Take a fresh look at your lifestyle.

எம்.ஜி.ஆரின் நுட்பத்தை வெளிக்கொணர்ந்த படங்கள்!

1967க்குப் பின், அதாவது ஐம்பது வயதுக்குப் பின் எம்.ஜி.ஆர். சுமார் 45 படங்களில் நடித்திருக்கிறார்.

1963லிருந்தே எம்.ஜி.ஆரின் சினிமா வரைபடம் மேல்நோக்கியே ஏறத் தொடங்கி விட்டது. அந்த வருடம் அதிகமாக 9 படங்கள் வந்தன.

அதை ஆரம்பித்து வைத்தது ‘பணத்தோட்டம்’. அண்ணா எழுதிய கட்டுரைகளின் தலைப்பு. அத்தோடு பணமும் புகழும் ஏராளமாக எம்.ஜி.ஆரை வந்தடைந்தது.

1965இல் வெளியான ‘எங்க வீட்டுப் பிள்ளை’ அவரது ரசிகர்களின் எண்ணிக்கையை பன்மடங்காக்கிற்று.

“நான் ஆணையிட்டால்…” என்ற ஒரு பாடல் அவரையும் கட்சியையும் பட்டி தொட்டியெல்லாம் வேகமாகப் பரப்பியது.

1966-ல் மீண்டும் 9 படங்கள். அநேகமாக அவரை வைத்துப் படம் எடுக்காத தயாரிப்பாளர்கள் எல்லோரும் அவர் முகாமிற்கு வந்து விட்டார்கள்.

1967-ம் ஆண்டு மே 19-ம் தேதி வெளியான ‘அரச கட்டளை’ படம், 10 வாரங்கள் ஓடின. எம்.ஜி.ஆர் – பி.எஸ்.வீரப்பா, எம்.ஜி.ஆர். – அசோகன் ஆகியோருக்கு இடையேயான வாள் சண்டைகள் பேசப்பட்டன. 

‘அரச கட்டளை’ படத்தின் ஒரு காட்சியில் பெருங்கோபத்துடன் தன்னைத் தாக்க வரும் நம்பியாரிடம் சண்டை போடுவதற்கு முன் தனக்கே உரிய நம்பிக்கைப் புன்னகையுடன் அலட்டிக்கொள்லாமல் எம்.ஜி.ஆர். பேசும் விதம் அவரது நிதானமான, அழுத்தமான நடிப்பைப் பறைசாற்றும்.

நம்பியாரின் வாள் எம்.ஜி.ஆரின் மார்புக்கு அருகே நீண்டிருக்கும். “உன் உயிரைப் பறிப்பேன்” என்று கண்களை உருட்டி நம்பியார் மிரட்டுவார்.

அப்போதும் அதே புன்னகையுடன் “செடியில் பூத்த மலரல்ல பெரியவரே என் உயிர்…” என்று சொல்லிச் சிறிய இடைவெளி விடுவார்.

புன்னகை மறையும். முகம் சற்றே தீவிரம் கொள்ளும்.

“… நீங்கள் நினைத்தவுடன் கை நீட்டிப் பறிப்பதற்கு” என்பார். அப்போது கை உடைவாளைப் பற்றியிருக்கும். அதன் பிறகு வாய்ப்பேச்சுக்கு வேலை இருக்காது.

இதேபோல் எம்.ஜி.ஆர். வீரப்பா நடித்த மற்றொரு படமான ‘மகாதேவி’ படத்தில் தன் தளபதி வீரப்பாவின் நிஜமுகம் தெரியும் கணத்தில், எம்.ஜி.ஆர். தன் கண்களின் சலனத்தில் அந்த பிரக்ஞையை வெளிப்படுத்துவார்.

எம்.ஜி.ஆரின் நுட்பமான நடிப்பு வெளிப்படும் இடங்கள் இவை.