இசை என்பது பெருங்கடல். எத்தனையோ பேர் அதில் இறங்கி, முத்தெடுத்திருக்கிறார்கள். ஆனால், அவர்களில் பலரை நாம் நினைவு வைத்துக்கொள்வதே இல்லை. அவர்களைக் கொண்டாடுவதும் இல்லை.
குறைவான படங்களுக்கு இசையமைத்தாலும் நிறைவான பாடல்களைக் கொடுத்த டி.ஆர்.பாப்பா எனும் வயலின் மேதையை அவ்வளவு சுலபமாக எவரும் மறந்துவிடமுடியாது. தமிழ், தெலுங்கு, சிங்களப் படங்களுக்கெல்லாம் இசையமைத்த மாமேதை அவர்!
மிகப்பெரிய வயலின் வித்வானாகத் திகழ்ந்து, இசையமைப்பாளராக உயர்ந்தவர். திருத்துறைப்பூண்டிதான் சொந்த ஊர். அப்பா பெயர் ராதாகிருஷ்ணன். இவருடைய பெயர் சிவசங்கரன். ஆனால், ‘பாப்பா’ என்றுதான் அழைப்பார்கள். ஆகவே அவர் டி.ஆர்.பாப்பா என்றே அழைக்கப்பட்டார்.
இன்றைக்கு லட்சம் லட்சமாக பள்ளிக் கட்டணம் செலுத்துகிறோம். ஆனால், அன்றைக்கு நாலே நாலு ரூபாய் இல்லாததால், டி.ஆர்.பாப்பாவின் படிப்பு தடைப்பட்டது. அப்பாவும் வயலின் கலைஞர்.
வருடம் தவறாமல், திருவையாறு தியாகராஜர் உற்சவத்துக்கு பையனையும் அழைத்துச் சென்றுவிடுவார் அப்பா.
கும்பகோணம் சிவனடிப் பிள்ளை பெரிய வயலின் வித்வான். “உன் பையனை எங்கிட்ட அனுப்பு. நான் பாத்துக்கறேன்” என்று கேட்க, அப்பாவும் சம்மதித்தார். அப்படித்தான் டி.ஆர்.பாப்பாவை இசை இழுத்துக்கொண்டது.
சிவனடிப்பிள்ளை சினிமாக்களுக்கு வாத்தியங்கள் இசைப்பவர். 1936-ம் ஆண்டு வந்த ‘வேலு சீமந்தினி’, ‘பார்வதி கல்யாணம்’ முதலான படங்களுக்கு பிடில் வாசித்தார். அப்போது பாப்பாவும் உடன் செல்வார்.
1938-ம் ஆண்டு வயலினில் தனிக் கச்சேரி செய்தார் பாப்பா. இதற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து, திரைப்படங்களுக்கு வாத்தியங்கள் இசைக்கும் பணியில் இறங்கினார்.
எஸ்.ஜி.கிட்டப்பாவின் அண்ணன் காசி ஐயர் இசையமைப்பாளர். அவர் பாடலின் இணைப்பு இசைப்பணிகள், பின்னணி இசைக் கோர்ப்புகள் என சொல்லச் சொல்ல அவற்றுக்கான ஸ்வரங்களை குறிப்பு எடுத்துக்கொண்டு எல்லா வாத்தியக்காரர்களுக்கும் கொடுக்கும் வேலையையும் செய்தார் பாப்பா.
இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிக்கொண்டே இருந்தவர், ஒருகட்டத்தில் படத்துக்கு இசையமைக்கவும் செய்தார்.
சிட்டாடல் பிலிம்ஸ் அதிபர் ஜோஸப் தளியத் மிகப்பெரிய ஜாம்பவான். மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் முதலான எண்ணற்றவர்களை அறிமுகப்படுத்தியவர்.
மலையாளப் படமான ‘ஆத்மகாந்தி’ என்ற படத்துக்கு இசையமைத்த டி.ஆர்.பாப்பாவை, தமிழுக்குக் கொண்டு வந்தார் ஜோஸப் தளியத்.
’’உங்களுடைய படத்துக்கு கதாநாயகன் யார்?’’ என்று ஜோஸப் தளியத்திடம் நிருபர்கள் கேட்டதற்கு, ‘’என்னுடைய படங்களுக்கெல்லாம் இசையமைப்பாளர் டி.ஆர்.பாப்பாதான் கதாநாயகன்’’ என்று பெருமிதம் பொங்கச் சொன்னார் ஜோஸப் தளியத்.
அந்த அளவுக்கு டி.ஆர்.பாப்பாவின் மீதும் அவரின் இசை மீதும் அளப்பரிய காதலும் மரியாதையும் கொண்டிருந்தார் தளியத். இதற்கெல்லாம் பாப்பாவின் தனித்துவமான இசையே காரணம்.
சிவாஜி நடித்த ‘அன்பு’ என்ற படம். டி.ஆர்.பாப்பாதான் இசை. ‘என்ன என்ன இன்பமே வாழ்விலே எந்நாளும்’’ என்ற பாடல் ஒலிப்பதிவு நடைபெற்றது.
ஜிக்கியும் ராஜாவும் பாடுவதற்குத் தயாராக இருந்தார்கள். சிவாஜி கணேசன் அங்கே வந்தார். பாடலைக் கேட்டுவிட்டார். ‘அண்ணே… பாட்டோட ஆரம்பத்துல பியானோ வாசிக்கிறாப்ல சேத்துக்கிட்டா நல்லாருக்கும்.
ஏன்னா, நான் பியானோ வாசிக்கிறேன் படத்துல…’’ என்று சொல்ல, “அப்படியே செஞ்சிருவோம்” என்று உடனே ஆரம்ப இசையைக் கொண்டுவந்து, பியானோ இசையையும் தவழவிட்டார் டி.ஆர்.பாப்பா.
‘மாப்பிள்ளை’, ‘அம்மையப்பன்’, ‘ரம்பையின் காதல்’, ‘ராஜாராணி’, ‘தாய் மகளுக்கு கட்டிய தாலி’, ‘குறவஞ்சி’, ‘நல்லவன் வாழ்வான்’, ‘குமாரராஜா’, ‘விஜயபுரி வீரன்’ ‘அருணகிரிநாதர்’, ‘இரவும் பகலும்’, ‘எதையும் தாங்கும் இதயம்’, ‘வைரம்’, ‘அவசரக் கல்யாணம்’, ’வாயில்லாப்பூச்சி’ என்று ஏகப்பட்ட படங்களுக்கு இசையமைத்து எண்ணற்ற ஹிட் பாடல்களைக் கொடுத்திருக்கிறார் பாப்பா.
’முத்தைத்தரு பத்தித் திருநகை / அத்திக்கிறை சத்திச் சரவண / முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்…’ என்ற பாடலை இசையாகக் கொடுத்து உருகவைத்தார்.
’சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை இடை உடுத்தி / சிவகங்கை குளத்தருகே ஸ்ரீதுர்கை சிரித்திருப்பாள்/ பெண்ணவளின் கண்ணழகை பேசி முடியாது / பேரழகுக் கீடாக வேறொன்றும் கிடையாது
மின்னலைப் போல் மேனி அன்னை சிவகாமி/ இன்பமெல்லாம் தருவாள் எண்ணமெல்லாம் நிறைவாள் / பின்னல் சடை போட்டு பிச்சிப்பூ சூடிடுவாள் / பித்தனுக்கு இணையாக நர்த்தனம் ஆடிடுவாள்’ என்ற பாடலின் மூலம் அம்பாளையே கனிந்துருகச் செய்தார்.
உளுந்தூர்பேட்டை சண்முகம் எழுதிய இந்தப் பாடலும் சீர்காழி கோவிந்தராஜனின் கொஞ்சும் குரலும் டி.ஆர். பாப்பாவின் தெய்வீக இசையும் கேட்கக் கேட்க இனிக்கும்.
‘வைரம்’ படத்தில் ‘இரு மாங்கனி போல் இதழோரம்’ என்ற பாடலை எஸ்.பி.பி.யையும் ஜெயலலிதாவையும் பாடவைத்தார் பாப்பா.
பாடி முடித்து வந்ததும் “என் வாழ்க்கைல மறக்கமுடியாத பாட்டா இது அமைஞ்சிருச்சு. எனக்கே நான் பாடினது பிடிச்சிருக்கு. ரொம்ப நன்றி” என நெகிழ்ந்துவிட்டாராம் ஜெயலலிதா.
‘ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்’ என்ற பாடலும் நம்மை அப்படியே அள்ளிக்கொள்ளும்.
ஜெய்சங்கரும் ஜெயலலிதாவும் நடித்த ’வைரம்’ படத்தில், ’இரவும் வரும் பகலும் வரும் உலகம் ஒன்றுதான்’ என்ற பாடல் இவரின் இசையால் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
’வருவேன் நான் உனது வாசலுக்கே’ என்ற பாடல் ‘மல்லிகா’ படத்தில் இடம்பெற்றது. படத்தை மறந்தாலும் பாடலை மறக்கவே இல்லை ரசிகர்கள்.
’உள்ளத்தின் கதவுகள் கண்களடா / இங்கே உறவுக்கு காரணம் பெண்களடா/ உள்ளத்தை ஒருத்திக்கு கொடுத்துவிடு / அந்த ஒருத்தியை உயிராய் மதித்து விடு’ என்று காதல் இலக்கணம் சொல்லியிருக்கும் பாடலைப் பாடித் தவிக்காதவர்களே இல்லை.
’காதல் என்பது தேன் கூடு / அதை கட்டுவதென்றால் பெரும்பாடு / காலம் நினைத்தால் கைகூடும் / அது கனவாய் போனால் மனம் வாடும்’ என்று மெல்லிய இசையை மயிலிறகு வருடலில் பாட்டுடன் கலந்து கொடுத்து, நமக்கு இதம் தந்திருப்பார் இசையமைப்பாளர் டி.ஆர்.பாப்பா.
’குத்தாலம் அருவியிலே குளிச்சது போல் இருக்குதா’ என்கிற எம்.ஜி.ஆர் பாடலுக்கு இசையும் இவர்தான்.
’ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே’ என்ற ‘குமாரராஜா’ படத்தின் பாடலை சந்திரபாபு பாடினார்.
’கண்ணான தந்தையைக் கண்ணீரில் தள்ளினேன் / கண்ணாடி வளையலைப் பொன்னாக எண்ணினேன் / பெண்ணாசை வெறியிலே தன் மானம் தெரியல்லே / என்னைப் போலே ஏமாளி எவனும் இல்லே / ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே’ என்ற பாடலையும் இசையையும் கேட்டுத்தான் உலகத்தை ஓரளவேனும் புரிந்துகொண்டோம்.
இப்படி இசை வழியே ஒத்தடம் கொடுத்திருப்பார் டி.ஆர்.பாப்பா.
1923-ம் ஆண்டு ஜூலை 3-ம் தேதி பிறந்த டி.ஆர்.பாப்பா, 2004-ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதி, 81-வது வயதில் மறைந்தார்.
‘பெருமை வரும் சிறுமை வரும் பிறவி ஒன்றுதான் / பிறவி ஒன்றுதான் / வறுமை வரும் செழுமை வரும் வாழ்க்கை ஒன்றுதான் / வாழ்க்கை ஒன்றுதான்’
’இளமை வரும் முதுமை வரும் உடலுமொன்றுதான் / உடலும் ஒன்றுதான் / தனிமை வரும் துணையும் வரும் பயணம் ஒன்றுதான் / பயணம் ஒன்றுதான்’ என்ற பாடலை எங்கோ, யாரோ கேட்டு ஆறுதல் தேடிக்கொண்டிருக்கும் வரை,
’சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை இடை உடுத்தி / சிவகங்கை குளத்தருகே ஸ்ரீதுர்கை சிரித்திருப்பாள் / பெண்ணவளின் கண்ணழகை பேசி முடியாது / பேரழகுக்கீடாக வேறொன்றும் கிடையாது’ என்று ஆலயங்களிலும் கச்சேரிகளிலும் மிகப்பெரிய இசைக்கலைஞர்கள் இந்தப் பாடலைப் பாடி கரவொலிகளை வாங்கிக் கொண்டிருக்கும் வரை, இசைமாமேதை டி.ஆர்.பாப்பாவுக்கு மரணமேது?
– வி.ராம்ஜி.
நன்றி: காமதேனு