“சினிமாவுலகம் எத்தனையோ அற்புதமான கலைஞர்களை, மனிதர்களை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறது.
அப்படிப்பட்ட அருமையான நடிகர்களில் ஒருவர் வி.கே.ராமசாமி.
பாய்ஸ் கம்பெனி காலத்து நடிகர். யாரையும் குறைத்துப் பேச மாட்டார். அவருக்கு என்னை மிகவும் பிடிக்கும்.
ஒரு படத்துக்கான ஷூட்டிங்கின் போது வயதில் சிறியவரான ஒரு புது நடிகர் செட்டுக்குள் நுழைந்ததும் “வாங்கண்ணே” என்று பெரிதாக குரல் கொடுத்தார் வி.கே.ஆர்.
அவர் கிளம்பினதும் “ஏன் சார்… அவரைப் போய் இவ்வளவு சீனியரான நீங்க ஏன் அண்ணன்னு சொல்றீங்க…” என்று கேட்டேன்.
“உங்களுக்கு என்ன? சினிமா இருக்கு… நாடகம் இருக்கு. டி.டி.கே. வேலை இருக்கு. பத்திரிகை இருக்கு. சினிமா இல்லாட்டி கூட நீங்க எங்கேயாவது போய்ப் பொழைச்சுக்கலாம்.
எனக்கெல்லாம் அப்படியா? சினிமாதான் பொழைப்பு. அதனாலே சினிமா இண்டஸ்ட்ரிலே எவ்வளவு சின்னவராக இருந்தாலும் எனக்கு அண்ணன்தான். யாரா இருந்தாலும் அண்ணே… வாங்கண்ணே தான்” சிரித்தபடியே சொன்னார் வி.கே.ஆர்.
‘நாம் இருவர்’ என்கிற மேடை நாடகத்தில் இவருக்கு அப்பா ரோல். அப்போது அவருக்கு வயது பதினெட்டு.
ஷூட்டிங்கின்போது இவர் போய் நின்றிருக்கிறார்.
“உன்னை இல்லப்பா நாடகத்தில் அப்பா ரோல் போட்டவரை கூப்பிட்டுட்டு இருக்கோம்…” என்றிருக்கிறார்கள்.
“இல்லை… நான்தாங்க அது…”
“நீயா நாடகத்தில் அப்பா ரோல் பண்ணினே?”
“ஆமாம்…” என்றதும் வி.கே.ஆரை அந்த ரோல் பண்ணச் சொல்லி இருக்கிறார்கள். இதைச் சொல்லிவிட்டு சிரிப்போடு அவர் சொன்னார், “அன்னைக்குத் தலைக்கு நரை பூச ஆரம்பித்தது இன்னும் விடலை.”
சர்வசாதாரணமாக ஜோக்குகளைச் சரளமாக சொல்வார் வி.கே.ஆர். ஸ்கிரிப்ட்டில் இல்லாததை எல்லாம் ஸ்பாட்டில் ரொம்பவும் லாவகமாக அந்தந்த இடத்தில் பேசுவார். நாம் ஷூட்டிங் ஸ்பாட்டில் அதை கவுன்டர் பண்ணி ஏதாவது பேசினால் ரசிப்பார். பாராட்டுவார்.
பார்த்தால் மிகவும் அலுப்புடன் அவர் பேசுகிற மாதிரி இருக்கும். ஆனால் அவர் பண்ணுகிற ரோலுக்கு நன்றாக எடுபடும். விதவிதமான ரோல்களை சாதாரணமாகப் பண்ணியிருக்கிறார். வில்லனாகவும் நடித்து இருக்கிறார். சொந்தமாக படமும் தயாரித்திருக்கிறார்.
சினிமா பத்திரிகை ஒன்றிற்காக வி.கே.ஆருடன் உரையாடும் சந்தர்ப்பம் அமைந்தபோது துக்ளக் அலுவலகத்திற்கு வந்திருந்தார் வி.கே.ஆர்.
வந்ததும் அவரை வரவேற்று நான் எப்போதும் அமர்கிற சேரில் அவரை உட்கார வைத்த பிறகே எங்களுக்கிடையிலான உரையாடல் துவங்கியது. என் மனதில் அவருக்கென்று இருந்த இடத்தின் அடையாளம் அது என்றும் சொல்லலாம்.
தங்கவேலு. தமிழ் சினிமாவில் காமெடி நடிப்பில் தனக்கென்று தனித்தன்மையை உருவாக்கியவர்.
டயலாக்கை அவர் டெலிவரி பண்ணுகிற விதம் அபாரமாக இருக்கும்.
வசனத்தில் நகைச்சுவை இல்லாவிட்டால் கூட அதை அவர் உச்சரிக்கிற விதத்தில் நகைச்சுவை பிரமாதப்படும். அவருக்கு சில விஷயங்களில் தீவிரமான நம்பிக்கை உண்டு. அதை அவருடைய இறுதிக்காலம் வரை கடைபிடித்தார்.
“நீ உருப்பட மாட்டே… நாசமா போயிடுவே…” என்கிற மாதிரியான டயலாக்குகள் படத்தில் வந்தால், அதை அவர் பேச மாட்டார், மறுத்துவிடுவார்.
‘கலாட்டா கல்யாணம்’ படத்தில் சிவாஜியிலிருந்து எல்லா கேரக்டர்களும் என்னைத் திட்டிக் கொண்டே இருப்பார்கள்.
தங்கவேலுவும் காட்சிப்படி என்னைத் திட்ட வேண்டும். திட்டும்போதுகூட “நீ நாசமா போயிடுவே…” என்கிற வார்த்தையை நான் சொல்ல மாட்டேன் என்று மறுத்து விட்டார்.
“எவன் வாயில் எந்த நேரத்தில் என்ன இருக்குமோ… அதைச் சொல்லக் கூடாது. தமிழில் ஒருத்தரை திட்ட இந்த இரண்டு வார்த்தைகள்தான் இருக்கா என்ன? வேறு ஏதாவது மாத்துங்க…”
காட்சி முடிந்ததும் அவரிடம் கேட்டேன்.
“இல்லை… நாம ஏதாவது ஒரு வார்த்தை சொல்லும்போது அது அந்த நேரத்தைப் பொறுத்துப் பலிச்சாலும் பலிச்சிடும்… இதுக்கு ஒருத்தர் முனிவரா இருக்க வேண்டிய அவசியமில்லை…
சாதாரண ஆள் கூட சொல்ற நேரத்தை பொறுத்துப் பலிச்சிடும். அதனால்தான் நான் அந்த மாதிரி வார்த்தைகளைப் பயன்படுத்துறது கிடையாது…” என்று சொல்லிவிட்டு ஒரு சம்பவத்தை விவரித்தார்.
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் குழுவில் இருந்தவர்தான் தங்கவேலு. அவருக்கு ஒரு முறை பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது என்.எஸ்.கே.யிடம் போய் உதவி கேட்டிருக்கிறார்.
போனதும் என்.எஸ்.கே தன்னுடைய சட்டைப் பையில் கையை விட்டு இருந்த பணத்தையெல்லாம் தங்கவேலுவிடம் கொடுத்து, “இந்தா என்கிட்ட இருந்த லட்சுமியை உன்கிட்டே கொடுத்திட்டேன்…” என்றிருக்கிறார்.
தங்கவேலுக்கு அதை வாங்கும்போதே சுருக்கென்றிருந்திருக்கிறது. இதை விவரித்துவிட்டு என்னிடம் கவலையோடு சொன்னார்.
“அன்னைக்கிருந்துதான் என்.எஸ்.கேயின் மார்க்கெட் இறங்க ஆரம்பிச்சது. என்னுடைய மார்க்கெட் உயர ஆரம்பிச்சது. அன்னைக்கு அந்த வார்த்தையை அவர் சொன்ன வேளை அப்படி… அதனால் யாரிடமும் அவநம்பிக்கையான வார்த்தைகளை உபயோகிப்பதைத் தவிர்க்கணும்.”
இப்படிப்பட்ட அவருக்கே ஒருநாள் விபரீத ஆசை வந்திருக்கிறது. ரூபாய் நோட்டைக் கட்டிலில் பரப்பி அதில் படுத்துக் கொள்ள வேண்டும் என்று.
“அப்போது எனக்கு இருந்த பாப்புலாரிட்டினாலே இந்த மாதிரி கூடாத எண்ணம் வந்திருக்கலாம். அப்படியே பண்ணவும் செஞ்சேன். அதிலிருந்தே என்னுடைய மார்க்கெட் இறங்க ஆரம்பிச்சது. இந்த மாதிரி எதையும் அலட்சியமா நினைக்கக் கூடாது.”
இந்தச் சமயத்தில் பீம்சிங்கின் உதவியாளர் சடகோபன் சொன்ன ஒரு விஷயத்தை இங்கு சொல்லவேண்டும். மெய்யப்பன் என்கிற படம் பல வருடக்கணக்கில் எடுக்கப்பட்டு கொண்டிருந்த நேரம்.
அதில் கே.ஆர்.ராமசாமி, “பாட மாட்டேன்… இனி நான் பாட மாட்டேன்…” என்று ஒரு பாடலின் பல்லவியைப் பாடும்போது சிலர் அந்த வார்த்தைகளை மாற்றிவிடலாம் என்றும் அறமிழந்த அந்த வார்த்தைகள் பாடலில் வரவேண்டாம்” என்றும் அவரிடம் சொல்லி இருக்கிறார்கள்.
கே.ஆர்.ராமசாமி திராவிட இயக்கத்துக்காரர். பகுத்தறிவுவாதி. வேஷம் போடுகிற பகுத்தறிவுவாதி அல்ல. உண்மையாகவே அப்படி இருந்தவர்.
அந்தப் பாடலைப் பாடுவதற்கு முன்னால் “இதில் எல்லாம் போய் பைத்தியக்காரத்தனமா நம்பிக்கை வச்சா… என்ன பண்றது? பாடப் போவது நான்தானே. எனக்கு ஆகிறது ஆகட்டும். நான் இதையே பாடுகிறேன்” என்று சொல்லி, “நான் பாட மாட்டேன்” பாடலை பாடியிருக்கிறார்.
அதுதான் கடைசியாக அவர் பாடிய பாட்டாம்.
தங்கவேலு சொன்ன எச்சரிக்கை உணர்வுடன் ஒப்பிடத் தூண்டுகிற விதத்தில் இருக்கிறது இந்தச் சம்பவம்.
வயதிலும் நடிப்பிலும் சீனியரான அவர் என்னைப் போன்றவர்களுடன் நடிக்கும்போது எந்த வயது வித்தியாசமும் தெரியாது. அந்த அளவிற்குப் பழகுவார். சரளமாகப் பேசுவார்.
இதே மாதிரி தன்னுடைய இறுதிக் காலம் வரை தான் நடிக்கும் படங்களில் ஆபாசமாகவும் இரட்டை அர்த்தம் வருகிற மாதிரி எந்த வசனத்தையும் பேச மாட்டேன் என்பதைக் கடைப்பிடித்தவர் தங்கவேலு.
அருமையான அந்தக் கலைஞர்கள் மறைந்து விட்டார்கள்.
அவர்கள் கடைப்பிடித்த பிடிவாதமான சில பண்புகள் இப்போதும் நினைவில் இருக்கின்றன.”
– மணா தொகுத்து எழுதிய சோ-வின் ‘ஒசாமஅசா’ நூலிலிருந்து.