நடிகை கீர்த்தி சுரேஷ் சினிமாவுக்கு வந்து 10 ஆண்டுகள் ஓடி விட்டன.
2000 ஆம் ஆண்டு வெளியான ‘பைலட்ஸ்’ மலையாள படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ்.
மேலும் சில படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். 2013 ஆம் ஆண்டு பிரியதர்சன் இயக்கத்தில் மோகன்லால் நடித்த ‘கீதாஞ்சலி’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
‘இது என்ன மாயம்’, ‘ரஜினி முருகன்’, ‘ரெமோ’, ‘தொடரி’, ‘பைரவா’, ‘தானா சேர்ந்த கூட்டம்’, ‘சர்கார்’ உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்.
நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமாக தெலுங்கில் வெளியான ‘மகாநதி’ படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை தட்டிச்சென்றார். (தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரில் வெளியானது) அண்மையில் தமிழில் ‘மாமன்னன்’ படத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில், கீர்த்தி சுரேஷ், திரை உலகில் நுழைந்து 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதால் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “திரையுலகில் 10 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளேன் என நினைக்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது.

என்னுடைய அப்பா – அம்மாவுக்கு நன்றி. என் குரு பிரியதர்சனுக்கு என்றென்றைக்கும் கடமைப்பட்டுள்ளேன்.
என் திரையுலகப் பயணத்தின் தொடக்கத்துக்கான காரணம் அவர்தான். 10 ஆண்டுகள் நிறைவு செய்து விட்டேன். இன்னும் நிறைய தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.
என்னுடைய தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள், ஊடக நண்பர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் மிகப் பெரிய நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே இந்தியில் ரீமேக் செய்யப்படும் ‘தெறி’ படம் மூலம் பாலிவுட்டிலும் கீர்த்தி சுரேஷ் கால் பதிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
– பாப்பாங்குளம் பாரதி.