நூல் வாசிப்பு: கொங்கு தேன்
*
திரைக்கலைஞர் சிவகுமாரின் பால்ய காலம் துவங்கி ஓவியம், திரைத்துறை வாழ்க்கை வரை அனுபவங்களாக விரியும் நூல்.
டைரிக் குறிப்புகளில் இருக்கும் நெருக்கம் தெரிகிறது இந்த அனுபவ விவரிப்பில், கோவை மாவட்டத்தில் சூலூருக்குப் பக்கத்தில் இருக்கிற காசி கவுண்டன் புதூர் கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்து, தாயின் அரவணைப்பில் கண்டிப்புடன் வளர்க்கப்பட்ட இவருக்குக் கூர்மையான அவதானிப்பு இயல்பிலேயே இருந்திருக்கிறது.
அதுவே ஓவியம் வரைவதில் துவங்கி, சுற்றி இருக்கும் முகங்களை, அவர்களது உடல் மொழியைக் கவனிப்பதிலிருந்து, மனதில் சித்திரத்தைப் போலப் பதிய வைத்துக் கொள்வது வரை நீண்டிருக்கிறது.
சிறுவயது முதல் சிறுவாணி நீரைப் போல ஒட்டி உறவாடிய கொங்கு மண்ணுக்கே உரித்தான மொழியுடன் சொல்லப்பட்டிருக்கும் அனுபவங்கள் ஏராளம்.
சிறு வயதிலேயே தான் குறித்த தேதியில் இறந்து போன தந்தை, பிளேக் நோய் தாக்கி இளம் வயதில் மறைந்து போன அண்ணன், காடு கழனிக்குப் போய்க் கஷ்டப்பட்டு வளர்த்த எளிமையான தாய், படித்த திண்ணைப் பள்ளிக்கூடம், கிடைத்த ஆசிரியர்கள், கை கொடுத்த உறவினர்கள்,
படித்தபோது பள்ளியில் எடுத்த குரூப் போட்டோ வரிசையில் நிற்க ஐந்து ரூபாய் கொடுக்க முடியாத நிலையில், காலத்தின் இன்னொரு அடுக்கில் அதே பள்ளிக்கு உதவி பண்ணி, முதிர்ந்த அந்தக் கால மாணவர்களை ஒன்று சேர்த்து புகைப்படம் எடுத்த அனுபவம், ஓவியக் கல்லூரி கொடுத்த மறக்க முடியாத வாழ்க்கை,
திரைத்துறையில் நுழைந்த போது கை கொடுத்துத் தூக்கி விட்ட மனிதர்கள் என்று நூல் முழுக்கக் கொங்கு மொழியில் எழுதப்பட்டிருப்பதை வாசிக்கும் போது, காதில் சிவகுமாரின் கொங்கு மொழி ஏற்ற இறக்கத்துடன் காதில் விழுவதைப் போலிருக்கிறது.
காலம் சலித்துக் கொடுத்து நினைவில் இருத்திய மனிதர்களில் பிரபலங்களும் இருக்கிறார்கள். குமரேசன் போன்ற அன்பு காட்டிய எளிய மனிதர்களும் இருக்கிறார்கள்.
ஓவியத்தில், நடிப்பில், பேச்சில் திரைக்கலைஞரான சிவகுமார் காட்டிய கவனமும், சிரத்தையும் எழுத்திலும் தெரிகின்றன. வாசிப்பு அனுபவத்தை ரசனையுள்ளதாக மாற்றுகின்றன.
இந்து தமிழ் திசை பதிப்பகம் வெளியிட்டிருக்கும் இந்த நூல் சிவகுமாரின் சொற்களிலேயே சொன்னால் கொங்கு மண்ணில் போடப்பட்ட இன்னொரு ‘ராஜ பாட்டை’ நூலில் எம்.ஜி.ஆரைப் பற்றி அவர் பதிவு செய்திருக்கும் ஒரு பகுதி மட்டும் இங்கே:
***
1946 – காலகட்டம், கலைஞர் கருணாநிதி வசனம் எழுதிட எம்.ஜி.ஆர் முதன்முதலாக ஹீரோவா நடிச்ச ‘ராஜகுமாரி’ படப்பிடிப்பு நடந்துகிட்டிருந்த சமயம் எம்.ஜி.ஆர்., ஜுபிடர்ல மாதச் சம்பள நடிகரா இருந்தாரு.
நம்பியார், என்.வி.சுப்பையான்னு ஏகப்பட்ட பேர் மாதச் சம்பளத்தில நடிச்சிக்கிட்டிருந்தாங்க சென்ட்ரல் ஸ்டுடியோ ராமநாதபுரம் ஏரியாவை ஒட்டியுள்ள இடம் எம்.ஜி.ஆரின் தாயார் வாடகைக்கு ஒரு வீடு புடிச்சு மகனோட தங்கியிருந்தாங்க.
அதுக்குப் பக்கத்திலதான் ‘கோதா பொட்டி’ (தேகப்பயிற்சி சாலை வச்சிருந்தாரு சாண்டோ சின்னப்பா தேவர்.).
ஷுட்டிங் இல்லாத சமயங்கள்ல கோதா பொட்டிக்கு போய் எல்லோரும் தீவிரமா உடற்பயிற்சி பண்றதை எம்.ஜி.ஆர் பார்ப்பார். அதுல தேவர் அண்ணனுக்கும் அவருக்கும் சிநேகம் ஏற்பட்டது. எம்.ஜி.ஆரும் கடுமையா உடற்பயிற்சி பண்றவர்.
‘ராஜகுமாரி’ படத்தில வர்ற சண்டைக் காட்சியில தன்னோட மோதறதுக்கு சின்னப்பா தேவர் சரியா இருப்பார்னு டைரக்டர் ஏ.எஸ்.ஏ.சாமிக்கு சிபாரிசு பண்ணினவரு எம்.ஜி.ஆர். படம் வெளியாகி ‘ஹிட்’ ஆயிருச்சு.
சின்னப்பா தேவர் தான் முதல் முதல் தயாரிக்கிற சினிமாவுல எம்.ஜி.ஆர்தான் நடிக்கணும்னு ஆரம்பத்திலேயே சொல்லியிருந்தார்.
1946-ல் ஏற்பட்ட நட்பு காரணமாக 1956-ல் ‘தாய்க்கு பின் தாரம்’ படம் எடுத்தார். ஹிட் ஆயிருச்சு.
அந்தப் படத்தோட கிளைமாக்ஸ் சீன் அமைக்கறதில எம்.ஜி.ஆருக்கும் தேவர் அண்ணனுக்கும் சிறு மனத்தாங்கல் ஏற்பட்டிருக்க.. ரெண்டு பேரும் பிரிஞ்சிட்டாங்க.
தேவர் ‘நீலமலைத் திருடன்’, ‘செங்கோட்டை சிங்கம்’, ‘வாழவைத்த தெய்வம்’, ‘யானைப் பாகன்’னு பல படங்களை தயாரித்தார். எதிர்பார்த்தபடி வெற்றி கிடைக்கலே.
‘திரும்பவும் ஊருக்கே போய் வேற தொழில் பார்க்கலாம்னு முடிவு பண்ணிருக்கேன்’னு சொல்ல வாஹினி ஸ்டுடியோ நாகிரெட்டியார்கிட்ட போனாரு.
ஆரம்பத்தில ஒரு சின்ன தொகையை தேவர்கிட்ட அட்வான்சா வாங்கிட்டு – முழு படத்தையும் தன்னோட வாகினி ஸ்டுடியோவுல எடுத்து ரிலீஸ் பண்ண உதவினவர் நாகிரெட்டியார்.
‘நீ ஒண்ணும் கவலைப்படாதே. ஒரு பாட்டை ரெக்கார்ட் பண்ணு மிச்சத்தை நான் பார்த்துக்கறேன்’னாரு ரெட்டியார். வாஹினி ஏ-தியேட்டர்ல ரெக்கார்டிங் வேலை நடந்துகிட்டிருந்திச்சு.
இதற்கிடையில் எம்.ஜி.ஆர் சீர்காழியில தன்னோட ‘இன்பக்கனவு’ நாடகத்தில் நடிச்சிட்டிருக்கிறப்போ – ஒரு காட்சியில குண்டுமணிய தோள்ல தூக்கி சுத்தி கீழே போடணும்.
பாலன்ஸ் தவறி தன் முழங்கால் மேல குண்டுமணியை போட, கிட்டத்தட்ட 150 கிலோ எடையுள்ள அவர் உடம்பு, எம்.ஜி.ஆர் எலும்பை ஒடைச்சிட்டுது. ஆறு மாதம் படுக்கையில் இருந்தாரு.
‘எம்.ஜி.ஆர் கதை முடிஞ்சுது’ன்னு சினிமா உலகம் பேசிக்கிட்டிருந்தப்போ. வேகமா குணமடைஞ்சு – அதே வாகினி ஸ்டுடியோவுல பத்திரிகையாளர், புகைப்படக்காரங்களை வரவழைச்சு அதே குண்டுமணிய தூக்கி போட்டோவுக்கு ‘போஸ்’ குடுத்திட்டிருக்காரு.
செய்தி தேவருக்கு எட்டுச்சு. ‘ரெக்கார்டிங்’ தியேட்டர்ல இருந்தவரு அவரைப் பார்க்கப் போனாரு.
“என் கதை முடிலண்ணே வந்திட்டேன்’னாரு எம்.ஜி.ஆர். “நீங்க என்ன பண்றீங்க. நான் ஒரு சாங் ரெக்கார்டு பண்றேன். கேக்கலாமா? வாங்க..!”
எம்.ஜி.ஆர் போனார். பாட்டைக் கேட்டார். “பாட்டு நல்லா இருக்கே. யாரு ஹீரோ?”
“எனக்கு எந்த ஹீரோ இருக்கான். யாராவது புதுமுகத்தை வச்சு எடுக்கப் போறேன்!” என்றார் தேவர்.
“ஏண்ணே! நான் இல்லையா?” எம்.ஜி.ஆர் குரல் தழு தழுக்க, ரெண்டு பேரும் கட்டிப்புடிச்சு கண்ணீர் விட்டனர்.
‘தாய்க்குப் பின் தாரம்’ 1956-ல் வந்தது. 4 ஆண்டு சோதனைக் காலம், பிறகு 1960-லிருந்து 16 படங்கள் தேவர் பிலிம்ஸ்ல. ‘நல்ல நேரம்’ படம் வரைக்கும் எம்.ஜி.ஆர் நடிச்சுக் கொடுத்தார்.
ஆரம்பத்தில் கடவுள் நம்பிக்கையுள்ளவராக இருந்தவர் எம்.ஜி.ஆர். திருப்பதிக்கு போய் சாமி கும்பிட்டவர். பின்னாளில் கடவுள் மறுப்பாளர் கட்சியில் சேர்ந்துவிட்டார்.
அப்படி நாத்திகனாக மாறிய எம்.ஜி.ஆரை தன் அன்புக்கு கட்டுப்பட வைத்து முருகன் வேஷத்தில் நடிக்க வைத்தவர் தேவர் அண்ணன். சினிமாவுல – உயர்ந்த நட்புக்கு அடையாளமா தேவர் – எம்.ஜி.ஆர் நட்பைச் சொல்லலாம்.
கொங்கு தேன்!
ஆசிரியர் : சிவகுமார்
பக்கங்கள்: 224
விலை: ரூ.225/-
இந்து தமிழ் திசை வெளியீடு, சென்னை.