‘மான் கராத்தே’ இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில், முன்னணி நட்சத்திர நடிகர் அருண் விஜய் நடிப்பில், ஸ்டைலிஷ் ஆக்சன் படமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘ரெட்ட தல’.
நாயகியாக சித்தி இத்னானி நடித்துள்ளார். இவர்களுடன் தான்யா ரவிச்சந்திரன், ஹரீஷ் பேரடி, யோகேஷ் சாமி, ஜான் விஜய், பாலாஜி முருகதாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக உருவாகியுள்ள இந்தப் படத்தை பாபி பாலச்சந்திரன், மிகப்பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார்.
டிசம்பர் 25 ஆம் தேதி, உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு, சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், நடிகர், நடிகையர், இயக்குநர் கிரிஷ் திருகுமரன், தொழில்நுட்பக் கலைஞர்கள், அதோடு, இயக்குநர் முத்தையா, இயக்குநர் கிஷோர் முத்துராமன், இயக்குநர் பாலாஜி வேணுகோபால், இயக்குநர் கோகுல், இயக்குநர் ஏ.ஆர்.கே. சரவணன், படத்தின் எடிட்டர் ஆண்டனி,
நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ்:
“திருக்குமரன் என்னுடைய உதவி இயக்குநர். கஜினி, துப்பாக்கி படத்தில் பணி புரிந்தார். எனக்கு மிகவும் பிடித்தமானவர்.
மிகவும் திறமைசாலி, இந்தப் படத்தின் தலைப்பு என்னுடையது தான். அதைக் கேட்டதும் கண்டிப்பாக கொடுப்பேன் என்று அவருக்கு தெரியும். இந்தப் படத்திற்கு அது சரியாக பொருந்தியுள்ளது.
கூடிய விரைவில் என்னுடைய தயாரிப்பிலும் ஒரு படம் இயக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
அருண் விஜய் 15 வருடங்களுக்கு பின்னும் அதே போல, இன்னும் அப்படியே இளமையாக இருக்கிறார். மிகப்பெரும் ஆச்சர்யம் தான். அவர் ஒரு கடின உழைப்பாளி. தமிழ் சினிமாவில் அவருக்கு இன்னும் பெரிய இடங்கள் கிடைக்கும் என்று நம்புகிறேன்.” என்றார்.
இயக்குநர் கிஷோர் முத்துராமன்:
இந்தப் படத்தின் தலைப்பில் அஜித் சாரை வைத்து, இயக்குநர் முருகதாஸ் இயக்குவதாக நிறைய செய்திகள் கேட்டேன்.
இன்று அதே பெயரில் அருண் விஜய்யை வைத்து திரு இயக்கியுள்ளார்.
படத்தின் டிரெய்லர் உலகத் தரத்தில் இருக்கிறது. படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றி அடையும்.

இயக்குநர் அறிவழகன்:
ஒரு உதவி இயக்குநருக்கு அவருடைய இயக்குநரின் தயாரிப்பில் படம் இயக்குவது என்பது ஒரு அதிர்ஷ்டம். எனக்கும் திருவிக்கும் அது அமைந்தது. நானும், திருவும் நீண்ட கால நண்பர்கள். எனக்கு இது மகிழ்வான தருணம்.
நடிகை சித்தி இத்னானி:
என்னுடைய முதல் படத்திற்கு பிறகு நான் கொஞ்சம் ரிலாக்ஸாக மாறி விட்டேன் என்று நினைக்கிறேன். அந்த எண்ணத்தை இந்தப் படம் ஆரம்பிப்பதற்கு முன்னர் விட்டு விட்டேன். இனிமேல் தேடலுடன் பணியாற்ற போகிறேன்.
இந்தப் படத்தில் எனக்கு மிகவும் முக்கிய கதாபாத்திரம். அதுவே என்னை இங்கு நிறுத்தியுள்ளது. கண்டிப்பாக அது உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன். தமிழ் கற்றுக் கொண்டே இருக்கிறேன்.
நடிகர் அருண் விஜய்:
படத்தின் கதை என்னை வெகுவாகக் கவர்ந்தது. எனக்கு சவாலாக இருந்தது. அப்போதே நான் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன்.
நடிகை சித்தி இத்னானி தனது முழு உழைப்பைக் கொடுத்துள்ளார். தமிழ் சினிமா இதற்கு பின் அவருக்கு பெரிய வரவேற்பு கொடுக்குமென நம்புகிறேன். படத்தில் தனுஷ் சார் ஒரு பாடலைப் பாடியிருப்பது சிறப்பு.
இந்தப் படத்தில் அதிக ஆக்சன் காட்சிகள் இருக்கிறது. கிளைமாக்ஸ் காட்சி கண்டிப்பாக அனைவரையும் கவரும்.