Take a fresh look at your lifestyle.

அரசியல் பயணத்தை ஆரம்பித்த விஜய்!

‘இளையத் தளபதி’ விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ எனும் பெயரில் அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார்.

இந்த நிலையில் வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘கோட்’ படத்தின் பிடிப்புக்காக அவர் நேற்று புதுச்சேரி வந்தார்.

அங்குள்ள ஏஎஃப்டி பஞ்சாலையில் படப்பிடிப்பு அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. கட்சி ஆரம்பித்து, தலைவரான பிறகு விஜய் படப்பிடிப்புக்கு வந்ததால் ஏஎஃப்டி பஞ்சாலை முன்பு ரசிகர்கள் திரளாக குவிந்தனர்.

ரசிகர்கள் கூட்டம் அலைமோதத் தொடங்கியது. போதிய போலீஸ் பாதுகாப்பு இல்லை. இதனால் ஷுட்டிங் நடந்த புதுச்சேரி கடலூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கட்சித் தொண்டர்களை அமைதி காக்குமாறு பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கேட்டுக்கொண்டார்.

(அவர் புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ. என்பது குறிப்பிடத்தக்கது.) எனினும் ரசிகர்கள் ‘விஜய்.. விஜய்’ என கோஷம் எழுப்பினர்.

நெரிசல் அதிகரித்ததால் அந்தப் பகுதியில் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் செல்லாமல் திரும்பி சென்றன.

ஷுட்டிங் இடைவேளையில் ரசிகர்களை சந்திக்க விஜய் முடிவு செய்தார். ஏஎஃப்டி வாசல் முன்பாக நிறுத்தப்பட்ட வேனில் ஏறி விஜய் ரசிகர்களை நோக்கி கை அசைத்தார்.

அவரை பார்த்ததும், ரசிகர்கள் ‘இளையத் தளபதி வாழ்க’ என முழக்கம் எழுப்பினர்.

விஜய்க்கு ரசிகர்கள் மாலை அணிவித்தனர். மாலைகளை அவர் அணிந்துகொண்டு, ரசிகர்களுக்கே திருப்பி வழங்கினார்.

ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட விஜய் மீண்டும் படப்பிடிப்பு தளத்துக்கு சென்று படப்பிடிப்பில் பங்கேற்றார். இந்த நிகழ்வை, விஜய் அரசியல் பயணத்தின் தொடக்கமாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

-பாப்பாங்குளம் பாரதி.