Take a fresh look at your lifestyle.

TN 2026: இன்றைய அரசியலை முழுமையாகப் பேசும் படம்!

நட்டி நட்ராஜ், தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, ஷ்ரிதா ராவ், சாந்தினி, யாஷிகா ஆனந்த், ரெடின் கிங்ஸ்லி நடிப்பில், தம்பி ராமையா கதை வசனத்தில், உமாபதி ராமையா இயக்கியிருக்கும் படம். கண்ணன் ரவி குரூப் சார்பில் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி தயாரிப்பு.

கோல்டன் ஸ்டார் என்பதன் தமிழ் மொழி பெயர்ப்பு தங்க நட்சத்திரம். அதையே ஆங்கிலத்தில் எழுதினால் THANGA NATCHATHTHIRAM. அதை சுருக்கினால் TN. கதை நடப்பது 2006.

மத்தியப் பிரதேசத்தில் குல்கந்து விற்றுப் பிழைத்துக் கொண்டிருந்த குமார் என்ற – தமிழே தெரியாத – ஆனால், அப்பா தமிழர் என்று சொல்லிக் கொள்ளும் நபர் (நட்டி நட்ராஜ்).

எப்படியோ ஒரு தமிழ்ப் படத்தில் ஹீரோவாக நடித்து விட, இதுவரை இல்லாத வித்தியாசமான ஸ்டைலில் அவர் நடிப்பது முதல் படத்திலேயே மக்களுக்குப் பிடித்து விடுகிறது.

அடுத்த எம்.ஜி.ஆர் குல்கந்து குமார்தான் என்று எல்லோரும் சொல்ல, கோவைப் பகுதியில் ஆயிரம் ஏக்கர் நிலம் வைத்திருக்கும் மன்றாடியார் என்ற ஒரு மிராசுதார் (தம்பி ராமையா) குல்கந்து குமாரை அடுத்த எம்.ஜி.ஆர் ஆக்க உறுதி கொள்கிறார்.

ஒரு சூழலில், கே.வி.எம் நிறுவனம் தயாரிக்கும் படம் ஒன்றில் வில்லனாக நடிக்க குல்கந்து குமார் ஒத்துக்கொள்ள, ஹீரோவாகத்தான் குல்கந்து நடிக்க வேண்டும் என்பதற்காக, வாங்கிய பணத்தை கேவிஎம் நிறுவனத்திடமே திருப்பிக் கொடுத்துவிட்டு, குமாரை ஹீரோவாக வைத்து சொந்த செலவில் பல படங்கள் எடுக்கிறார் மன்றாடியார்.

பரத நாட்டியக் கலைஞர் ஒருவரை (ஷ்ரிதா ராவ்) காதலித்து மணக்கும் குல்கந்து குமார், நடிக்கும் நடிகைகளோடு எல்லாம் நெருங்க, மனைவி விவாகரத்துக்கு முயற்சிக்கிறார்.

ஆனால், குல்கந்து குமாரின் இமேஜ் போகும்; மார்க்கெட் போகும் என்பதால், போராடி கணவன் மனைவி பிரச்னையை சுமூகமாக முடித்து வைக்கிறார் மன்றாடியார்.

குல்கந்து குமாரை வைத்து நேர்மை நீதி என்று எம்.ஜி.ஆர். பாணியில் மன்றாடியார் எடுக்கும் படங்கள் ஓடாமல் போக,

அம்மாவை அடிப்பது, பொண்டாட்டியைக் கொடுமை செய்வது, தவறான பழக்க வழக்கங்களை ஊக்குவிப்பது போன்ற செயல்களை செய்யும் ஹீரோவாக பல கதைகளை குல்கந்து குமார் தேர்வு செய்து நடிக்க, அவை பெரும் வெற்றி பெறுகின்றன.

ஆண்களும் பெண்களும் குத்தாட்டம் போட்டு, குல்கந்து குமாரின் வெறி பிடித்த ரசிகர்களாக மாறுகின்றனர். ரசிகர் படை பெருகுகிறது.

இப்போது குல்கந்து குமார் சொல்வதை மன்றாடியார் கேட்கும் நிலை.

ஒரு நாள் குல்கந்து குமார் தன வீட்டுக்கு காரில் போய்க் கொண்டு இருக்க, அரசியல் கட்சி ஊர்வலம் ஒன்று நடக்க, அவர் வீட்டுக்கு போகவிடாமல் அவரை தடுக்கும் போலீஸ்,

“நீ படத்துக்கு 200 கோடி வாங்கினா போதுமா? அரசாங்க அதிகாரியை விட நீ முக்கியமா? காருல வெயிட் பண்ணு. இல்லன்னா இறங்கி நட” என்று சொல்ல, அரசியலுக்கு வர ஆசை வருகிறது குல்கந்து குமாருக்கு.

அரசியல் அறிவே இல்லாத – குல்கந்து குமாரின் முட்டாள்தனமான ரசிகர் கூட்டம் வெறி பிடித்து அலைகிறது.

மன்றாடியார், அது போல மற்ற இரண்டு பேர் (எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு) சேர்ந்து, இந்த ரசிகர் கூட்டத்தை வைத்து குல்கந்து குமாரை முதல்வர் ஆக்கி அதிகாரத்தைக் கைப்பற்ற நினைத்து, தேர்தல் செலவுக்காக பல பணக்காரர்களிடம் இருந்து பல கோடி வாங்கி செலவு செய்ய… நடந்தது என்ன என்பதே படம்.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு வந்திருக்கும் முழுமையான அரசியல் படம். நிஜ சம்பவங்களில் இருந்து தம்பி ராமையா எழுதி இருக்கும் கதைக்கு மிக இயல்பாக காட்சிகள் வைத்து அருமையான ஷாட்களோடு சிறப்பாக இயக்கி இருக்கிறார் உமாபதி ராமையா.

முதல் படம் வெற்றி பெற்றும் ஹீரோ தங்குவதற்கு நல்ல ரூம் கூட தராத பட நிறுவனம், மக்கள் கொண்டாடிய பஞ்ச் டயலாக்கை குல்கந்து ஒரிஜினலாக பேசும்போது நடக்கும் காமெடி, மன்றாடியாரிடம் குல்கந்து குமார் பேசும் வடக்கத்தி தமிழ், அதில் தெறிக்கும் காமெடி என்று ஆரம்பக் காட்சிகள் அதிரி புதிரி காமெடி.

அந்த வகையில் இடைவேளை வரை சும்மா ரெக்கை கட்டிப் பறக்கிறது படம்.

“என்னது முதல் அமைச்சர் ஆயிட்டா 24 மணி நேரமும் போனை ‘ஆன்’லேயே வைக்கணுமா? அப்போ ஆறு மணிக்கு மேல காலை வரைக்கும் யாரு தண்ணி அடிக்கிறது?. என் ஆளுகளோட எப்ப ஜாலியா இருக்கறது?” என்று குல்கந்து குமார் அதிரும் காட்சி எல்லாம் ரகளை.

கல்யாணம் ஆன குல்கந்து குமார் தன்னோடு நடிக்கும் நடிகையையும் உடன் வைத்துக் கொள்ள, விஷயம் வெளியே தெரிந்த உடன் உலகத்தின் பார்வைக்கு அந்த நடிகையை மன்றாடியாருக்கு ‘கல்யாணம்’ செய்து வைத்து விட்டு குல்கந்து குமார் தொடர்ந்து ‘மெயின்டைன்’ செய்யும் காட்சிகள் எல்லாம்.. யப்பா!

”அடுத்து எங்க குல்கந்து குமார்தான் முதல்வர் ஆவார்” என்று ரசிகர் சொல்ல, ”முதல்வர் ஆக எத்தனை தொகுதிகள்ல ஜெயிக்கணும்?” என்று பத்திரிகையாளர் ஒருவர் கேட்க “அஞ்சு தொகுதியில ஜெயிச்சா போதும்” என்று அந்த ரசிகர் சொல்வது எல்லாம் இப்போது நடக்கிற விஷயம்தானே.

அரசியல்வாதி ஆன பிறகு குல்கந்து குமாரின் நடை உடை பாவனைகளிலும் ‘விஜய்’ தன்மை இருந்தாலும் கதையில் அதற்கு இணையாக ‘ரஜினி’ தன்மையும் வருகிறது. ‘கேவிஎம்’ விஷயம் விஜயகாந்த் சம்மந்தப்பட்டது.

சொல்லப் போனால் குல்கந்து என்ற பெயரை எம்.ஜி.ஆருக்கான குறியீடாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

சற்று அதிகமாக நடித்து இருந்தாலும் சம்மந்தப்பட்ட நடிகர்களின் ரசிகர்களிடம் பெரும் கோபத்துக்கு ஆளாக வாய்ப்புள்ள சூழ்நிலையை, மிக அடக்கி வாசித்து நடித்து கூல் செய்திருக்கும் நட்டி நட்ராஜ் பாராட்டுக்குரியவர்.

தம்பி ராமையா வழக்கம் போல மிடுக்கு, நடிப்பு, உணர்வு துடிப்பு, காமெடி, பஞ்ச், வெடிப்பு என்று ரசிக்கவும் சிரிக்கவும் வைக்கிறார். படத்தில் இந்த இருவருக்கும்தான் ரன்னிங் ரோல்.

எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு கவனிக்க வைக்கிறார்கள்.

கணவனின் பெண் மோகம் அறிந்து கோபப்பட்டு கொந்தளிக்கும் காட்சியில் ஷ்ரிதா ராவ் கவனிக்க வைக்கிறார்.

ரெடின் கிங்ஸ்லி சில காட்சிகளில் ஸ்கோர் செய்கிறார்.

வசன ஆதிக்கம் கொண்ட இந்தத் திரைக்கதையில் பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவு, தர்புகா சிவாவின் இசை, ஆர்.தங்கத்தின் படத்தொகுப்பு ஆகியவை இயல்பு.

இரண்டாம் பாதியில் துண்டுத் துண்டாக காட்சிகள் நிற்கின்றன. குல்கந்து குமாரின் கதையில் இருந்து மன்றாடியாரை நோக்கி திரைக்கதை நகர்கிறது. தப்பில்லை. ஆனால், அதற்கு ஏற்றபடி மன்றாடியார் கேரக்டர் முதல் பாதியில் காட்டப்படவில்லை.

யதார்த்தம் சொல்லும் அரசியல் கதையில் தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு ஆகியோர் சண்டைபோடும் காட்சிகள் எல்லாம் படத்தை நீர்த்துப் போகச் செய்கின்றன.

உண்மைச் சம்பவங்களை வைத்து திரைக்கதை அமைக்கும்போது அவற்றை அப்படியே அடுக்கக் கூடாது.

அதில் இருந்து ஒன்றை கிரியேட் செய்ய வேண்டும். நாளை இப்படியும் நடக்க வாய்ப்பு உண்டு என்று ஒன்றை சொல்ல வேண்டும். அதை மணிவண்ணன் அட்டகாசமாக செய்வார். இதில் அது மிஸ்ஸிங்.

இப்படி ஒரு அரசியல் படத்துக்கு இருக்க வேண்டிய நச் கிளைமாக்ஸ் படத்தில் அமையவில்லை.

இப்படிச் சில குறைகள் இருந்தாலும் TN 2026 பிரபல நடிகர்களின் ரசிகர்களை உள்ளிழுக்கும் தன்மையோடு அரசியல் விழிப்புணர்வுப் படமாகவும் வந்துள்ளது.

– சு. செந்தில் குமரன்