Take a fresh look at your lifestyle.

ஊட்டியில் பூத்த சிறு மலர்!

-இயக்குநர் எம்.ஆர். பாரதி

இயக்குநர் எம்.ஆர். பாரதி. எப்போது சந்தித்தாலும் பேரன்பும் சின்ன சிரிப்பும் அவரது அடையாளங்கள். சென்னையில் அவர் வேரூன்றிய காலத்தில் பார்த்துப் பழகியவர்கள்தான் இன்று தமிழ் சினிமாவின் முன்னோடிகளாக இருக்கிறார்கள்.

இன்றும் அவர் அதே உற்சாகத்துடன் சினிமாவைத் தேடுகிறார். சின்ன பட்ஜெட் படங்களில் சாதிக்கவேண்டும் என நினைக்கிறார். ஓர் ஆண்டாக பேசிப் பேசி செதுக்கிய திரைக்கதையை காட்சிகளாக மாற்றியிருக்கிறார்.

மிகக் குறைவான குழுவினருடன் ஊட்டிக்குச் சென்று தன் கனவுப் படத்தை எடுத்து வந்திருக்கிறார்.

“இன்றைக்கு பட்ஜெட்தான் சினிமாவில் பிரச்னை. சின்ன பட்ஜெட் படங்களை எடுத்து கடனில் மூழ்கி திக்குத் தெரியாமல் போகும் தயாரிப்பாளர்கள் அதிகம்.

உள்ளடக்கத்தைவிட மிக முக்கிய காரணம், சினிமாவை மிகக் குறைந்த செலவில் திட்டமிட்டு எடுக்கத் தெரியாததுதான்.

மிகக் குறைந்த பட்ஜெட்டில் ஒரு படத்தை நான் எடுக்க நினைத்தேன். எந்தவித நஷ்டமும் ஏற்படாத வகையில், திட்டமிட்டு எடுத்து வந்திருக்கிறேன்.

புகழ்பெற்ற பிரேவ் ஹார்ட் போன்ற படங்கள்கூட மிகக் குறைந்த நாட்களில் எடுக்கப்பட்டவைதான். சினிமாவில் திட்டமிடல் அவசியம் என உணர்கிறேன்.

என்னுடைய ‘ட்ரீம் கேர்ள்’ படம் கிடைக்கிற வாய்ப்புகளைக் கொண்டு திரையில் சாதிக்க விரும்பும் இளம் இயக்குநர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும். விரைவில் அது திரைக்கு வரும் “என்று கண்களின் கனவுகள் மின்னப் பேசுகிறார் எம்.ஆர். பாரதி.

மகாகவி பாரதி பெரிதினும் பெரிது கேள் என்றார். இந்த பாரதி சிறியதே அழகு என்கிறார். வாழ்த்துகள்.