Take a fresh look at your lifestyle.

துரோகம் எங்கள் பரம்பரையிலேயே இல்லை!

எம்.ஜி.ஆரின் திரைக்குரல்

1956-ம் ஆண்டு டி.யோகானந்த் இயக்கத்தில் வெளியான  ‘மதுரை வீரன்’ படத்தில் திரைக்கதையும், வசனமும் எழுதியவர் கவிஞர் கண்ணதாசன்.  இந்தப் படம் எம்.ஜி.ஆரின் திரைவாழ்வில் மிக முக்கியமான படமாக இருந்தது.

அப்போது 33 திரையரங்குகளில் ஓடி ஒரு கோடி ரூபாய் அளவுக்குப் பெரும் வசூலைக் கொடுத்த படத்தில் எம்.ஜி.ஆருடன் கலைவாணரும், மதுரமும் இணைந்து நடித்திருப்பார்கள்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் மதுரை வீரனாக நடித்த இந்தப் படத்தில் நடனத்தில் தேர்ச்சி பெற்ற பத்மினி, லலிதா, ராகினி, ஈ.வி.சரோஜாவும், நடன ஆசிரியராக வழுவூர் ராமையா பிள்ளையும் இடம் பெற்றதைப் போல, கர்நாடகப் பாடகியான எம்.எல்.வசந்தகுமாரி இரண்டு பாடல்களைப் பாடியிருப்பதும் விசேஷம்.

மதுரை வீரன் – படத்தில் திருமலை மன்னரால் குற்றம் சாட்டப்பட்டு நிற்கையில் மதுரை வீரனான எம்.ஜி.ஆர்

பேசும் வசனம் சிறப்பு.

மதுரை வீரனில் ஒரு காட்சி :

மதுரை வீரன் :

“மன்னா.. என் மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் எண்ணிக்கையிலே பலப்பல! ஒருவனைக் குற்றவாளி ஆக்கிவிடலாம். நிரபராதி என்று நிரூபிப்பது தான் கடினம்.

மன்னா.. இதுவரை என் வாழ்விலே கள்ளம் இல்லை, கபடு இல்லை, சூது இல்லை, சூழ்ச்சி இல்லை. இந்தப் பதவி நான் கேட்டுப் பெறவும் இல்லை. கூப்பிட்டுத் தந்தீர்கள் என்பதற்காக நான் செய்வது எல்லாம் சரி என்று வாதிக்கவும் இல்லை.

புலி வேட்டையாடும் பொறுப்பேற்றேன். வழியிலே ஒரு புள்ளிமானைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் வந்தது. காப்பாற்ற வருவான், அந்த வரவை கள்ளர்களுடன் சம்பந்தப் படுத்துவோம் என்று காத்திருந்தார்கள் சிலர்.

யார் அந்த சிலர்? ஏன் அங்கு வந்தார்கள்? எவரிட்ட ஆணை?

மன்னா.. கொஞ்சம் தலை நிமிர்ந்து பாருங்கள்..! இன்னமும் விளக்கம் சொல்லத் தான் வேண்டுமா?

நான் நிரபராதி என்று நிரூபிப்பதற்கு முன் இந்த வழக்கைச் சிருஷ்டி செய்தவர்கள் திறமைசாலிகள் என்பதை ஒப்புக் கொள்கிறேன்.

அந்தத் திறமை தான் நீதிக்கு அடிப்படை என்றால் தாங்கள் இஷ்டம் போல தீர்ப்புக் கூறலாம். ஆனால், அதற்கு முன் ஒன்று!

நாடு பயமில்லாமல் வாழ வேண்டும். பச்சைப் பயிர்கள் செழித்து வளரும் பாண்டி மண்டலம் நீடூழி வாழ வேண்டும். திருமலை மன்னர் சீரும் சிறப்பும் பெற்று சிறந்தோங்க வேண்டும் என்று ஆசைப்பட்டவன் நான்.

ஆனால் பொறாமைக் காரர்களின் விஷ மூச்சிலே சதிகாரர்கள் பின்புறம் இருந்து நடத்திய தாக்குதலிலே நான் யார் என்ற கேள்வியே மறைந்து குற்றக்கூண்டிலே நிற்கவேண்டிய கோரமான நிலையை அடைந்திருக்கிறேன்.

நான் சாக வேண்டும் என்று மன்னர் தீர்ப்பளித்தாலும் சரி, அதற்காக நான் அஞ்சப் போவதில்லை.

ஆனால் கடைசி முறையாகக் கூறுகிறேன். நேற்றும் சரி, இன்றும் சரி, கள்ளர்களோடு எனக்கு உறவும் இல்லை! மதுரைப் பேரரசுக்கு நான் துரோகம் நினைக்கவும் இல்லை!

ஏன், துரோகம் எங்கள் பரம்பரையிலேயே இல்லை..”

#மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் #மதுரைவீரன் #பத்மினி #மன்னர் #கவிஞர் கண்ணதாசன் #ராகினி #ஈ.வி.சரோஜா