Take a fresh look at your lifestyle.

அன்பில் அவன் – அருமையான காதல் கதை!

அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன், கதிர் பாலு, மகா டெல்லி கணேஷ், சாபுமோன் அப்துசமத், ரேவதி நடிப்பில் விக்னேஷ் ராஜாவின் கதைக்கு, அசோக் செல்வன், விக்னேஷ் ராஜா ஆகியோருடன் சேர்ந்து திரைக்கதை எழுதி, ஆர்.கார்த்திகேயன் இயக்கி இருக்கும் படம்.

ஐங்கரன் இன்டர்நேஷனல் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் சார்பில் கே.கருணாமூர்த்தி, அசோக் செல்வன், அபிநயா செல்வம் ஆகியோர் தயாரிப்பு.

முதலில் ‘அன்பில் அவன்’ என்ற அழகான தமிழ் பெயருக்கு படக் குழுவுக்கு வாழ்த்துகள். இது தமிழ் சினிமாதான் என்பதை இது போன்ற சம்பவங்கள்தான் உணர்த்துகின்றன.

பணக்கார பெண் இயலுக்கும் (பிரீத்தி முகுந்தன்) துணிச்சலான இளைஞன் சூர்யாவுக்குமான (அசோக் செல்வன்) காதல் காலம் மிக உற்சாகமாக இருந்த நிலையில், அந்த காதலை இயலின் குடும்பம் எதிர்க்க, 

குடும்பம், சொத்து எல்லாவற்றையும் உதறிவிட்டு வந்து சூர்யாவை கல்யாணம் செய்து கொள்கிறாள் இயல்.

இருவரும் வேலைக்குப் போய் ஓய்வொழிச்சல் இல்லாமல் உழைத்த நிலையில் மேலதிகாரிகளின் சித்திரவதையில் நொந்து போகிறார்கள்.

ஒரு நிலையில் தாங்க முடியாமல், வேலைகளை விட்டுவிட்டு, இருக்கிற பணத்தை எல்லாம் போட்டு, கைமாத்து மற்றும் லோன் எல்லாம் வாங்கி, தேனி பக்கத்தில் மலைவாசஸ்தலத்தில், ஒரு வீட்டை வாங்கி தரக் கூட்டல் செய்து, 

சுற்றுலா வருபவர்களுக்கு சொந்த வீட்டில் தங்கி இருப்பது போல உணர்வு மற்றும் உணவு தரும், ஹோம் ஸ்டே என்ற தொழிலில் ஈடுபட முடிவு செய்கிறார்கள்.

ஜமீன்தாரி வம்சத்தில் பிறந்து, ஒரு சாதாரண மனிதனை காதலித்து திருமணம் செய்து கொண்டு வாழ்ந்த ராணி பத்மினி (ரேவதி) என்பவருக்கு சொந்தமான பங்களாவை, அவர் மறுத்தும் வற்பறுத்தி விலைக்கு வாங்குகிறார்கள்.

பல பேர் விலைக்கு கேட்டும் பத்மினி தராத அந்த பங்களாவை எங்கிருந்தோ வந்த இவர்கள் வாங்கியது, அந்த ஏரியா எம்.எல்.ஏ (கதிர் பாலு) உள்ளிட்ட பலருக்கும் ஆச்சரியம் மற்றும் எரிச்சல். 

வீட்டை வாங்கி, நகரில் இருந்து பெட்டி படுக்கை கட்டிக் கொண்டு மலைவாசத்தலம் வரும்போதே, எம்எல்ஏ-வின் வக்கீல் மார்ட்டின் (சாபுமோன் அப்துசமத்) மற்றும் அடியாட்களின் வன்முறைக்கு ஆளாகிறார்கள்.

வீட்டை மேம்படுத்த முயலும்போது பல்வேறு அரசு துறைகளும் வேலையைத் தொடர முடியாமல் தொந்தரவு செய்கின்றன. நிம்மதி போகிறது.

வேறு வழி இல்லாமல் தங்களை அடித்து அவமானப்படுத்திய வக்கீல் மற்றும் அதே அடியாட்கள் இவர்கள் மூலம் எம்எல்ஏ-விடமே உதவிக்கு போக வேண்டி இருக்கிறது.

போலீஸ் இன்ஸ்பெக்டர் (மகா டெல்லி கணேஷ்) ஒருவர் இயலிடம் தவறாக நடக்க முயல்கிறார்.

வீட்டை சரி செய்யும் வேலைகளுக்கு பெரும் தொகையை கேட்கிறார் எம்எல்ஏ. தனக்கு தனியாக பத்து பர்சன்ட் கமிஷன் கேட்கிறார் வக்கீல்.

கைமாத்தாக பணம் கொடுத்த நண்பன் பணம் கேட்கிறான்.

டென்சன் பெரிதாகி காதல் தம்பதிகளுக்குள் கருத்து வேறுபாடு வெடிக்கிறது.

இவர்களின் வீட்டில் யானைத் தந்தத்தை பதுக்கி வைக்கிறார் எம்எல்ஏ.

எம்எல்ஏ வாங்க முடியாத பங்களாவை தான் வாங்கியது பொறுக்காத எம்எல்ஏ தான் எல்லா பிரச்னைகளுக்கும் காரணம் என்பதும் ஏதோ ஒரு வகையில் தன்னைக் குற்றவாளி ஆக்கி சிறையில் தள்ளிவிட்டு பங்களாவை அபகரிப்பதுதான் எம்எல்ஏ-வின் திட்டம் என்பதும் சூர்யாவுக்கும் இயலுக்கும் தெரிய வருகிறது.

ஒருநிலையில் எல்லாமும் சீரியஸ் ஆகி, சூர்யாவையும் இயலையும் அந்த வீட்டில் வைத்து கொன்று புதைத்து விட்டு, பங்களாவை அபகரிக்க எம்எல்ஏ, வக்கீல் மற்றும் அடியாட்கள் கூட்டம் களம் இறங்க, போலீசும் துணை நிற்க,

சூர்யா – இயல் இவர்களின் காதல், வாழ்க்கை, கனவுகள், உயிர் எல்லாம் என்ன ஆனது என்பதே படம். 

செல்வந்த பெற்றோரால் புறக்கணிக்கப்படும் காதல், பிழைப்பதற்காக கடுமையான உழைப்பு, அதில் வரும் சலிப்பு, வெறுப்பு, வித்தியாசமான சொந்தத் தொழில் முயற்சி, அங்கே வரும் பிரச்னை என்று… அடிப்படைக் கதையில் அடர்த்தி இருக்கிறது. பாராட்டுக்கள். 

தனக்குப் பிடித்த ஓர் இடத்தை பிடிவாதம் பிடித்து வாங்க, அதிலிருந்து கிளம்பும் ஓர் எதிர்பாராத பூதம் என்ற திருப்பமும் நன்றாக இருக்கிறது.

பொருத்தமான வீடு தேடும்போது, காரில் சிக்கி அடிபட்டு ரத்தம் சிந்தும் பறவையைப் பார்த்த திசையில் அந்த வீடு இருப்பது,

காரில் ஏற்றி வரும் பொருள் கயிறு அறுந்து சிதற, வழியில் கிழிந்து கிடக்கும் ஒரு பேனர் துணியை எடுத்து அதைக் கட்ட, அந்த பேனரில் இருக்கும் அரசியல்வாதியின் ஆட்கள் வேண்டுமென்றே பேனரை கிழித்து விட்டதாகச் சொல்லி, வழி மறித்து அடித்து பணம் வாங்குவது,

யாரை மறுபடியும் பார்க்கவே கூடாது என்று நினைப்போமோ அவர்களிடமே உதவி கேட்டு போய் நிற்க வேண்டிய நிலை, அதனாலேயே மனசாட்சி இல்லாமல் அவர்கள் செய்யும் அராஜகங்கள்,

முறைத்து செய்யும் கொடுமைகளைவிட சிரித்து செய்யும் கொடுமைகள்.. என்று திரைக்கதையில் அட போடவும் விஷயங்கள் உண்டு. அருமை.

அசோக் செல்வன் – பிரீத்தி முகுந்தன் ஜோடி பிரமாதம்.

ஆரம்ப காலக் காதல் நாட்கள், வேலை செய்யும் காதல், வித்தியாச தொழில் ஆசை, பிரச்சனைகளை சமாளித்தல், கருத்து வேறுபாடு, ஒரு நிலையில் உறுதி என்று கடைசிவரை இந்த ஜோடியின் பொருத்தம் சிறப்பு.

கோவிந்த் வசந்தாவின் பாடல் இசை சிறப்பு என்றால், பின்னணி இசை படத்துக்கு மிகப் பெரிய பலம். 

கவுதம் ராஜேந்திரனின் ஒளிப்பதிவு மலைப்பாங்கான பகுதியின் இயற்கை அழகை கண்ணுக்கு விருந்தாக படம் பிடித்து இருக்க, செல்வாவின் படத்தொகுப்பு அந்த ஷாட்களை சரியான இடங்களில் பிட்ச் செய்திருப்பது அருமை.

படம் முழுக்கவே பொருத்தமாக இருந்தாலும் இடைவேளைக்கு முந்தைய கருத்து வேறுபாடு சண்டை காட்சியில் அசோக் செல்வன் – பிரீத்தி முகுந்தன் இருவரும் பிரம்மாதமாக நடித்துள்ளனர்.

நாம் பார்ப்பது சினிமா அல்ல. ஒரு நிஜ ஜோடியின் சண்டை என்ற அளவுக்கு அவ்வளவு சிறப்பான நடிப்பு, எழுத்து மற்றும் இயக்கம். சபாஷ். இதற்கு இணையான ஒரு காட்சி கூட அப்புறம் படத்தில் வரவில்லை.

படம் முழுக்கவே இருவரின் நடிப்பும் சிறப்பானது. ஒருவருக்கு ஒருவர் சோடை போகவில்லை. அதுவும் இயல் என்ற அழகிய தமிழ்ப் பெயருக்கு ஏற்ப பிரீத்தியின் கடல் கண்கள் அழகாக அலைபாய்கின்றன.

கதிர் பாலு, மகா டெல்லி கணேஷ், சாபுமோன் அப்துசமத் இவர்களும் சிறப்பான நடிப்பைக் கொடுத்துள்ளனர்.  

எல்லாம் சரிதான். ஆனால், முக்கியமான சமயத்தில் முட்டையை உடைத்து விடுகிறார்கள்.

ஒரு கதை – திரைக்கதை வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதோடு ஏற்றுக் கொள்ளும் படியாகவும் இருக்க வேண்டும். ஒரு கட்டத்தில் சிறப்பான உயரத்துக்கு போக வேண்டும்.

Different as well as acceptable and also extraordinary என்ற விதிகளுக்குள் ஒரு நல்ல கதை திரைக்கதை வர வேண்டும்.

ஹோம் ஸ்டே பிசினஸ் செய்ய விரும்பும் ஜோடி என்ற விஷயம் மூலம் அந்த வித்தியாசம் வந்து விடுகிறது. தொழில்நுட்ப விஷயங்களும் சிறப்பாக இருக்கிறது. 

ஏற்றுக் கொள்ளும்படி இருக்கிறதா என்ற இடத்தில் சுரத்து குறைகிறது. 

படித்த – பிசினஸ் செய்ய ஆசைப்படுபவர்கள், யாரும் துணை இல்லாத இடத்தில் பிசினஸ் செய்யப் போவார்களா? அப்படியே போனாலும் – என்னதான் ரொம்பப் பிடித்து இருந்தாலும் பிரச்சனை உள்ள இடத்தை வாங்குவார்களா?

அது கூட ஓகே என்றே வைத்துக் கொள்வோம்.

அவர்கள் என்ன புதன் கிரகத்தில் இருந்து செவ்வாய் கிரகம் போய் வீடு வாங்குகிறர்களா? கல்லூரி நண்பர்கள், வேண்டியவர்கள் என்று அவர்ளுக்கு வேறு யாருமே துணை இல்லையா?

ஒரு மலை வாசத்தலத்துக்கு போய் வீடு வாங்கி விட்டதால், ஒரு இன்ஸ்பெக்டர் வீடு புகுந்து தவறாக நடக்க பல முறை முயல்வார் எனில், அந்த காதல் ஜோடி மற்ற ஊர்களில் உள்ள தங்கள் நண்பர்கள், உறவினர்களின் உதவி கேட்க மாட்டார்களா? 

இயலின் குடும்பம்தான் அவளை உதறி விட்டது. சூர்யாவுக்கு குடும்பம், உறவுகள் யாருமே இல்லையா? அவரை எங்காவது லெபாரட்டரியில் செய்தார்களா? அட செஞ்சவராவது உதவிக்கு வர மாட்டாரா?

என்னதான் எம்எல்ஏ என்றாலும் காதல் தம்பதிக்கு அந்த ஊர் புதிய இடம் என்றாலும் ஐம்பது, நூறு பேர் ஒரு வீட்டுக்குள் புகுந்து எப்போதும் டார்ச்சர் செய்து கொண்டே இருக்க முடியுமா?

செல்போன் சிக்னல் பிரச்சனை என்றால் சிக்னல் உள்ள பகுதிக்கு இவர்கள் வரவே மாட்டார்களா?

இவர்கள் ரெண்டே பேர் மட்டும்தான் அங்கே போவார்களா? இவர்கள் தரப்பில் இருந்து நண்பர்கள், வேலையாட்கள் யாரும் மலைவாசஸ்தலத்துக்கு உடன் வரவில்லையா?

இப்படி ஏற்றுக் கொள்ளும்படி இருக்க வேண்டிய விஷயங்களிலும் சிக்கல். ஒரு காதல் ஜோடியின் வாழ்க்கை முன்னேற்ற ஆசை என்ற யதார்த்தமான கதைக்கு நிகழ்வுகளும் இயல்பாக இருந்தால்தானே ஈர்க்கும்.

பரபரப்பு, பதட்டம் கூட்டுகிறேன் என்று யதார்த்தம் மிஸ் ஆனால் வீடியோ கேம் உணர்வு வந்து விடும்.

சரி இவை எல்லாம் கூட ஓகே. அவர்கள் நினைத்துப் பார்க்காத சூழல்கள் என்றே வைத்துக் கொள்வோம். ஒரு நிலையில் extraordinary என்ற ஒன்றாவது வரணும் இல்லையா?

காதல் வாழ்வு, கல்யாணம், முன்னேற்றக் கனவு, தொழில் ஆசை, அதில் சிக்கல், கருத்து வேறுபாடு, ஏதோ ஒரு வகையில் பிரியாத காதல்…

ஒரு நிலையில், இரவில் அருகில் வேறு வீடுகள் இல்லாத சூழ்நிலையில் எம்எல்ஏ ஆட்கள், ரவுடிகள், போலீஸ் எல்லாரும் கொலை வெறியோடு சுத்துப் போட்டு விட்டார்கள்.

இந்த நிலையில் கணவன் மனைவி இருவரும் கிஸ் அடிக்கும் வேகத்தை எல்லாம் பார்த்தால் என்னமோ அட்டகாசமாக இருவரும் செய்யப் போகிறார்கள்… 

மூன்று பேர் சேர்ந்து எழுதி இருக்கும் கதையில் ஏதோ ஒரு அட்டகாசமாக விஷயம் சொல்லப் போகிறார்கள் என்று ஆவலுடன் காத்திருந்தால்,

மொத்த கிளைமாக்ஸையும் சண்டை இயக்குநர் பீட்டர்ஹெயினிடம் கொடுத்து விட்டு, எழுத்தாளர்கள், இயக்குநர் எல்லாம் ஓரமாக உட்கார்ந்து விட்டார்கள்.

சூர்யாவும் இயலும் துப்பாக்கி, கத்தி, கபடா, தட்டு முட்டு சாமான் எல்லாவற்றையும் எடுத்து வீட்டுக்குள் நுழையும் முன்னூத்தி சொச்சம் போரையும் அடி வாங்கி அப்புறம் அடித்து,

உதை வாங்கி அப்புறம் உதைத்து, மிதி வாங்கி அப்புறம் மிதித்து, குத்து வாங்கி அப்புறம் குத்தி, துப்பாக்கி சூடு வாங்கி அப்புறம் சுட்டு, சிவப்பு பெயிண்டை மேலே ஊத்திக் கொண்டு அப்புறம் அவர்கள் மேல் ஊத்தி…

எல்லாரையும் கொன்று விட்டு குற்றுயிரும் குலை உயிருமாக மயங்கி, அப்புறம் ஹேப்பி என்டிங் தருவதற்காக குபீர் என்று கண் முழிக்கிறார்கள்.

ரவுடி பையனின் மனமாற்றம் என்ற ஒரு சிறு விஷயத்தை தவிர, சுமார் இருபது நிமிடம் ஞாயிற்றுக் கிழமை கசாப்பு கடை மாதிரி மேலே சொன்ன ஒரே விஷயம்தான்.

அதை, முக்கால் மணி நேரம் முன்னாடியே செஞ்சு இருந்தால் புண்ணியமா போயிருக்கும்.

அதனால் முடிங்கப்பா என்று மனசு மானசீகமாக கதற ஆரம்பித்து விட்டது.

மொத்தத்தில் அன்பில் அவன்… அவன் இருக்கிறான். ஆனால், அன்புக்கு பதில் வம்புதான் இருக்கிறது.

— சு. செந்தில் குமரன்