Take a fresh look at your lifestyle.

மீண்டும் பைக் பயணத்தைத் தொடங்கிய அஜித்!

‘துணிவு’ படத்தைத் தொடர்ந்து அஜித் நடித்து வரும் படம் ‘விடா முயற்சி’. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தில் சஞ்சய்தத், அர்ஜுன், திரிஷா, ஆரவ், ரெஜினா கஸன்ட்ரா உள்ளிட்ட பலரும் நடித்துவருகின்றனர்.

அதிரடி சண்டைக் காட்சிகளும், எமோஷனும் கலந்த மசாலா படமாக உருவாகிவரும், ‘விடா முயற்சி’யின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் கடந்த சில மாதங்களாக நடைபெற்றது.

50 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த கட்ட ‘ஷுட்டிங்’, வேறு சில வெளிநாடுகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

மொத்த படப்பிடிப்பும் நிறைவடைய இன்னும் 35 நாட்கள் தேவைப்படும்.

இந்தப் படத்தின் வெளிநாட்டு படப்பிடிப்பில் கலந்துகொள்ள ஆயத்தமான அஜித், அதற்கு முன்பாக உடல் பரிசோதனை செய்ய விரும்பினார்.

அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று ‘அட்மிட்’ ஆனார். அஜித்தை பரிசோதித்த டாக்டர்கள், அவரது காதில் இருந்து மூளைக்கு செல்லும் நரம்பில் வீக்கம் இருப்பதைக் கண்டுபிடித்தனர்.

‘அதனை எப்போது வேண்டுமானாலும் சரி செய்து கொள்ளலாம்’ என்று டாக்டர்கள் கூறினர். ஆனால், சிகிச்சையை தள்ளிப்போட விரும்பாத அஜித், உடனடியாக வீக்கத்தை அகற்ற வேண்டும் என தெரிவித்தார்.

எனவே சிறு அறுவை சிகிச்சை செய்து, அந்த வீக்கம் அகற்றப்பட்டது. சிகிச்சை முடிந்து ஓரிரு நாளில் அவர் வீடு திரும்பினார்.

‘விடா முயற்சி’ படப்பிடிப்புக்கு அஜித், வெளிநாடு செல்வார் என எதிர் பார்க்கப்பட்ட சூழலில், அவர் ‘பைக் டூர்’ பயணத்தை மேற்கொண்டிருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

இதனை அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திராவே, தனது ‘எக்ஸ்’தளத்தில் தெரிவித்துள்ளார்.

‘உடல் ஆரோக்கியத்துடன், சுறுசுறுப்பாக, அஜித்குமார், மீண்டும் ‘பைக்’ பயணம் கிளம்பி விட்டார்’ (‘FIT AND AGILE- AK-BACK ON TRACK’) என தலைப்பிட்டு, அஜித், ‘பைக் ரேஸ்’ உடையில் காணப்படும் போட்டோ ஒன்றையும் சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ளார்.

அந்த போட்டோவில், ‘பைக்’ பயணம் சென்ற களைப்பில், அஜித் ஓர் இடத்தில் ஓய்வு எடுக்கிறார். டீபாயில் அவரது ‘ஹெல்மெட்’ கிடக்கிறது.

ரேஸ் வீரர்கள் அணியும் கறுப்பு உடையில் புன்னகை தவழும் முகத்துடன் போஸ் கொடுத்துள்ளார். அதில் வேறு விவரங்கள் இல்லை.

மத்தியபிரதேசத்தில், அஜித் ‘பைக் டூர்’ பயணம் செய்திருக்கலாம் என சமூக வலைத்தளங்களில் செய்தி உலா வருகிறது.

இதனிடையே ‘விடா முயற்சி’ படப்பிடிப்பு ஜுன் மாதத்துக்குள் முடிந்து விடும் என்றும், அதன்பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தில் அஜித் நடிப்பார் என்றும் சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் திடீரென அஜித் ’பைக் டூர்’ கிளம்பி விட்டார்.

பயணம் முடிந்து என்றைக்கு அஜித் திரும்புவார்? விடா முயற்சி படப்பிடிப்பு மீண்டும் எப்போது? அடுத்த படமான ‘குட் ..பேட்.. அக்லி’ ஷுட்டிங் குறிப்பிட்ட தேதியில் தொடங்குமா? என்பன போன்ற வினாக்கள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளன.

– பாப்பாங்குளம் பாரதி.