Take a fresh look at your lifestyle.

ஹ்ருதயபூர்வம் – மனதைத் தொடுகிற ‘பீல்குட்’ படமா?

‘எல்2: எம்புரான்’, ‘துடரும்’ என இரண்டு மாபெரும் வெற்றிகளை இந்த ஆண்டு தந்திருக்கிறார் மலையாள நட்சத்திர நடிகரான மோகன்லால். அவரது நடிப்பில் மூன்றாவதாக வந்திருக்கிறது ‘ஹ்ருதயபூர்வம்’. இதனை இயக்கியிருப்பவர் சத்யன் அந்திக்காடு.

இவர்கள் இருவரது கூட்டணி இதற்கு முன்னர் ‘ரசதந்திரம்’ உட்படச் சில குறிப்பிடத்தக்க படங்களைத் தந்திருக்கிறது. அவை பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல், கிளாசிக் ஆன ‘பீல்குட்’ படங்களாகவும் திகழ்கின்றன என்பதுவே சிறப்பு.

‘ஹ்ருதயபூர்வம்’ படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். மாளவிகா மோகனன், சங்கீத் பிரதாப், லாலு அலெக்ஸ், சித்திக் உள்ளிட்ட பலருடன் ‘பூவே உனக்காக’ சங்கீதாவும் இதில் முக்கியப் பாத்திரமாகத் தோன்றியிருக்கிறார்.

இப்படம் தரும் திரையனுபவம் எத்தகையது?

‘ஹ்ருதயபூர்வம்’ கதை!

கொச்சியிலுள்ள சந்தீப் பாலகிருஷ்ணன் என்பவருக்கு இதயமாற்று அறுவைச்சிகிச்சை செய்யப்படுவதில் இருந்து ‘ஹ்ருதயபூர்வம்’ தொடங்குகிறது.

புனேவைச் சேர்ந்த ராணுவ அதிகாரி ரவீந்திரனின் இதயமே சந்தீப்புக்குப் (மோகன்லால்) பொருத்தப்படுகிறது.

கொச்சியில் ஒரு ஹோட்டலை நடத்தி வரும் சந்தீப்புக்குத் திருமணம் ஆகவில்லை. அதில் அவருக்கு விருப்பமும் இல்லை.

சில ஆண்டுகளுக்கு முன்னர், திருமணம் நடைபெறுகிற நேரத்தில் மணப்பெண் தனது காதலனுடன் ஓடிச் சென்றதே அதற்குக் காரணம்.

அறுவைசிகிச்சைக்குப் பிறகு, யூடியூபில் சந்தீப் பெயர் பிரபலமாகிறது. திருமணத்திற்கு முன்னர் அவரை விட்டுச் சென்ற பெண், மீண்டும் மொபைலில் அழைக்கிறார்.

அது போன்றதொரு எதிர்பாராத நிகழ்வு சந்தீப்பின் வாழ்வில் நடக்கிறது. ரவீந்திரனின் மகள் ஹரிதா (மாளவிகா மோகனன்) சந்தீப்பைத் தேடி வருகிறார்.

‘எனது நிச்சயதார்த்தத்தின்போது நீங்கள் வந்தால், உங்கள் இதயம் வழியாகத் தந்தையின் ஆசீர்வாதத்தை உணர்வேன்’ என்று சந்தீப்பிடம் சொல்கிறார் ஹரிதா. ஆனால், அவர் அதனை ஏற்கத் தயாராக இல்லை.

அதேநேரத்தில், சந்தீப்பைக் கவனித்துக் கொள்வதற்காக அமர்த்தப்பட்டிருக்கும் செவிலியரான ஜெர்ரி (சங்கீத் பிரதாப்) அதனைக் கேள்விப்பட்டதும் கோபமுறுகிறார். ‘இதுதான் நன்றி சொல்கிற விதமா’ என்கிறார்.

அதன்பிறகு, வேறு வழியில்லாமல் புனேயில் நடைபெறும் நிச்சயதார்த்த விழாவுக்குச் செல்கிறார் சந்தீப். அவருடன் ஜெர்ரியும் பயணிக்கிறார்.

அங்கு சில எதிர்பாராத நிகழ்வுகள் நடைபெறுகின்றன. அதனால் நிச்சயதார்த்தம் தடைபடுகிறது.

அதன் பின்னர் ரவீந்திரனின் தோழர்கள் சிலரைச் சந்திக்கிறார் சந்தீப். ரவீந்திரன் வீட்டில் அவரது மனைவி, மகளின் விருந்தோம்பலை எதிர்கொள்கிறார்.

அந்த நாட்களில் அவர்களது அன்பு சந்தீப்பை துணுக்குறச் செய்கிறது. அவர் மனதில் சில எண்ணங்கள் முளைக்கக் காரணமாகிறது.

அந்த எண்ணங்கள் எப்படிப்பட்டவை? அதன் விளைவுகள் எத்தகையவை என்று சொல்கிறது ‘ஹ்ருதயபூர்வம்’ படத்தின் மீதி.

மனதைத் தொடுகிறதா?

இதற்கு மேல் வருகிற தகவல்களில் சில ‘ஸ்பாய்லர்’ ரகமாகவும் இருக்கக்கூடும். அதனால், ‘அவை வேண்டாமே’ என்பவர்கள் இந்த இடத்தில் நின்றுகொள்ளலாம்.

இந்தக் கதையில் தாய், மகள் என இரு பாத்திரங்களின் காதலையும் நாயக பாத்திரமான சந்தீப் சம்பாதிப்பதாகச் சில காட்சிகள் உள்ளன. அவற்றைக் கண்டு அருவெருப்படையவில்லை என்றால், ‘ஹ்ருதயபூர்வம்’ பிடித்துப் போகும்.

அதனைச் செயல்படுத்துகிற வகையில் மெலிதான நகைச்சுவை, நெகிழ்ச்சியூட்டும் தருணங்கள், சிறப்பான பாத்திர வார்ப்பு, வழக்கத்திற்கு மாறான காட்சியமைப்பு எனப் பல அம்சங்கள் இதிலுள்ளன.

அந்த வகையில் அகில் சத்யன் ஆக்கிய கதைக்கு சோனு டி.பி. சிறப்பாகத் திரைக்கதை வசனம் தந்திருக்கிறார்.

இதில் வரும் பல காட்சிகள் ஒரு ‘கமர்ஷியல்’ திரைப்படத்திற்குரிய ஈர்ப்பு அம்சங்களுடன் இராது. அதேநேரத்தில், அவற்றில் ‘கவிதைத்தனம்’ நிறைந்திருப்பதையும் மறுக்க முடியாது. அதுவே இப்படத்தின் யுஎஸ்பி.

அது, அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் பீடிக்குமா என்று கேட்டால் ‘ப்ச்’ என்றே பதில் சொல்ல வேண்டியிருக்கும்.

நடிப்புக்கலைஞர்களின் உணர்வு வெளிப்படுத்தலுக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஒவ்வொரு ஷாட்டையும் நிதானமாகத் தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் கே.ராஜகோபால்.

காட்சியாக்கம் ‘ப்ரெஷ்’ஷான அனுபவத்தை நமக்கு வழங்குமாறு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் அனு மூத்தெடத்.

அவருக்கு உறுதுணையாக இருக்கும் வகையில் ‘மெலடி’ மெட்டுகளைத் தந்திருக்கிறார் ஜஸ்டின் பிரபாகரன்.

படத்தில் காட்சிகளின் தன்மைக்கு ஏற்றவாறு ‘டிஐ’ பணி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதையும் தாண்டிப் பல பிரேம்களில் நிறைந்திருக்கும் ‘கரும்பச்சை’ வண்ணம் திரைக்கதையோட்டத்தில் சீர்மையைத் தானாக உணரச் செய்கிறது.

இது போக ஆடை வடிவமைப்பு, ஒலிக்கலவை எனப் பல தொழில்நுட்ப அம்சங்கள் இதில் சிறப்பாக அமைந்திருக்கின்றன.

‘மெலோட்ராமா’ வகைமையில் அமைய வேண்டிய இப்படத்தினை மெலிதான நகைச்சுவை மடைமாற்றியிருக்கிறது.

அந்த வகையில் சங்கீத் பிரதாப்பின் பங்கு இதில் முக்கியத்துவம் பெறுகிறது.

நாயகன் மோகன்லாலுக்கு இணையாகப் பெரும்பாலான காட்சிகளில் அவரது இருப்பு அமைந்துள்ளது.

மாளவிகா மோகனன், சங்கீதா இருவருமே இதில் நாயகிகள் எனலாம். பின்னவர் திரையில் வரும் நேரம் குறைவு. ஆனால், அவர் நம்மிடத்தில் உருவாக்கும் தாக்கம் அதிகம்.

மாளவிகா விஷயத்தில் இது அப்படியே ‘உல்டா’ ஆகியிருக்கிறது. ஆனாலும், அவர் தனது கவர்ச்சிகரமான தோற்றம் வழியே ரசிகர்களை வாயடைக்கச் செய்கிறார்.

இன்னும் சித்திக், லாலு அலெக்ஸ், பாபுராஜ், ஜனார்த்தனன் உள்ளிட்ட சிலர் தோன்றியிருக்கிற இப்படத்தில் சபீதா ஆனந்தும் உண்டு. தொண்ணூறுகளில் வெளியான தமிழ் படங்களை ரசித்தவர்களுக்கு அவரை நினைவிருக்கும்.

அல்தாப் சலீம், மீரா ஜாஸ்மின் இருவரும் கிளைமேக்ஸில் ஒரு ஷாட்டுக்கு வந்து போயிருக்கின்றனர்.

இவர்கள் அனைவரையும் தாண்டி பசில் ஜோசப் வருகிற ஒற்றைக் காட்சிக்கு தியேட்டரில் ‘விசில்’ பறக்கிறது. டீசரில் நாம் பார்த்த ‘ஃபாஃபா’ காமெடியும் நல்லதொரு வரவேற்பை பெறுகிறது.

மலைப்பாங்கான பிரதேசத்தில், ரம்மியமானதொரு இளங்காலைப் பொழுதில், மெலிதாகச் சலசலக்கிற நீரோடையை ரசித்தவாறே காலாறச் சூரியன் உதிக்கும் திசை நோக்கி நடந்து செல்வது ஒருவித சுகானுபவம். கிட்டத்தட்ட அப்படியொன்றைத் திரையில் தந்துவிடத் தனது ஒவ்வொரு படத்திலும் முயற்சிப்பவர் சத்யன் அந்திக்காடு.

அந்த திரையனுபவம் எளிமை நிறைந்த மனித வாழ்வுக்கு நெருக்கமானதாகவும் இருக்கும். மனதைத் தொடுகிற ‘பீல்குட்’ அனுபவமாக அமையும்.

‘ஹ்ருதயபூர்வம்’ படத்திலும் ஒரு இயக்குனராக அதனை நிகழ்த்த முயன்றிருக்கிறார் சத்யன். ஆனால், அதில் அவருக்கு முழுமையான வெற்றி கிட்டவில்லை என்றே சொல்ல வேண்டும்..!

– உதயசங்கரன் பாடகலிங்கம்