Take a fresh look at your lifestyle.

விஜயகாந்த் பிறந்தநாளில் கேப்டன் பிரபாகரன் ரீரிலீஸ்!

500  தியேட்டர்களில் வெளியிடத் திட்டம்

திரைப்படக் கல்லூரி மாணவர்களின் ஆபத்பாந்தவன் ‘புரட்சிக் கலைஞர்’ விஜயகாந்த். சினிமா கல்லூரியில் இயக்குநர் பட்டம் முடித்து விட்டு வந்த இளைஞர்கள் பல முன்னணி நடிகர்கள் வீட்டுக் கதவைத் தட்டுவது வழக்கம். யாரும் திறப்பதில்லை.

ஆனால் அவர்கள் திறமை மேல் நம்பிக்கை வைத்து, கால்ஷீட் கொடுத்தவர் விஜயகாந்த் மட்டுமே.

அவரால் வாழ்வு பெற்ற இயக்குநர்களில் முதன்மையானவர் ஆர்.கே.செல்வமணி. இவர் இயக்கிய முதல் படம் ‘புலன் விசாரணை’. படம் பிரமாண்ட வெற்றி.

இதனால், தனது சொந்த தயாரிப்பில் மீண்டும் செல்வமணிக்கு வாய்ப்பு கொடுத்தார் விஜயகாந்த். அந்த படம்தான் ‘கேப்டன் பிரபாகரன்’.

1991 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 அன்று, தமிழ்ப் புத்தாண்டில் வெளியான படம். விஜயகாந்துக்கு ‘கேப்டன்’ என்கிற பெயரை பெற்றுதந்த படம்.

விஜயகாந்த் தவிர, சரத்குமார், ரூபிணி, ரம்யா கிருஷ்ணன், மன்சூர் அலிகான், லிவிங்ஸ்டன், காந்திமதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இளையராஜா இசை அமைத்திருந்தார்.

34 ஆண்டுகளுக்கு பிறகு, அடுத்த மாதம்  22 ஆம் தேதி விஜயகாந்த் பிறந்த நாளன்று ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தை பிரம்மாண்டமாக மறுவெளியீடு செய்ய திட்டமிட்டு உள்ளனர்.

‘கேப்டன் பிரபாகரன்’ படத்தின் மறுவெளியீட்டு உரிமையை ஸ்பேரோ சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. தமிழகம் முழுவதும் சுமார் 500 திரையரங்களில் வெளியிடத் திட்டமிட்டு இருக்கிறார்கள்.

– பாப்பாங்குளம் பாரதி.