நாம் ரசிக்கிற திரை பிரபலங்களின் பங்களிப்புகளில் சில ‘அண்டர்ரேட்டட்’ ஆக அமைந்துவிடும். குறிப்பிட்ட திரைப்படம் தியேட்டர்களில் பெருங்கவனத்தைப் பெறாமல் போனதால் அது நிகழ்ந்திருக்கும். அதன் பின்னே பல காரணங்கள் இருக்கும்.
அப்படி ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் ‘அண்டர்ரேட்டட்’ ஆக கருதப்படுகிற பங்களிப்புகளில் ஒன்று ‘தாஜ்மஹால்’. அதில் வரும் ‘சொட்ட சொட்ட நனையுது தாஜ்மஹாலு’ ஒருகாலத்தில் மியூசிக் சேனல்களில் சக்கை போடு போட்ட பாடல்.
அதையே ஒரு படத்தின் தலைப்பாக்கினால் எப்படியிருக்கும்? அது எப்பேர்ப்பட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தும்? அப்படியொரு எதிர்பார்ப்புதான் ‘சொட்ட சொட்ட நனையுது’ படத்திற்குக் கிடைத்தது என்று சொல்லலாம்.
நவீத் எஸ்.பரீத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் நிஷாந்த் ரூசோ, வர்ஷினி வெங்கட், ஷாலினி, ராஜா இளங்கோவன், ரோபோ சங்கர் உட்படப் பலர் நடித்துள்ளனர்.
இப்படம் தரும் திரையனுபவம் எத்தகையது?
‘சொ.சொ.ந.’ கதை!
ஒரு கிராமம். அங்கிருக்கும் பண்ணை வீட்டின் வாரிசாக இருப்பவர் ராஜா (நிஷாந்த் ரூசோ). பெற்றோருக்கு மகனாக இருப்பதையே அவர் ஒரு வேலையாகக் கருதுகிறார்.
அப்படிப்பட்டவருக்குத் திருமணம் செய்து வைக்கப் படாதபாடு படுகின்றனர் ராஜாவின் பெற்றோர். ‘இளமையில் வழுக்கை’ எனும் பிரச்சனையால் அவதிப்படும் மகனை எப்படிச் சமாளிப்பது என்று தெரியாமல் தடுமாறுகின்றனர். அந்த அளவுக்குப் பெண் பார்க்கச் செல்லும் வீடுகளில் ராஜா அவமானங்களை எதிர்கொள்கிறார்.
இந்த நிலையில், ராஜாவின் வீட்டிற்கு பிரியா (ஷாலினி) எனும் இளம்பெண் வருகிறார். அதே ஊரைச் சேர்ந்த அப்பெண் சென்னையிலுள்ள ஒரு கல்லூரியில் படித்தவர்.
பார்த்தவுடனேயே பிரியா மீது ராஜாவுக்குக் காதல் வருகிறது. அதனை அவரிடம் தெரிவிக்கிறார். பிரியாவுக்கும் ராஜாவைப் பிடிக்கிறது.
அதன் தொடர்ச்சியாக, இரு வீட்டாரும் இணைந்து திருமணத்திற்கு ஏற்பாடு செய்கின்றனர்.
திருமணத்திற்கு முந்தைய நாள், ராஜாவின் நண்பன் ராக்கி (கேபிஒய் ராஜா) சில ஆபாச வீடியோக்களை அனுப்புகிறார். அதிலொன்றைக் கண்டதும் ராஜா அதிர்ச்சியடைகிறார். காரணம், அதிலொன்றில் பிரியா இடம்பெற்றிருப்பது தான்.
அப்போது, வழுக்கைத் தலையை பிரச்சினையைக் காரணமாக வைத்துக்கொண்டு தன்னை பிரியா ஏமாற்றிவிட்டதாக நினைக்கிறார் ராஜா.
வழுக்கைத் தலை பிரச்சனை சம்பந்தமான ராஜாவின் தாழ்வு மனப்பான்மை சரியானதா? பிரியாவின் வாழ்வு என்ன ஆனது என்று சொல்கிறது மீதமுள்ள ‘சொ.சொ.ந’.
நிறையவே ஏமாற்றம்!
எந்நேரமும் கடுப்பை முகத்தில் சுமந்தவாறே திரிகிறார் நாயகன் நிஷாந்த் ரூசோ. வழுக்கை விழுந்த தோற்றத்திற்கான ஒப்பனை கூட ‘ஓகே’ ரகத்தில் உள்ளது. ஆனாலும், அவரது நடிப்பு நமக்குத் திருப்தி தருவதாக இல்லை.
நாயகிகளாக இரண்டு பேர் இதிலிருக்கின்றனர். முன்பாதியில் வரும் ஷாலினி நடிக்க வாய்ப்பே திரையில் தரப்படவில்லை. அதனால் ஒரு பொம்மை போலவே வந்து போகிறார்.
‘சோஷியல் மீடியா செலிப்ரெட்டி’ ஆக காண்பிக்கப்பட்டுள்ள வர்ஷினி வெங்கட், கொஞ்சம் ‘ஓவர் ஆக்டிங்’ ஏரியாவில் கால் பதித்திருக்கிறார்.
நாயகனின் நண்பனாக வரும் ராஜா இளங்கோவன், ஆங்காங்கே சில ஜோக்குகளை அள்ளிவிடுகிறார். அவற்றில் சில நம்மைச் சிரிக்க வைக்கின்றன.
சுத்தத் தமிழில் பேசுகிறேன் பேர்வழி என்று கடுப்பேற்றுகிறார் ஆனந்த் பாண்டி. ஒரு காட்சியில் சட்டென்று அவர் மலையாளம் கலந்த தமிழில் பேச நாம் ‘ஜெர்க்’ ஆக வேண்டியிருக்கிறது.
நாயகனின் பெற்றோராக நடித்தவர்களை ‘பிளாஷ்பேக்’கில் காட்டுகிற இடங்கள் கொஞ்சம் சிரிப்பூட்டுகின்றன.
ரோபோ சங்கர், கேபிஒய் வினோத், பாட்டி பாத்திரம் ஏற்றவர் ஆகியோர் சிரிக்க வைக்க முயற்சித்திருக்கின்றனர்.
இவர்கள் தவிர்த்து பெரிதாக எவரையும் இயக்குனர் திரையில் காட்டவில்லை. திரைக்கதையில் அதற்கு இடமும் தரவில்லை.
அதனால், பெரும்பாலும் மேற்சொன்னவர்களின் குளோஸ் அப், மிட்ஷாட்களே திரையை ஆக்கிரமிக்கின்றன. கதை எந்த இடத்தில் நிகழ்கிறது என்பது கூட உரிய வகையில் விளக்கப்படவில்லை.
எண்பது, தொண்ணூறுகளில் வந்த பாக்யராஜ் படம் போன்றதொரு படைப்பைப் பார்க்கப் போகிறோம் என்ற எண்ணத்தோடு தியேட்டருக்குள் நுழைந்தால், ஆரம்பம் முதலே ஆங்காங்கே ஏமாற்றம்.
இருந்தாலும், அரிதாக வந்துவிழுகிற சில ‘ஒன்லைன்’ ஜோக்குகளை கேட்டு சிரித்துக்கொண்டே ‘டைம்பாஸ்’ செய்தால் போதும் என்ற எண்ணமே தலைதூக்குகிறது.
இடைவேளைக்குப் பிறகு அந்த எண்ணத்தை வழித்து துடைத்துவிடும் அளவுக்கு நிறையவே ஏமாற்றம். சிரிக்கும்படியாக ஒரு இடம் கூட இல்லை.

அது மட்டுமல்லாமல், எந்தவொரு பாத்திரத்திற்கும் பின்னணியோ, வாழ்க்கைச் சூழலோ திரையில் விவரிக்கப்படவில்லை.
திரையில் காட்டிய காட்சிகளுக்கு, வசனங்களுக்கு உரிய விளக்கம் சொல்லப்பட்டிருக்கிறதா என்றால் அதுவும் இல்லை.
‘பிறகு எதுக்கு இந்தப் படம் பார்க்கணும்’ என்ற கேள்வி எழலாம். இயக்குனர் நவீத் எஸ். பரீத் இந்த ‘ஆங்கிளில்’ யோசித்திருந்தால் திரைக்கதையும் வசனமும் நிறையவே மெருகேறியிருக்கும். தியேட்டரில் படம் பார்க்கும் ரசிகர்களும் ‘என்ஜாய்’ பண்ணியிருக்க முடியும்.
அது நிகழாததால், அடைமழையில் நனையும் ஆசையோடு வந்த நாம் ‘இப்படி காய்ந்து போக விட்டுட்டீங்களே’ என்று புலம்ப வேண்டியிருக்கிறது.
ஒளிப்பதிவாளர் ரயீஸ், படத்தொகுப்பாளர் ராம் சதீஷ், கலை இயக்குனர் ராம் குமார் ஆகியோரின் பங்களிப்பு இந்த படத்திற்குச் செய்த நன்மை என்னவென்று சொல்ல இயலவில்லை.
இசையமைப்பாளர் ரெஞ்சித் உன்னி அமைத்திருக்கும் பின்னணி இசை, காட்சிகளை எந்த வகையிலும் உயர்த்திப் பிடிக்கவில்லை.
பாடல்களைப் பொறுத்தவரை, ‘கோலுகப்பா’ பாடல் கொஞ்சம் துள்ளலைத் தருகிறது.
இதுபோன்ற கதைகள் ரசிகர்களை எளிதாகத் திரையோடு பிணைக்க வைக்கும். முதல் ஷாட்டில் இருந்து கடைசி ஷாட் வரை அந்த பிணைப்பு அறுபடாமலும் இருக்க வைக்கும்.

அதற்கு, கதையில் சொல்லப்படும் பிரச்சனை மிகச்சீரிய முறையில் சொல்லப்பட்டிருக்க வேண்டும். படத்தின் கதையைச் ரசிகர்கள் சிலரிடம் கூறி கருத்து கேட்டிருந்தால், ‘இப்படியெல்லாம் காட்சிகள் இருந்தால் நல்லாயிருக்கும்’ என்று அவர்களே சில ‘ஐடியா’க்களை அள்ளியிறைத்திருப்பார்கள்.
அவற்றைத் திரைக்கு மடை மாற்றியிருந்தால், வயிறு வலிக்கச் சிரிக்கும் அளவுக்கு ஒரு படம் கிடைத்திருக்கும்.
அப்படிப்பட்ட ரசிகர்களைக் கருத்தில் கொள்ளாமல் விட்டிருப்பதுதான் ‘சொ.சொ.ந.’ படத்தின் பலவீனம். ‘அற்புதமான வாய்ப்பை மிஸ் பண்ணிட்டாங்களே’ என்பதுதான் இவ்வளவும் சொல்லக் காரணம்..!
- உதயசங்கரன் பாடகலிங்கம்