அவர்களின் செயல்கள் மற்றும் வார்த்தைகள் மூலமோ தங்கள் மகள்களின் குணாதிசயங்கள் மற்றும் தேர்வுகளை ஊக்குவிக்கிறார்கள் தந்தைகள்.
ஒவ்வொரு தந்தை-மகள் உறவும் தனித்துவமானது மற்றும் தீவிரம் மற்றும் வெளிப்பாடு ஆகும். ஆனால் அவை சில காரணங்களால் மாறுபடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஒரு தந்தை தனது மகள் மீதான அன்பு, கலாச்சாரம், சமூகம் மற்றும் தனிப்பட்ட காரணிகளால் பாதிக்கப்படுவது அவர்களின் ஆழ்ந்த தனிப்பட்ட அனுபவமாகும் அப்படி இருந்தும்கூட, ஒரு தந்தைக்கும் மகளுக்கும் இடையில் பகிர்ந்துக் கொள்ளப்படும் அன்பு பெரும்பாலும் உடைக்க முடியாத பிணைப்பு ஆகும்.
இப்படிப்பட்ட அன்பையும் பிணைப்பையும் வைத்திருந்த தந்தை ஒரு நாள் தன் மகள் மறைந்து போவதை அறியாத தந்தைகள் பற்றிய ஒரு சிறு தொகுப்பு.
இளையராஜா மகள் பவதாரிணி
இசைஞானி என்று தமிழ்நாட்டு மக்களால் அழைக்கப்படுபவர் இளையராஜா. 1000 படங்களுக்கும் மேல் இசையமைத்திருக்கும் அவருக்கு கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா என்ற மகன்களும் பவதாரிணி என்ற மகளும் இந்தார்.
தனது தந்தை மற்றும் சகோதரர்கள் போலவே தமிழ்த் திரையிசையில் தனித்து ஜொலித்தவர் பவதாரிணி. ஏராளமான பாடல்களையும் அவர் பாடியிருக்கிறார்.
இளையராஜா இசையமைத்த ‘ராசய்யா’ படத்தில் இடம்பெற்ற “காதல் வானிலே” பாடலின் மூலம் பாடகியாக அறிமுகமானார்.
தொடந்து ‘தேடினேன் வந்தது’ படத்தில் சிற்பி “இசையமைத்த ஆல்ப்ஸ் மலைக்காற்று” பாடலை ஹரிஹரனுடன் சேர்ந்து பாடினார்.
அதனையடுத்து இளையராஜா இசையமைப்பில் வெளியான ‘காதலுக்கு மரியாதை’ படத்தில் இடம்பெற்ற, “இது சங்கீத திருநாளோ”, “என்னை தாலாட்ட வருவாளா” போன்ற டூயட் வெர்ஷனையும், “ஓ பேபி” ஆகிய பாடல்களைப் பாடி அசத்தினார்.
‘டைம்’ படத்தில் ஹரிஹரனுடன் இணைந்து, “தவிக்கிறேன் தவிக்கிறேன்” என்ற பாடலைப் பாடி ஒட்டுமெத்த தமிழர் மனதிலும் இடம் பிடித்தார்.
2000களில் கேட்டு ரசித்த பல பாடல்களைப் பாடி தன்னை மிகச்சிறந்த பாடகியாக நிரூபித்துக்கொண்டே இருந்தார்.
அவரது திரைப்பயணத்தில் முக்கியமான பாடல்களில் ஒன்று ‘பாரதி’ படத்தில் இடம்பெற்ற, “மயில் போல பொண்னு ஒன்னு” பாடல். இளையராஜா இசையமைத்த அந்தப் பாடலைப் பாடிய அவருக்கு சிறந்த பாடகிக்கான தேசிய விருது (2001) கிடைத்தது.
இந்தச் சூழலில் அவருக்கு புற்றுநோய் ஏற்பட்டு கடந்த சில வருடங்களாகவே அவர் சிகிச்சையில் இருந்தார். ஆயுர்வேத சிகிச்சைகாக இலங்கைக்கு சென்ற அவர் சிகிச்சை பலனின்றி கடந்த ஜனவரி 25 ம் தேதி அங்கேயே உயிரிழந்தார்.
உயிராக நேசித்த மகளின் மறைவை ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலையில் இருந்த இளையராஜா, தன்னுடன் பவதாரிணி இளம் வயதுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். “அன்பு மகளே” என்ற அந்த ஒற்றை வார்த்தையுடன் அவர் வெளியிட்ட அந்த பதிவு, எல்லோர் நெஞ்சையும் கனக்க வைத்துவிட்டது.
**************
கவிஞர் கபிலன் மகள் தூரிகை
பிரபல தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் கபிலன் தமிழில் 500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியவர் பாடலாசிரியர் கபிலன். இவருடைய மகள் தூரிகை.
எழுத்தாளர், ஆடை வடிவமைப்பாளர் என பன்முகத்திறமை கொண்ட தூரிகை, அண்மையில் பெண்களுக்காக ‘Being Women’ என்ற ஆன்லைன் பத்திரிகையையும் தொடங்கி நடத்தி வந்தார். ஏராளமான சின்னத்திரை நடிகைகளுக்கும் காஸ்டியூம் டிசைன் செய்துள்ளார். இதில் தூரிகையின் ஒவ்வொரு டிசைனுமே கவனம் ஈர்த்து பெருமை பேசப்பட்டிருக்கின்றன.
தூரிகையின் திறமை மீது நம்பிக்கை வைத்த இயக்குநர் வசந்த பாலன் தனது ‘அநீதி’ படத்தில் காஸ்டியூம் டிசைனராக அறிமுகப்படுத்தினார்.
அந்த சமயத்தில், ‘உங்கள் (வசந்த பாலன்) அறிமுகம் என்பதை நிரூபிப்பேன்’ என்று தனது முகநூல் பக்கத்திலும் உற்சாகமுடன் பகிர்ந்திருந்தார் தூரிகை.
அப்படிப்பட்ட ஒரு சமயத்தில் தான் 2019ம் ஆண்டு, கடந்த செப்டம்பர் 10-ம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் தூரிகை. அவரது மறைவிற்கான காரணம் இதுவரை சொல்லப்படவில்லை. தூரிகை மறைந்த சமயத்தில், ஒரு வார இதழில், மகளின் இழப்பு குறித்து கபிலன் எழுதிய கவிதை படிப்பவர்களை உருக வைத்தது.
மகள்…!
“எங்கே போனாள் தெரியவில்லை.
வாசலில் மட்டும் அவளின் காலணி.
எல்லா தூக்க மாத்திரைகளையும்
அவளே போட்டுக் கொண்டால்..
நான் எப்படி தூங்குவேன்..
எங்கே போனாள் என்று தெரியவில்லை..
அவள் காலனி மட்டும் என் வாசலில்..
மின்விசிறி காற்று வாங்குவதற்கா?
உயிரை வாங்குவதற்கா..?
அவள் கொடுத்த தேநீர் கோப்பையில்
செத்து மிதக்கிறேன் எறும்பாய்..
அவளுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கா இல்லையா,
எனக்கு தெரியாது
அவளே என் கடவுள்…
குழந்தையாக அவளை பள்ளிக்கு தூக்கிச் சென்ற பாரம் இன்னும் வலிக்கிறது..
கண்ணீர் துளிகளுக்கு தெரியுமா கண்களின் வலி..
யாரிடம் பேசுவது
எல்லா குரலிலும் அவளே பதிலளிக்கிறாள்..
கண்ணீரின் வெளிச்சம் வீடு முழுக்க நிரம்பியிருக்க
இருந்தாலும் இருக்கிறது இருட்டு..
பகுத்தறிவாளன் ஒரு கடவுளை புதைத்து விட்டான்:”
**************
விஜய் ஆண்டனியின் மகள் மீரா
பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி, ஆரம்பத்தில் சவுண்ட் இன்ஜினியராக பணியாற்றி, பிறகு இசையமைப்பாளராக மாறியவர்.
யாரிடமும் ஈகோ பார்க்காமல் எளிமையாகப் பழகுபவர். சமீபத்தில் விஜய் ஆண்டனி இசை கச்சேரியில் அவரது மகளுடன் கலந்து கொண்டது பலராலும் கவனிக்கப்பட்டது.
அவரது மகள் மீரா சென்னையில் உள்ள ஒரு பிரபல தனியார் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தார். 12ம் வகுப்பு படிப்பதால் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்பட்டது.
இதுபோக அவர் அடிக்கடி தூக்கமின்றி தவித்ததாகக் கூறப்படுகிறது.
இதற்காக சிகிச்சை பெறுவதற்காக தெரபி சென்றுள்ளார் எனவும் தெரிகிறது. மறுபுறம் பள்ளியில் கலைநிகழ்ச்சி குழுவின் தலைவராகவும் இருந்துள்ளார்.
இந்நிலையில் மீரா கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் அவரது தந்தையின் அறையில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
அவரது உடல் ஓமந்தூரார் மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டு பின்னர் நல்லடக்கம் செய்யப்பட்டது.
திரைப் பிரபலங்களான சத்யாராஜ், சிபிராஜ், சின்மயி, சிம்பு, ஹரிஷ் கல்யாண், ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட பலர் விஜய் ஆண்டனியின் வீட்டிற்கு சென்று ஆறுதல் தெரிவித்தனர்.
விஜய் ஆண்டனியின் உருக்கமான பதிவு..!
விஜய் ஆண்டனி, தனது மகளின் இறப்பை அடுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டிருந்தார்.
அதில், தன் மகள் இந்த உலகை விட, சிறந்த, சாதி, மதம், பொறாமை அற்ற ஒரு இடத்தில் இருப்பதாக தெரிவித்திருந்தார். அதோடு, தனது மகள் அன்பாவள், தைரியமானவள் என்றும் குறிப்பிட்டிருந்தார். அவளுடன் தானும் இறந்து விட்டதாகவும் அவள் பெயரில் தான் செய்ய இருக்கும் நல்ல காரியங்களை அவளே தொடங்கி வைப்பாள் என்றும் கூறியிருந்தார்.
இந்த உலகில் மிகவும் பிடித்த ஓருயிர் எது என்று, எந்த தந்தையைக் கேட்டாலும் அவர்களிடம் இருந்து வரும் ஒரே பதில் தனது மகள் என்பது தான். அப்படிப்பட்ட மகளின் இழப்பை எந்த தந்தையாலும் சாதாரணமாகக் கடந்து செல்ல முடியாது.
– ஆர். மகேஸ்வரி, டாக்டர் எம்.ஜி.ஆர் – ஜானகி மகளிர் கல்லூரி மாணவி.