Take a fresh look at your lifestyle.

பால்ய காதலை மறக்கமுடியாத நாயகன்!

நந்திதா தாஸோடு ஒருமுறை பேசுகிற வாய்ப்பு கிடைத்தபோது கேட்டேன்.

“இந்தியா முழுக்க மிகச்சிறந்த நடிகை என்று பெயரெடுத்துவிட்டீர்கள். திடீரென்று முன்அனுபவம் இல்லாத ஒருவர் இயக்குநராக… அவர் படத்தில் நடிக்க எப்படி முடிவு செய்தீர்கள்?” என்று.

அதற்கு பதிலளித்த நந்திதாதாஸ், “ஒரு பெண் தன் கனவை அடைய முயற்சி செய்கிறார். இன்னொரு பெண்ணாக நானும் துணை நிற்கலாம் என்று தோன்றியது…” என்றார்.

சுமதிராம் அமெரிக்காவிலிருந்து வந்திருக்கிற இயக்குநர். இங்கே கொட்டாம்பட்டியிலிருந்து லாரி டாப் மீது, இரண்டு ரூபாய்க்கும் மூன்று ரூபாய்க்கும் ஆயிரம் கிலோமீட்டர் பயணம் செய்து சென்னைக்கு வந்து,

இயக்குநராகும் கனவில் வறுமையின் கடைசிவரை போய்வந்து தமிழ் சினிமா எடுக்கிறவர்கள் எல்லாம் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் காற்றில் பறக்கவிட்டுக் கொண்டிருக்கும் வேளையில்,

வாழ்வின் உச்சபட்ச சுதந்திரங்களை அனுபவிக்கும் ஒரு தேசத்திலிருந்து வந்து நம்முடைய மண்ணின் மாண்பை மீட்டெடுக்கும் விதத்தில் ஒரு படத்தைக் கொடுத்திருக்கும் சுமதிராம் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர்.

பால்ய விவாகம் முடிந்து சென்றுவிடுகிற கதை நாயகி இருபது வருடங்களுக்குப் பிறகு தன்னுடைய சுந்தரபுரி என்கிற ஊருக்கு வருகிறாள்.

அங்கே சிறு பருவத்தில் தன்னை நேசித்த கதைநாயகன் இன்னும் தன் நினைவுகளோடு வாழ்வதைக் காண்கிறாள். இழந்த அந்தத் தூய காதல் உணர்வுகளை மெல்ல மெல்ல மீட்டெடுக்கிறாள் அவள்.

அவ்வப்போது இன்றைய வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளோடு பால்யத்தில் நடந்தவற்றை பொருத்தி பொருத்தி கதைநாயகி சுதந்திரத்திற்கு முன்னும், பின்னும் நம்மை அழைத்துச் செல்கிறாள்.

மெல்ல நாம் அவர்களுடைய உணர்வுகளோடு ஒன்றும்போது பால்ய விவாகம் செய்தவன் திரும்பவர முடிவு என்ன என்பதே கதை.

கதை நடக்கிற ஊர், இடம், காலம் என எல்லாமே இயக்குநரின் கற்பனை என்பதால் படத்தின் அழகை கலை இயக்குநரின் உதவியால் கூட்ட முயற்சித்திருக்கிறார்.

படத்தில் துளசியாக வருகிற நந்திதாதாஸ் பேசுகிற வசனங்கள் இரண்டு பக்கங்கள் இருக்கும். முழுக்க தன் உணர்வுகளால் நம்மை வசீகரிக்கிறார். மம்முட்டி, டெல்லி கணேஷ் இருவரும் இயல்பாக வருகிறார்கள்.

பால்ய காதலை மறக்கமுடியாத மம்முட்டி திரும்ப வருகிற நந்திதாதாஸை எட்டி நின்று பார்க்கிற ஏக்கத்திலேயே பாதி படத்தை நகர்த்திவிடுகிறார் எம்.எஸ்.வியும், இளையராஜாவும் இணைவதற்கான சரியான படம்தான் இது.

அதிலும் தன் பழைய திறமைகளை மீட்டெடுக்கிற இளையராஜாவின் பங்குப் பின்னணி இசையில் பெரிதாக இருக்கிறது (ராஜாதானே?) படம் இசையாலும் பாடல்களாலும் நகர்கிறது.

பாடல்களையும், வசனத்தையும் எழுதியிருக்கிற இயக்குநர் சுமதிராம் பல இடங்களில் ஆச்சர்யப்படுத்துகிறார்.

பல பாடல் வரிகள், மாட்டை கும்பிடுவதற்கு நந்திதாதாஸ் பேசும் வசனங்கள், கிருஷ்ணரின் துளசி எடையை ஞாபகப்படுத்தும் மம்முட்டி பிறந்தநாள் நிகழ்ச்சி,

துணி வெளுப்பவர் சுலபமாக இருவரையும் தனது துணிமூட்டையில் சேர்த்துப் போகும் காட்சி, வாத்துகள் மிதக்கும் அந்தச் செயற்கைக் குளம் என படத்தில் பல விஷயங்கள் ரசிப்பதற்கு ஏற்றவாறு இருக்கின்றன.

தமிழ் சினிமாவில் ‘லிரிகல் மூவி’ எப்போதாவதுதான் வரும். விஷ்வ துளசி அந்த ரகம். தன் கற்பனையை எந்த மாற்றமும் இல்லாமல் சுமதிராம் பெரிய நடிகர்களை வைத்துக்கொண்டு எடுத்திருப்பதால் படம் நம் பொறுமையைச் சோதிப்பது பற்றிக் கவலைப்படாமல் அதன் போக்கிற்கு அது நடக்கிறது.

மௌனமும், இசையும், உணர்வுகளும் கலந்து படத்தை நகர்த்திக் கொண்டுபோக அதன் இயல்புத் தன்மை கொஞ்ச நேரத்திலேயே நம்மை அவர்கள் உலகத்திற்குள் இழுத்துச் சென்றுவிடுகிறது.

நம் ரசிக விருப்பத்தை விட்டுவிடும்போது படம் மெல்ல ஒரு காப்பிய காலத்திற்குச் சென்றுவிடுகிறது.

இந்தப் படத்தில் ஒரு சுவாரசியமான விஷயம். படம் முழுக்க முப்பத்தைந்து எம்.எம்.மில் நடைபெறுவதுதான். சுற்றிலும் வெள்ளைத் திரை. நடுவில் தான் காட்சி.

ஏதோ ஒரு ஆல்பத்தை மெல்லப் புரட்டி எங்கோ வாழ்ந்த இருவரின் கதையைப் பார்த்துவிட்டு வருவதுபோல ஒரு தோற்றம். இன்டெலிஜென்ஸ்!

சுமதிராம் இயக்குநராக வருவதற்கு அடிப்படைத் தகுதி கற்பனையும், படைப்பாற்றலும், ரசனையும்தான் என்பதை உறுதி செய்திருக்கிறார். பல தயாரிப்பாளர்கள் கவனிக்க வேண்டிய செய்தி இது.

சுறுசுறுவென சங்கு சக்கரம்போல தமிழ் சினிமா சீறிச் சுற்றிக் கொண்டிருக்கிற நேரத்தில் விஷ்வ துளசி ஒரு கார்த்திகை மாதத்து அகல் விளக்கு.

– பரசுராம்.

நன்றி: புதிய பார்வை, நவம்பர் – 2015