Take a fresh look at your lifestyle.

தனக்கான இடத்தைத் தக்கவைத்துக் கொண்ட ரோஜா!

தமிழில் செம்பருத்தி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகி பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நாயகியாக வலம் வந்தவர் நடிகை ரோஜா.

தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல மொழி படங்களில் நடித்திருக்கிறார்.

பொலிட்டிக்கல் சயின்ஸ் படிப்பை முடித்த ரோஜா சினிமாவில் நுழைவதற்கு முன்பு குச்சுப்புடி நடனக்கலைஞராக இருந்தார்.

இவர் சினிமாவில் தந்தையின் ஆசைக்காகதான் நடிக்க வந்தாராம். இதனை அவரே ஒரு பேட்டியில் கூறியிருப்பார்.

அதன் பிறகு நல்ல வரவேற்பு கிடைக்கவே சினிமாவில் தொடர்ந்து நடித்து வந்தார். 1991-ம் ஆண்டு ‘பிரேம தப்பாஸு’ என்ற தெலுங்குப் படத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தார்.

இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தமிழில் வெளியான செம்பருத்தி படம் மூலமாக தான் ரோஜா அறிமுகமானார். நடிகர் பிரசாந்துக்கு ஜோடியாக நடிகை ரோஜா நடித்திருந்தார்.

பணக்கார தொழிலதிபரின் மகனுக்கும். வீட்டு வேலை பார்க்கும் சாதாரண மீனவப் பெண்ணுக்கும் ஏற்படும் காதலை மையமாகக் கொண்டு இந்தத் திரைப்படத்தின் கதை நகரும்.

இந்தத் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய ஹிட் அடித்த காரணத்தினால், இந்திய சினிமாவில் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

இந்த திரைப்படத்தில் செம்பருத்தியாக அறிமுகமான ரோஜாவைப் பிற்காலத்தில் படத்தின் இயக்குநர் ஆர்.கே செல்வமணி காதல் திருமணம் செய்து கொண்டார்.

இந்த ஜோடிக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். செம்பருத்தி படத்திற்குப் பிறகு சூரியன், உழைப்பாளி, அதிரடிப்படை, மக்கள் ஆட்சி, ஏழையின் சிரிப்பில், என் ஆசை ராசாவே, வீரா என நடித்து குறுகிய காலத்திலேயே முன்னணி நாயகி வரிசையில் வந்தார்.

1999-ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியின் மகளிர் பிரிவான தெலுங்கு மஹிளாவில் தலைவர் பதவி கிடைத்தது.

பின்னர் அங்கிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.

அதன்பின்னர் 2011-ல் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டது. அங்கு தன்னை இணைத்துக் கொண்ட ரோஜா, ஜெகன் மோகன் ரெட்டியின் அமைச்சரவையில் சுற்றுலாத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.

இப்படி சினிமாவில் வெற்றி பெற்ற இவர் அரசியலில் பல தோல்விகளை சந்தித்து அதனை கண்டு துவண்டுவிடாமல் இப்போது அவருக்கான ஒரு இடத்தை பிடித்து வெற்றி பாதையில் சென்று கொண்டு இருக்கிறார்.

– நன்றி: இந்துஸ்தான் தமிழ்