1991-ம் ஆண்டு வெளியான ‘தளபதி’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் அரவிந்த்சாமி.
ரஜினிகாந்த், மம்முட்டி, நாகேஷ், ஷோபனா, பானுப்பிரியா உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படத்தை மணிரத்னம் இயக்கியிருந்தார்.
அந்தப் படத்தின் வெளிப்புற படப்பிடிப்பில் நடந்த சம்பவம் குறித்து அண்மையில் மெல்போர்னில் நடந்த ஒரு விழாவில் மனம் திறந்து பேசினார், அரவிந்த்சாமி.
அவர் சொன்னது:
“அப்போது நான் சினிமாவுக்கு புதிது. சினிமா கலாச்சாரம் தெரியாது. ஒரு நாள் படப்பிடிப்பு இடைவேளையில் களைப்பாக இருந்தது.
திறந்திருந்த ஒரு அறைக்குள் நுழைந்து, அங்கிருந்த ‘பெட்’டில் படுத்துத் தூங்கிவிட்டேன்; விழிப்பு வந்து எழுந்து பார்த்தால் மெத்தையின் அருகே தரையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தூங்கிக் கொண்டிருந்தார்.
எனக்குத் தூக்கி வாரிப்போட்டது. தனது மேக்கப் உதவியாளரிடம், “அரவிந்த்சாமி தூங்குகிறார். அவரை தொந்தரவு செய்ய வேண்டாம்.” எனச் சொல்லிவிட்டு, தரையில் படுத்துத் தூங்கியது பின்னர் தெரிய வந்தது.
சினிமா உலகில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை, அந்த சம்பவத்துக்குப் பிறகுதான் ஓரளவு கற்றுக்கொண்டேன்” என்று பேச்சை முடித்தார் அரவிந்த் சாமி.
அப்போது அரங்கில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கானோர் கரவொலி எழுப்பி, ஆரவாரம் செய்தனர்.
– பாப்பாங்குளம் பாரதி.