Take a fresh look at your lifestyle.

இன்றைய தேதியில் வெளியான திரைப்படங்கள்!

மார்ச் 3 இந்த தேதியில் எந்தெந்த ஆண்டுகளில் என்னென்ன படங்கள் வெளியாகின என்று பார்க்கலாமா?

குற்றம் 23 – ‘ஈரம்’, ‘வல்லினம்’ படங்கள் தந்த அறிவழகன் இதனை இயக்கியிருந்தார். அருண் விஜய், மஹிமா நம்பியார், அமித் பார்கவ், அபிநயா, நீலிமா ராணி, சுஜா வாருணீ, வம்சி கிருஷ்ணா, அரவிந்த் ஆகாஷ், அமித் பார்கவ் உள்ளிட்ட பலர் இதில் நடித்திருந்தனர்.

விஷால் சந்திரசேகர் இதற்கு இசையமைத்திருந்தார். ராஜேஷ்குமார் எழுதிய ‘எண்ணி எட்டாவது நாள்’ நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவான இப்படம், செயற்கைக் கருவுறுதல் நுட்பத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மோசடிகள் பற்றிப் பேசியது இப்படம். அந்தக் காரணத்தாலேயே ஓரளவு கவனிப்பையும் பெற்றது. இது 2017ஆம் ஆண்டு வெளியானது.

முப்பரிமாணம் – அதிரூபன் இயக்கிய இப்படத்தில் சாந்தனு, ஸ்ருஷ்டி டாங்கே, ஸ்கந்தா அசோக், தம்பி ராமையா, ப்ளோரண்ட் பெரைரா, அப்புகுட்டி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இதற்கு இசையமைத்திருந்தார்.

‘சொக்கிப் போறான்டி’, ‘கண்ணோடு கண்ணோடு’ பாடல்களோடு, படத்தை விளம்பரப்படுத்தும் வகையில் தமிழ் திரையுலகைச் சேர்ந்த பல நடிகர் நடிகைகள் பங்கேற்ற ‘லெட்ஸ் கோ பார்ட்டி’யும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இது 2017ஆம் ஆண்டு வெளியானது.

யாக்கை – 2017ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் கிருஷ்ணா, ‘சுப்பிரமணியபுரம்’ சுவாதி, பிரகாஷ் ராஜ், ராதா ரவி, குரு சோமசுந்தரம், எம்.எஸ்.பாஸ்கர், மாரிமுத்து உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைத்திருந்தார்.

தனுஷ் பாடிய ‘சொல்லித் தொலையேன்மா’ பாடல் ஹைலைட்டாக அமைந்தது. மருத்துவ மாபியாவில் நிகழ்த்தப்படும் உடலுறுப்பு திருட்டு குறித்துப் பேசிய இப்படத்தை குழந்தை வேலப்பன் இயக்கியிருந்தார்.

சின்னமணி – எம்.திலகராஜன் இயக்கிய இப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். நெப்போலியன், கஸ்தூரி, ஆர்.பி.விஸ்வம், ஸ்ரீவித்யா, அனுராதா, எஸ்.எஸ்.சந்திரன், வடிவேலு, அனுஷா, ராகவி உள்ளிட்ட பலர் இதில் நடித்தனர். இது 1995ஆம் ஆண்டு வெளியானது.

மனதிலே ஒரு பாட்டு – விக்னேஷ், சாரதாப்ரீதா, சுக்ரன், ரகுவரன், வெண்ணிற ஆடை மூர்த்தி, சங்கீதா உள்ளிட்ட பலர் நடித்த இப்படத்தை ஞானமொழி இயக்கினார்.

இது 1995ஆம் ஆண்டு வெளியானது. இதற்கு இசையமைத்தவர் இளையகங்கை. இவர், இளையராஜாவின் சகோதரர் பாவலர் வரதராஜனின் மூத்த மகன்.

புதிய ஆட்சி – வேலு பிரபாகரன் இயக்கிய இந்தப் படத்திற்கு பிரேமி – ஸ்ரீனி மற்றும் மண்ணச்சநல்லூர் கிரிதரன் ஆகியோர் பாடல்களுக்கு இசையமைத்தனர். ஷ்யாம் பின்னணி இசை தந்தார். ஆனந்தராஜ், சரத்பாபு, ராதிகா, ராதாரவி, எஸ்.எஸ்.சந்திரன் உள்ளிட்ட பலர் இதில் நடித்திருந்தனர். இது 1995ஆம் ஆண்டு வெளியானது.

கல்யாணம் – 1995இல் வெளியான இப்படத்தில் விஷ்ணு, வினோதினி ஆகியோர் ஜோடியாக நடித்தனர். ஆர்.நாராயணன் இதனை இயக்கினார்.

நவாப் நாற்காலி – கோமல் சுவாமிநாதன் எழுதிய நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான இப்படத்தை சி.வி.ராஜேந்திரன் இயக்கினார். ஜெய்சங்கர், லட்சுமி, ரமாபிரபா, நாகேஷ், வி.எஸ்.ராகவன், எஸ்.வி.சகஸ்ரநாமம், காந்திமதி, வி.கே.ராமசாமி, எஸ்.என்.பார்வதி உட்படப் பலர் நடித்தனர்.

எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘சப்பாத்தி சப்பாத்தி தான் ரொட்டி ரொட்டிதான்’ பாடல் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றது.

தாசிப்பெண் அல்லது ஜோதிமலர் – 1943ஆம் ஆண்டு வெளியான இப்படத்தை இயக்கியவர் எல்லீஸ் ஆர்.டங்கன். பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படத்தில் டி.ஆர்.மகாலிங்கம், பாலசரஸ்வதி, எம்.ஆர். சந்தானலட்சுமி, என்.எஸ். கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், புளிமூட்டை ராமசாமியோடு எம்ஜிஆரும் நடித்திருந்தார்.

லலிதா வெங்கட்ராமன், எஸ்.ராஜேஸ்வர ராவ் ஆகியோர் இசையமைப்பில் இப்படத்தில் 30க்கும் மேற்பட்ட பாடல்கள் இடம்பெற்றன.

மேற்சொன்ன படங்களில் குற்றம் 23, நவாப் நாற்காலி ஆகியன ரசிகர்களிடையே ஓரளவு வரவேற்பைப் பெற்றன.

இதே தேதியில் வெளியாகி, மேற்கண்ட பட்டியலில் விடுபட்ட படங்களின் விவரங்களை எங்களுக்கு மின்னஞ்சலில் பகிரலாம். editorialthaaii@gmail.com