Take a fresh look at your lifestyle.

2வது திருமணம் பற்றி மனம் திறந்த சமந்தா!

- ரசிகர்களின் கேள்விக்கு புள்ளிவிவரத்துடன் பதில்

தமிழ் சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வருபவர் சமந்தா. விஜய், விக்ரம், சூர்யா போன்ற நடிகர்களுடன் ஜோடியாக நடித்த சமந்தா தெலுங்கு சினிமாவுக்கும் சென்றார்.

‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவுடன் ஜோடியாக நடித்தார்.

அப்போது நாக சைதன்யா – சமந்தா இடையே காதல் மலர்ந்தது. தெலுங்கிலும் முன்னணி நடிகையாக உலா வந்த நேரத்தில் நாக சைதன்யாவை கல்யாணம் செய்து கொண்டார் சமந்தா.

இரு வீட்டு பெற்றோர் சம்மதத்துடன் இந்த திருமணம் சிறப்பாக நடைபெற்றது. காதல் திருமணம் செய்து கொண்ட நட்சத்திர ஜோடிகள், பொறாமைப்படும் அளவுக்கு நாக சைதன்யா – சமந்தா ஜோடியின் திருமண வாழ்க்கை சீராக சென்று கொண்டிருந்தது.

திடீரென இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2022 ஆம் ஆண்டு பிரிந்தனர். ரசிகர்கள் மத்தியில் இவர்கள் பிரிவு சோகத்தை ஏற்படுத்திய நிலையில், உரசலுக்கு இதுதான் காரணம் என பல விதமாக கிசுகிசுக்கள் றெக்கை கட்டி பறந்தன.

‘புஷ்பா’ படத்தில் “ஊ சொல்றியா மாமா” பாடலுக்கு சமந்தா ஆடிய நடனம் அவரை வேறு ஒரு தளத்துக்கு கொண்டு சென்றது.

கல்யாண பந்தம் அறுபட்ட சூழலில், சோதனை மேல் சோதனையாக, ‘மையோசிடிஸ்’ என்ற தசை நோயால் சமந்தா பாதிக்கப்பட்டார்.

நோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொண்டே வெப் சீரிஸ் மற்றும் படங்களில் நடித்து வந்தார். உடல் நலத்தை பேணும் பொருட்டு, சினிமாவில் இருந்து தற்காலிகமாக இப்போது ஓய்வு எடுத்து வருகிறார்.

இதனிடையே ‘சமந்தா இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும்’  என அவரது ரசிகர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில், அவர் இரண்டாம் திருமணம் குறித்து மனம் திறந்துள்ளார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தா ‘என்னிடம் எது வேண்டுமானாலும் கேட்கலாம்’ என பதிவிட, ரசிகர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டு அவரை திணறடித்தனர்.

பெரும்பாலான வினாக்கள் அவரது இரண்டாம் கல்யாணம் சம்மந்தப்பட்டதாக இருந்தது. அந்தக் கேள்விகளை சமந்தா தவிர்க்கவில்லை.

“புள்ளி விவரத்தின்படி இரண்டாம் கல்யாணம் மோசமான முதலீடாகவே அமையும்” என்று ஸ்மைலி ஈமோஜியுடன் பதில் அளித்துள்ளார்.

“இரண்டாம் திருமணம் என்பது தவறான முடிவு. 2023ஆம் ஆண்டு நடத்தப்பட்ட புள்ளி விவரத்தை கணக்கில் கொண்டால் முதல் திருமணம் செய்தவர்களின் விவாகரத்து 50 சதவீதம்.

இரண்டாவது திருமணம் செய்தவர்களின் விவாகரத்து 67 சதவீதம் – மூன்றாவது திருமணம் செய்துகொண்டவர்களின் விவாகரத்து 73 சதவீதம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பதிவின் மூலம், இரண்டாம் திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லை என்பதை சமந்தா தெளிவாக சொல்லி விட்டார்.

– பாப்பாங்குளம் பாரதி.