புராணங்களில் புதைந்து போயிருந்த தமிழ் சினிமாவை, இளங்கோவன், பேரறிஞர் அண்ணா, கலைஞர் போன்ற தமிழ் பிதாமகன்கள் மீட்டனர்.
‘ஸ்வாமி’, ‘பிராணநாதா’ போன்ற சொற்கள் ‘அத்தான்’, ‘கண்ணாளா’ என அழகான ஒப்பனைகள் செய்து ஒப்பற்ற சொற்களாக மாறின.
ஜில்லா மாவட்டமானது… பொக்கிஷ அறை கருவூலமானது. மொத்தத்தில் தமிழ் வலிமைப் பெற்றது.
அண்ணாவின் கதைகளில் எளிய மனிதர்கள் கதாநாயகர்கள் ஆகினர். கலைஞரின் வாள் தமிழ் வீச்சு, பழமையை வேரறுத்தது. இளங்கோவின் கண்ணகி, மானமுள்ள தமிழச்சியாய் மறுபிறப்பு எடுத்தாள்.
ஆனால், என்னதான் புராணங்களை இறை மறுப்பாளர்கள் ஏற்கவில்லை என்றாலும், அவர்களையும் தனது தமிழால் ஈர்த்தவர் ஒருவர் உண்டு.
அவர்தான் ஏ.பி.நாகராஜன் என்கிற அக்கம்மாப்பேட்டை பரமசிவம் நாகராசன். கடவுள் மறுப்பாளர்களையும், அவரது கன்னித் தமிழ் கட்டிப்போட்டது.
அவரது பக்திப் படங்களில் தமிழ்தான் கதாநாயகன். எண்ணங்களில் உதித்த தமிழ், கலை வண்ணங்களாக திரைப்படங்களில் பிரதிபலித்தன.
நடிகர், கதையாசிரியர், வசனகர்த்தா, பாடலாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் ஏ.பி.நாகராஜன்.
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள அக்கம்மாப்பேட்டையில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த நாகராஜன், சிறு வயதிலேயே கலை ஆர்வம் உந்தித் தள்ள, 7 வயதில் டி.கே.எஸ். சகோதரர்களின் நாடகக் குழுவில் சேர்ந்து, தமிழ் இலக்கியம், இலக்கணம், தமிழ் ஒலிப்பு என்பனவற்றில் பயிற்சி பெற்றார்.
அக்குழுவில், பல சிறப்பான வேடங்களில் நடித்தும் வந்தார். ம.பொ.சி.யின் தமிழரசுக் கழகத்தில், ஈடுபாடு உடையவராக இருந்தார்.
1953-ம் ஆண்டில் இவரது நாடகமான ‘நால்வர்’ திரைப்படமாக்கப்பட்டபோது, அதில் திரைக்கதை, வசனம் எழுதினார்.
அதுதான் அவரது திரைப்பட நுழைவு வாயில். ‘நால்வர்’, ‘நம் குழந்தை’ மற்றும் ‘நல்லத் தங்காள்’ திரைப்படங்களிலும் நாகராஜன் நடித்துள்ளார்.
1956-ல் சிவாஜி கணேசன் நடித்த, ‘நான் பெற்ற செல்வம்’ திரைப்படத்திற்கு, நாகராஜன்தான் திரைக்கதை வசனம்.
அதில் நடித்த சிவாஜி கணேசனுடன் ஏற்பட்ட அறிமுகம், ‘திருவிளையாடல்’, ‘திருவருட்செல்வர்’, ’திருமால் பெருமை’ உள்ளிட்ட பக்தி படங்களிலும் சமூகப் படங்களிலும் தொடர்ந்தது.
திருவிளையாடலில் ஏ.பி.நாகராஜன் ‘புலவர் நக்கீரர்’ வேடத்தில் நடித்தார். சிவபெருமானும், நக்கீரரும் வாதம் செய்யும் காட்சிகளில் தமிழ் மேலும் தன்னை அழகுப்படுத்திக் கொண்டது.
‘மாங்கல்யம்’ படத்தில், திரைக்கதை வசனத்தை எழுதியதுடன், நடிக்கவும் செய்தார்.
1957-ம் ஆண்டில், நடிகர் வி.கே.ராமசாமியுடன் இணைந்து, ஸ்ரீலக்ஷ்மி பிக்சர்ஸ் என்ற பெயரில் மக்களை பெற்ற மகராசி, நல்ல இடத்து சம்பந்தம் ஆகிய திரைப்படங்களைத் தயாரித்தார்.
தொடக்கத்தில் சமூக சம்பவங்களையொட்டி இயக்கிய நாகராஜன், 1960-களில் பக்திப் படங்களை இயக்கினார்.
கடவுள் மறுப்பாளர்களையும், கனிந்த தமிழால் ஈர்த்த ஏ.பி. நாகராஜனின் புகழ், தமிழ் உள்ளளவும் நிலைக்கும்.
பழம்பெரும் திரைப்பட இயக்குநர் ஏ.பி. நாகராஜன் பிறந்த நாள் இன்று (பிப்ரவரி 24,1928)
✍️ *லாரன்ஸ் விஜயன்*