Take a fresh look at your lifestyle.

கைதி-2 வும் வரும்; விக்ரம்-2 வும் வரும்!

அடித்துச் சொல்லும் லோகேஷ்!

தொடர் வெற்றிகளைக் குவித்து வரும் ஒருவன், சின்ன சறுக்கலை எதிர்கொண்டால், அவனை துவைத்து எடுப்பது எல்லா துறைகளிலும் உண்டு. சினிமாவில் இது கொஞ்சம் அதிகம்.

தமிழ்த் திரை உலகில் அண்மைக்காலமாக ஓவராகவே கலாய்க்கப்பட்டு வருபவர், இயக்குநர்  லோகேஷ் கனகராஜ்.

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என தொடர் வெற்றிகளை கொடுத்தவர், தனது கடைசி படத்தில் வழுக்கினார்.

அந்தப் படம், ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’.

இந்தப் படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதி ஹாசன், சத்யராஜ்  என  பெரிய நட்சத்திர பட்டாளமே இருந்தது.

ரூ. 350 கோடி பட்ஜெட்டில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், உருவான இப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பதிவு செய்யவில்லை. இதனால் லோகேஷ் கனகராஜ் மீது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்தன. 

‘கூலி’ படம் மீதான விமர்சனங்களால்  ரஜினிகாந்த் – கமல்ஹாசன் இணைந்து நடிக்கவிருந்த  படத்தை இயக்கும் வாய்ப்பு லோகேஷுக்கு கிடைக்காமல் போனதாக செய்திகள் பரவின.

இது குறித்து அவர் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து நீண்ட விளக்கம் அளித்தார்.

அவரது பேட்டி;

“நீண்ட இடைவெளிக்கு பின்னர், ரஜினி சாரும், கமல் சாரும் இணைந்து நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பு என்னைத் தேடி வந்தது. ஒன்றரை மாதங்கள் இதற்காக இரவு, பகலாக உழைத்து ஒரு ஆக்ஷன் கதையை உருவாக்கினேன்.

ஆனால், அவர்கள் மென்மையான கதையை எதிர்பார்த்தனர். எனக்கு அந்த பாணி வராது என்பதால், நானே அந்தத் படத்திலிருந்து விலகி விட்டேன். இதுவே உண்மை.

இப்போது அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை இயக்க ஒப்புக்கொண்டுள்ளேன். பணிகள்  நடக்கின்றன். அந்தப் படத்தை முடித்த கையோடு, எனது அடுத்த படம் ‘கைதி 2’  தான்.

இதனைத் தொடர்ந்து விக்ரம்-2 படத்தை இயக்க முடிவு செய்துள்ளேன். இந்தத் திட்டத்தில் மாற்றம் இல்லை” என மனம் திறந்தார், லோகேஷ்.

– பாப்பாங்குளம் பாரதி.