Take a fresh look at your lifestyle.

மக்களின் மனதில் நிற்பவர் யார்?

திரைத் தெறிப்புகள்- 6 :

கேட்கும் போதே மனதுக்குள் உற்சாகத்தையும், நம்பிக்கையையும் ஊட்டும் சில திரைப்படப் பாடல்களில், 1966-ல் வெளிவந்த ‘மன்னாதி மன்னன்’ படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலும் அடங்கும்.

“அச்சம் என்பது மடமையடா.
அஞ்சாமை திராவிடர் உடமையடா.
ஆறிலும் சாவு, நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா…”.

என்று துவங்கும் இந்தப் பாடலை எழுதியவர் கவியரசர் கண்ணதாசன்.

இந்தப் பாடலை அடர்த்தியான குரல் வளத்துடன், மன எழுச்சி ஊட்டும் விதத்தில் பாடியிருப்பார் டி.எம். சௌந்தர ராஜன்.

திராவிட உணர்வை மையமாகக் கொண்ட இந்தப் பாடல், இந்தப் படத்தில் நடித்த நாயகனான எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்த பாடல்.

பயணங்களில்போது இந்தப் பாடலைக் கேட்பது அவருக்கு பிடித்தமான ஒன்றாக இருந்திருக்கிறது.

வைகோ உள்ளிட்டவர்களுக்கும் இந்தப் பாடலின் வீரியம் பிடித்தமான ஒன்றாக இருக்கிறது.

“கருவினில் மலரும் மழலையின் உடலில்
தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை.
களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம்
காத்திட எழுவான் அவள் பிள்ளை. “

என்று பாடியபடி  குதிரைகளைப் பூட்டிய  வண்டியில் பயணப் பட்டபடியே எம்.ஜி.ஆர். பாடிச் செல்லும் காட்சியும், அப்போது இடையே பல்லக்கில் வெளிப்படும் பத்மினியின் அழகான முகமும் நினைவில்  நிற்கும் காட்சி.

இந்தப் பாடலில் நிறைவாக வரும் கவியரசரின் இந்த வரிகள் எம்.ஜிஆரைக் கொண்டாடும் கோடிக் கணக்காண ரசிகர்களின்  நெஞ்சில் மறக்காத ஒன்றாகப் பதிந்திருக்கும்.

“வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்?
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார் ”.

எம்.எஸ். விஸ்வநாதன், ராமமூர்த்தியின் இசையமைப்பில் உருவான இந்தப் பாடலைக் கேட்கும் தருணம் காலத்தை மீறிய கம்பீரத்துடன் எப்போதும் திகழும்.

-மணா.