திரைத் தெறிப்புகள் – 32:
சில்லென்று ஒரு கோவில் மணியின் ஒலி அதிர்வைப் போல இனிமையான மென்மையோடு இருக்கிறது தனித்துவமான பாடகியான பி. சுசீலாவின் குரல்.
சில பாடல்களை அவர் தனித்துப் பாடும்போது கேட்கும் அந்தக் கணம் மனதுக்குப் பரவசமூட்டும் கணமாக இருக்கும்.
1961-ம் ஆண்டில் வெளிவந்த ‘பாலும் பழமும்’ படத்தில் விஸ்வநாதன் – ராமமூர்த்தியின் இசையமைப்பில் சுசீலா பாடியிருக்கும், “ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்” என்றும் துவங்குப் பாடலைக் கேட்கும்போது நமது செவிக்கருகில் ஆலயமணியின் அசலான ஓசையை நாம் கேட்க முடியும்.
“ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்.
அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்.
என் இறைவன் அவனே அவனே
என பாடும் குரல் கேட்டேன்.
உன் தலைவன் அவனே அவனே
எனும் தாயின் மொழி கேட்டேன்…”
என்று துவங்கும் இந்தப் பாடலைத் திரைப்படத்தில் கதாநாயகியான சரோஜா தேவி வாயசைத்து நடித்திருப்பார்.
கருப்பு வெள்ளைத் திரைப்படத்தில் அவர் முகத்தில் வெளிபடுத்தியிருக்கும் பாவங்களைப் பார்க்க அருமையாக இருக்கும்.
இறைமை ததும்பும் விதமாக இந்தப் பாடல் இப்படித் தொடர்ந்திருக்கும்…
“நிலவும் மாலைப் பொழுதினிலே
என் இறைவன் வந்தான் தேரினிலே.
ஏழையின் இல்லம் இதுவென்றான்
இரு விழியாலே மாலையிட்டான் –
என் இறைவன் அவனே அவனே
என பாடும் குரல் கேட்டேன்.
உன் தலைவன் அவனே அவனே
எனும் தாயின் மொழி கேட்டேன்…”
என்று மிக மென்மையாக நகரும் இந்தப் பாடலை தனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்றாக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் குறிப்பிட்டிருப்பது ரசனைக்குரிய ஒன்று.
“காதல் கோயில் நடுவினிலே
கருணை தேவன் மடியினிலே
யாரும் அறியாப் பொழுதினிலே
அடைக்கலம் ஆனேன் முடிவினிலே -“
என்று இந்தப் பாடல் நிறைவடைந்திருக்கும் விதமும், உரிய ராகத்துடன் அதற்குக்கேற்ப குரல் ஆளுமையுடன் பி. சுசீலா பாடியிருக்கும் விதமும் அற்புதம்.
இந்தப் பாடலைக் கேட்கும் பொழுதெல்லாம் ஒரு மெல்லிய பறவையின் ஒலியைப் போல மென்மையான அதிர்வை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது.
– மணா.