தமிழ் திரையுலகைப் பொறுத்தவரை இது மோசமான ஆண்டு.
இந்த ஆண்டில் சுமார் 280 படங்கள் வெளியான நிலையில், அதில் 20 படங்கள்கூட தயாரிப்பாளர்களுக்கு லாபத்தைத் தரவில்லை என்று பாக்ஸ் ஆபீஸ் வாட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அந்த வகையில் இந்த ஆண்டு மட்டும் தமிழ் திரைத்துறையில் ஈடுபட்ட தயாரிப்பாளர்களுக்கு 2,000 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
தக் லைஃப், மதராஸி, விடாமுயற்சி, ரெட்ரோ, வீர தீர சூரன் என எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பல படங்கள் மண்ணைக் கவ்வின.
தமிழ் திரையுலகம் அதிக நஷ்டத்தைச் சந்தித்த இந்த ஆண்டில், வசூலில் ஓரளவு சாதனை படைத்த படங்களைப் பார்ப்போம்…
1. கூலி
சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இப்போது 75 வயது. அவர் திரையுலகுக்கு வந்து 50 ஆண்டுகள் 2025-ம் ஆண்டோடு நிறைவுபெற்றது.
இத்தனை வயதிலும் அவர்தான் இந்த ஆண்டும் தமிழ் சினிமா உலகை தூக்கிப் பிடித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ திரைப்படம்தான் இந்த ஆண்டில் வசூலில் நம்பர் 1 இடத்தைப் பிடித்து திரையரங்க உரிமையாளர்களுக்கு ஓரளவு லாபத்தைக் கொடுத்துள்ளது.
கூலி திரைப்படத்தின் மொத்த வசூல் 518 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.
இந்த வெற்றியின் முதல் தமிழகத்தில் இன்னும் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவராலும் ரசிக்கப்படும் நடிகர் தான்தான் என்பதை 75 வயதிலும் நிரூபித்திருக்கிறார் சூப்பர் ஸ்டார்.
2. குட் பேட் அக்லி
ரஜினியின் கூலி படத்துக்கு அடுத்தபடியாக திரையரங்குகளுக்கு அதிக ரசிகர்களை இழுத்த படம் அஜித் நடித்த ‘குட் பேட் அக்ளி’.
இந்த ஆண்டில் மொத்தம் 246.8 கோடி ரூபாயை ‘குட் பேட் அக்ளி’ வசூலித்துள்ளது.
இந்த படம் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தாலும், அதன் தயாரிப்பு செலவு சுமார் அதிகம் என்பதால் இப்படம் தயாரிப்பாளருக்கு நிஜமாகவே லாபம் பெற்றுத் தந்ததா என்பதுதான் முக்கிய கேள்வியாக உள்ளது.
3. டிராகன்:
தமிழ் திரையுலகின் முக்கிய நட்சத்திரமாக பிரதீப் ரங்கநாதன் இந்த ஆண்டு தன்னை நிலைநிறுத்திக் கொண்டார் என்றே சொல்லலாம்.
இந்த ஆண்டில் வசூலில் 3-வது இடத்தைப் பிடித்த படம் டிராகன். அதன் மொத்த வசூல் 154 கோடி ரூபாய்.
வசூலில் மூன்றாவது இடத்தில் இருந்தாலும் தயாரிப்பு செலவு குறைவு என்பதால் தயாரிப்பாளருக்கு அதிக லாபம் கொடுத்த படமாக டிராகன் பார்க்கப்படுகிறது.
4. குபேரா:
வசூலைப் பொறுத்தவரை இந்த ஆண்டில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ள படம் குபேரா.
தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா நடித்த இந்தத் திரைப்படம் 138.05 கோடி ரூபாயை வசூலித்தது.
ஆனால் வசூலில் 100 கோடி ரூபாயைத் தாண்டினாலும் தயாரிப்பு செலவு அதிகம் என்பதால் தயாரிப்பாளருக்கு லாபம் பெற்றுத் தந்ததா என்பதுதான் மிகப்பெரிய கேள்வி.
5. விடாமுயற்சி:
இந்த வரிசையில் அஜித் நடித்த விடாமுயற்சி திரைப்படம் 136.41 கோடி வசூல் செய்தாலும் அஜித்தின் சம்பளம் மற்றும் தயாரிப்புச் செலவு ஆகியவற்றை வைத்து பார்த்தால் விடாமுயற்சி திரைப்படமும் தோல்விப்படமாகவே பார்க்கப்படுகிறது.
வசூலில் முதல் 5 இடங்களைப் பிடிக்காவிட்டாலும் டூட், டூரிஸ்ட் ஃபேமிலி, தலைவன் தலைவி ஆகிய படங்கள் மினிமம் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு தயாரிப்பாளர்களுக்கு ஓரளவு லாபத்தைக் கொடுத்துள்ளது.
மற்றபடி பொதுவாக சினிமாவை நம்பி பணத்தைப் போட்ட தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்திய ஆண்டாகவே இது இருக்கிறது.
அடுத்த ஆண்டாவது தமிழ் திரையுலகம் ரசிகர்களை வாழ வைக்கட்டும்.
– பி.எம். சுதிர்