கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, அரசியல் கட்சியைத் தொடங்குவதற்கு, தன்னை தயார்படுத்தி வந்தார், ‘இளைய தளபதி’ விஜய்.
அதன் முன்னோட்டமாக பல்வேறு சமூக நலத்திட்டங்களை, விஜய் மக்கள் இயக்கம் மூலம் மேற்கொண்டார்.
இதன் தொடர்ச்சியாக தனது, மக்கள் இயக்கத்தை கடந்த பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி அரசியல் கட்சியாக தரம் உயர்த்தினார்.
‘தமிழக வெற்றிக் கழகம்’ என அந்தக் கட்சிக்கு பெயர் சூட்டினார். சுருக்கமாக, த.வெ.க. ஆங்கிலத்தில் TVK.
தமிழக வெற்றிக் கழகத்தில் 2 கோடி உறுப்பினர்களைச் சேர்க்கவேண்டும் என நிர்வாகிகளுக்கு விஜய், ஆணை பிறப்பித்துளார்.
இந்நிலையில் த.வெ.க. கட்சிக்கான உறுப்பினர் சேர்க்கை செயலியை விஜய் நேற்று அறிமுகம் செய்தார்.
சென்னை பனையூரில் உள்ளக் கட்சியின் தலைமை அலுவலகத்தில், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் காணொலி மூலம் செயலியை விஜய் தொடங்கி வைத்தார்.
‘க்யூஆர்’ குறியீட்டைப் பயன்படுத்தி செயலி மூலம் விஜய், தனது உறுப்பினர் அட்டையை பெற்றுக்கொண்டு கட்சியில் முதல் உறுப்பினராக சேர்ந்தார்.
அதைத்தொடர்ந்து, தனது ‘எக்ஸ்’ சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டு விஜய் பேசினார். அதில், ‘தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் அட்டையை நான் எடுத்துவிட்டேன்.
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற அடிப்படை சமத்துவக் கொள்கையைப் பின்பற்றி, வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலை நோக்கி என்னுடைய பயணத்தில் இணைந்து மக்கள் பணி செய்ய விரும்பினால், தமிழக வெற்றிக் கழகத்தின் உறுதிமொழியைப் படித்துவிட்டு, கொடுக்கப்பட்டுள்ள ‘க்யூஆர்’ குறியீடைப் பயன்படுத்தி சுலபமான முறையில் உறுப்பினர் அட்டையைப் பெற்றுக் கொள்ளலாம்’ என தெரிவித்தார்.
‘தோழர்களாக இணைந்து, எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் சரித்திரம் படைப்போம்’ என்றும் விஜய் அழைப்பு விடுத்துள்ளார்.
100 மா.செ.க்கள் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளை, 100 மாவட்டங்களாகப் பிரித்து கட்சிக்கு பொறுப்பாளர்களை நியமிக்க விஜய் பரிசீலித்து வருகிறார். அதாவது, த.வெ.க. கட்சிக்கு 100 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
இதனிடையே, கட்சியில், உறுப்பினர் சேர்க்கை அணி எனும் தனி அணியை உருவாக்கியுள்ள விஜய், அதற்கான நிர்வாகிகளையும் நியமித்துள்ளார்.
இந்த அணியின் மாநிலச் செயலாளராக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்த சி.விஜயலட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார்.
மாநில இணை செயலாளராக எஸ்.என்.யாஸ்மின், மாநிலப் பொருளாளராக வி.சம்பத்குமார், துணை செயலாளர்களாக ஏ.விஜய் அன்பன் கல்லணை, எம்.எல்.பிரபு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முடங்கிய செயலி
உறுப்பினர் அட்டையை பெறுவதற்கு தமிழகம் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த, தொண்டர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் ஒரே நேரத்தில் ‘க்யூஆர்’ குறியீட்டைப் பயன்படுத்தினர்.
இதனால், சில நிமிடங்களில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, செயலிக்கான தளங்கள் அனைத்தும் முடங்கின. சில மணி நேரம் கழித்து அனைத்து தளங்களும் செயல்பாட்டுக்கு வந்தன.
ஏராளமானோர் ‘க்யூஆர்’ குறியீட்டை பயன்படுத்தி, அதன் மூலம், தமிழக வெற்றிக்கழகத்தில் உறுப்பினராக பதிவு செய்த வண்ணம் உள்ளனர்.
-பி.எம்.எம்.