவும் அது நிச்சயம் இருக்கும்.

அந்த வகையில், ரஜினியின் ‘கூலி’ பேச்சு எத்தகைய விளைவை உண்டாக்கப் போகிறது என்பது இன்னும் சில தினங்களில் தெரியும்..!

– மாபா