Take a fresh look at your lifestyle.

எம்.ஜி.ஆரின் யுக்தியால் வெற்றியடைந்த படம்!

தொடர்ச்சியாய் வெள்ளிவிழா படங்கள் கொடுத்த இயக்குநர் ஸ்ரீதர், ஒரு கட்டத்தில் சிக்கலுக்கு ஆளானார். அவர் தயாரித்து, இயக்கிய படங்கள் எல்லாம் தோல்வி கண்டன. நிதி நெருக்கடியால் தவித்தார்.

கடனில் இருந்து விடுபட, எம்.ஜி.ஆர் உதவுவார் என சினிமா நண்பர்கள் சொன்னார்கள். இயக்குநர் பி.வாசுவின் தந்தை பீதாம்பரம் மூலம் புரட்சித்தலைவரிடம் தொடர்பு கொண்டார், ஸ்ரீதர்.

பீதாம்பரம், எம்.ஜி.ஆரின் ஆஸ்தான மேக்கப் மேன். எம்.ஜி.ஆர். தோட்டத்தில் தலைவரை ஸ்ரீதர் சந்தித்தார். காலை உணவு சாப்பிட்டார்கள்.

‘நான் ஸ்ரீதருக்கு ஒரு படம் நடித்துக்கொடுக்க ஒப்புதல் அளிக்கிறேன். அவரது படத்துக்கு முன் உரிமை அளித்து மூன்று மாதங்களில் அந்த படத்தை முடித்து கொடுப்பேன்’ என எம்.ஜி.ஆர். கையெழுத்து போட்டு ஸ்ரீதரிடம் கடிதம் கொடுத்தார். ஸ்ரீதர் விக்கித்து போனார்.

‘நீங்கள் சொன்னால் போதாதா? கையெழுத்து போட்டு கடிதம் தர வேண்டுமா?’ என ஸ்ரீதர் கேட்டார். ‘இது பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகப்போகும் படம் – நிறையவே பணம் தேவைப்படும்.

உங்களிடம் அவ்வளவு பணம் இருக்கிறதா என எனக்கு தெரியாது. நீங்கள் பணத்துக்கு சிரமப்படக்கூடாது.

இந்த கடிதத்தை காட்டினால் பைனான்சியர்கள் தாராளமாக பணம் தருவார்கள்’ என மக்கள் திலகம் புன்முறுவலுடன் சொன்னார்.

தகவல் கோடம்பாக்கம் முழுக்க கசிந்தது. யாசின் எனும் பைனான்சியர், ஸ்ரீதரை சந்தித்தார்.

படத்துக்கு பைனான்ஸ் செய்ததோடு சில ஏரியாக்கள் உரிமையையும் வாங்கினார்.

எம்.ஜி.ஆர். தோட்டத்துக்கு பக்கத்தில் உள்ள கிராமத்தில் அரங்கம் அமைத்து, ஷுட்டிங் நடந்தது.

படத்துக்கு ‘உரிமைக்குரல்’ என பெயர் வைக்கப்பட்டது. ஸ்ரீதர் படத்துக்கு வழக்கமாக எம்.எஸ்.விசுவநாதன் இசை அமைப்பார். கண்ணதாசன் பாடல் எழுதுவார்.

அப்போது தலைவருக்கும், கண்ணதாசனுக்கும் இடையே சுமுக உறவு கிடையாது. எம்.ஜி.ஆரிடம், ரொம்ப தயக்கமாக ‘இந்த படத்தில் கண்ணதாசனை ஒரு பாடல் எழுத வைக்கலாம் என நினைத்துள்ளேன். உங்கள் அனுமதி வேண்டும்’ என்றார், ஸ்ரீதர்.

எம்.ஜி.ஆர். சம்மதம் கொடுத்து விட்டார். கண்ணதாசனும் பாடல் எழுதி கொடுத்து விட்டார். ‘விழியே கதை எழுது.. கண்ணீரில் எழுதாதே’.

பாடல் எழுதிய கண்ணதாசன் கைகள், எம்.ஜி.ஆரை விமர்சித்து பத்திரிகை ஒன்றில் கட்டுரை எழுத, அது சர்ச்சை ஆனது. விநியோகஸ்தர்கள், ஸ்ரீதரை சந்தித்து, ‘இந்தப்பாடல் ‘உரிமைக்குரல்’ படத்தில் வேண்டாம்.

வேறு படத்தில் பயன் படுத்திக்கொள்ளுங்கள், வேறு கவிஞரை வைத்து பாடல் எழுதி படத்தில் சேருங்கள்’ என கோரசாக சொல்ல, வாலியை அழைத்து பாடல் எழுத வைத்தார், ஸ்ரீதர்.

எம்.ஜிஆர். கவனத்துக்கு விஷயம் போனது. ‘கண்ணதாசன் பாடல் அருமையாக உள்ளது. அதனை படத்தில் பயன் படுத்திக்கொள்ளுங்கள். பெரிய அளவில் ஹிட் ஆகும்’ என ஸ்ரீதரிடம் சொல்லி விட்டார், எம்.ஜி.ஆர். ஸ்ரீதருக்கு நிம்மதி.

முதலில் இந்தப் பாடல், கனவுப்பாடலாக பிரமாண்ட செட் போட்டு எடுக்கப்படவில்லை. கதாநாயகி லதாவுக்கு வேறு இடத்தில் திருமணம் நிச்சயம் ஆகி விட்ட சூழலில் அவரும், எம்.ஜி.ஆரும் மணல் திட்டில் சந்திக்கிறார்கள்.

அப்போது இருவர் கண்களும் சந்தித்துக்கொள்ள, ‘விழியே கதை எழுது’ பாடல் ஓடுகிறது. இருவரும் வாய் அசைக்கவில்லை.

இருவரது குளோஸ் அப், லாங் ஷாட், மரங்கள், ஆற்று மணல், ஆகாயம் என காமிராவில் படம் பிடித்து பாடலை முடிக்கிறார், ஸ்ரீதர்.

அந்த பாடல் படமாக்கப்பட்ட விதத்தை எம்.ஜி.ஆர். பாராட்ட, விநியோகஸ்தர்கள் ‘அப்செட்’.

‘படத்தில் தலைவருக்கு கனவு காட்சி இல்லையே.. கண்டிப்பாக படத்தில் கனவு காட்சி வேண்டும்’ என விநியோகஸ்தர்கள் போர்க்குரல் எழுப்ப, எம்.ஜி.ஆரிடம் விஷயத்தை சொன்னார், ஸ்ரீதர்.

‘நீங்கள் தான் டைரக்டர். உங்கள் முடிவே எனது முடிவு. எனது படத்தில் கனவு காட்சி இருந்தே தீர வேண்டும் என அவசியம் இல்லை’ என சொல்லி விட்டார், எம்.ஜிஆர்.

ஆனாலும் விநியோகஸ்தர்கள் திருப்திக்காக, ‘விழியே கதை எழுது’ பாடல் பிரமாண்ட அரங்கம் அமைத்து கனவு காட்சியாக மீண்டும் ஷுட் செய்யப்பட்டது.

எம்.ஜி.ஆர். கனவு பாடல்களில், ‘நினைத்தேன் வந்தாய் நூறு வயது’ ‘அழகிய தமிழ் மகன் இவன்’ ‘பச்சைக்கிளி முத்துசரம்’ வரிசையில் ‘விழியே கதை எழுது’ சேர்ந்த கதை இது.

1974 ஆண்டு நவம்பர் மாதம் 7-ம் தேதி வெளியான ‘உரிமைக்குரல்’ அதிரிபுதிரி வெற்றியைப் பெற்றது.

அப்போது ‘பி’ சென்டராக இருந்த நெல்லையில் 200 நாட்கள் ஓடியது, உரிமைக்குரல். உபயம், ‘விழியே கதை எழுது’.

– பாப்பாங்குளம் பாரதி.