Take a fresh look at your lifestyle.

ரீ ரிலீஸ் காணும் சிரஞ்சீவி – ஸ்ரீதேவி படம்!

அதியற்புதங்கள் எல்லாமே திட்டமிடல் ஏதுமில்லாமல் தானாக நிகழும். திரையுலகில் நாம் கண்டு ரசித்த பல ‘கிளாசிக்’ திரைப்படங்கள், பாடல்கள், காட்சிகள் எனப் பல விஷயங்கள் கூட அப்படிக் கிடைத்தவை தான்.

‘யாரோ ஒருவரின் சிந்தனையில் உதித்த கற்பனையை எப்படித் தானாக உருவானதாகச் சொல்ல முடியும்’ என்ற கேள்வி எழலாம்.

அந்தக் கற்பனை உதித்த கணம் போல, எத்தனை திட்டமிட்டாலும் மீளாக்கம் செய்ய முடியாது என்பதே அதற்கான பதிலைச் சொல்லும்.

சரி, எதற்காக இந்த விவாதம்? இந்த வாரம் சிரஞ்சீவியின் வெற்றிப் படங்களில் ஒன்றான ‘ஜகதேக வீருடு அதிலோக சுந்தரி’ திரைப்படம் ரீரிலீஸ் ஆகவிருக்கிறது.

இப்படம் 1990ஆம் ஆண்டு மே 9ஆம் தேதியன்று தியேட்டர்களில் வெளியானது.

சரியாக 35 ஆண்டுகள் கழித்து அதே தினத்தில் மறு வெளியீடு காணவிருக்கிறது. இதன் பின்னே திட்டமிடல் இருந்தாலும், இதுவும் கூட ஆச்சர்யம் தருகிற விஷயம் தான்.

காதல் தேவதை!

தொண்ணூறுகளில் தமிழ்த் திரையுலகை விட்டு ஒதுங்கி அப்போதைய பம்பாயே கதி என்றிருந்தவர் நடிகை ஸ்ரீதேவி. அவ்வப்போது சில தெலுங்குப் படங்களில் மட்டும் தலைகாட்டி வந்தார்.

அதுவும் அப்படத்தின் கதை பிடிக்க வேண்டும், அவரது பாத்திரம் வலுவாக இருக்க வேண்டும், பெரிய சம்பளம் வேண்டும் என்று பல ‘வேண்டும்’கள் இருந்தன.

அவையனைத்தையும் ‘டிக்’ செய்கிற வகையில் அமைந்தது ‘ஜ.வீ.அ.சு’ பட வாய்ப்பு.

பிரபல தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் தயாரித்த இப்படத்தை ‘கமர்ஷியல் சினிமா’ கிங் ராகவேந்திரராவ் இயக்கினார்.

ஏ.வின்செண்ட் மற்றும் கே.எஸ்.பிரகாஷ் ஒளிப்பதிவைக் கையாள, கோடகிரி வெங்கடேஸ்வர ராவ் படத்தொகுப்பை மேற்கொண்டார்.

இசையைத் தந்தார் இசைஞானி இளையராஜா. ‘பிரியதமா’, ‘அண்டாலோ’, ‘யமஹோ நீ’ உட்பட 7 பாடல்களை இழையோட விட்டிருந்தார்.

‘மதுரை மரிக்கொழுந்து வாசம்’ சாயலில் உருவான ‘யமஹோ’ தவிர மற்றனைத்தும் ‘ப்ரெஷ்’ பாடல்கள்.

அதிலும் ‘அப்பனி’ பாடலைச் சில மணி நேரங்களில் உருவாக்கியிருக்கிறார் இளையராஜா. காலை 9 மணிக்கு அதன் ட்யூனை அமைத்திருக்கிறார்.

படப்பிடிப்பில் இருந்த ராகவேந்திர ராவையும் தயாரிப்பாளர் அஸ்வினி தத்தையும் அழைத்து 11 மணி வாக்கில் ட்யூனை வாசித்துக் காட்டியிருக்கிறார்.

மதியம் 2 மணி வாக்கில் பாடலாசிரியர் வெட்டூரி சுந்தரராம மூர்த்தி அதற்கேற்ற வரிகளை எழுதியிருக்கிறார்.

அப்போதே, ‘இது எளிமையான ட்யூனில் அமைந்த சூப்பர்ஹிட் பாடல்’ என்று தெளிவாகியிருக்கிறது.

அடுத்த நாள் ஒலிப்பதிவு முடிந்து படப்பிடிப்புக்கே இப்பாடல் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.

சமீபத்தில் இந்த விஷயத்தைச் சமூகவலைதளத்தில் நினைவுகூர்ந்திருந்தார் சிரஞ்சீவி.

’இந்திரன் மகள் இந்திரஜா பூமிக்கு வந்தார்’ என்று தன்னிடம் ஒரு சினிமா பிரமுகர் சொன்ன தகவலை மனதில் வைத்துக்கொண்டு, அதனை எழுத்தாளர்கள் எண்டமூரி வீரேந்திரநாத், ஜெந்தியாலா, சத்யானந்த் மற்றும் கிரேஸி மோகனுடன் விவாதித்துச் சில நாட்களில் இப்படத்தின் திரைக்கதையைத் தயார் செய்தாராம் ராகவேந்திர ராவ்.

இந்தப் படத்தில் அம்ரிஷ் பூரி, கன்னட நடிகர் பிரபாகர், ராமி ரெட்டி, தணிகலபரணி, பிரமானந்தம், ஜனகராஜ், ஆர்.எஸ்.சிவாஜி, கிரேஸி மோகன் எனப் பலர் நடித்திருந்தனர்.

நிஜ உடன்பிறப்புகளான பேபி ஷாலினி, ஷாம்லி, ரிச்சர்ட் மூவரும் இப்படத்தில் குழந்தை நட்சத்திரங்களாகத் தோன்றியிருந்தனர்.

இப்படிப் பல சிறப்புகள் இப்படத்திற்கு உண்டு.

தமிழில் இது ‘காதல் தேவதை’ என்ற பெயரில் ‘டப்’ செய்யப்பட்டு வெளியானது. ‘பேண்டஸி’ வகைமை திரைப்படங்களை விரும்பியவர்கள் மட்டுமே இதனை ரசித்தனர்.

மற்றவர்கள் ‘காதுல பூ கதையா’ என வேறு தியேட்டர்களுக்குச் சென்றுவிட்டனர்.

ஆனாலும், அப்போதே விஹெச்எஸ்/ விசிஆர் கேசட்களில் சக்கைபோடு போட்டது ‘காதல் தேவதை’.

‘டப்பிங் படம் தானே’ என்ற மனோபாவம் இல்லாமல் இதன் தமிழ் பதிப்பில் சீரியசாக இருந்திருந்தால், அப்போதே ஒரு ‘பான் இந்தியா’ படமாக இது மாறியிருக்கும்.

நினைவலைகள்!

கண்ணைப் பறிக்கும் வண்ணமயமான ஒளிப்பதிவு, திரையை விட்டு திரும்பாத அளவுக்கு நேர்த்தியான படத்தொகுப்பு, இருக்கையை விட்டு எழவிடாத திரைக்கதை நேர்த்தி, ஆங்காங்கே நம்மை குதூகலப்படுத்துகிற பாடல்கள்,

சண்டைக்காட்சிகள், அனைத்துக்கும் மேலே நாம் ரொம்பவே ரசிக்கிற நட்சத்திரங்களான சிரஞ்சீவி, ஸ்ரீதேவி உள்ளிட்டோரின் நடிப்பு என்று ஒரு ‘கிளாசிக்’ திரைப்படமாக அமைந்தது ‘ஜ.வீ.அ.சு’.

அந்த நேரத்தில் அதிக வசூல் செய்த தெலுங்குப் படம் என்ற சாதனையைச் செய்தது.

2020ஆம் ஆண்டு இப்படத்தின் தொடர்ச்சியாக அடுத்த பாகத்தைத் தயாரிக்கப் போவதாக அறிவித்தார் தயாரிப்பாளர் தத். ராம்சரணையும் ஜான்வி கபூரையும் சேர்த்து நடிக்கப் போவதாகச் சொல்லியிருந்தார். ஆனால், அது ஈடேறவில்லை.

அப்போதும் சரி, இப்போதும் சரி, சிரஞ்சீவிக்கும் பாலகிருஷ்ணாவுக்கும் இடையே போட்டி உச்சத்தில் இருக்கும்.

அதன் காரணமாக, 1991இல் ‘ஆதித்யா 369’ தந்தார் பாலகிருஷ்ணா. ‘டைம் ட்ராவல்’ முறையில் கதையம்சத்தைக் கொண்ட அப்படத்தைச் சிங்கிதம் சீனிவாசராவ் இயக்கினார். அதற்கும் இளையராஜா தான் இசையமைத்தார்.

இப்படமும் விரைவில் மறுவெளியீடு காணவிருக்கிறது.

யதார்த்த சூழலுக்கு எந்தவிதத்திலும் சம்பந்தம் இல்லாதபோதும், ஒரு கமர்ஷியல் திரைப்படம் எப்படி ரசிகர்களைச் சட்டென்று கவர்ந்து அவர்களுக்கு என்றென்றைக்கும் பிடித்துப் போகிற நிலையை அடைகிறது? அதற்குப் பதில் சொல்வது கடினம்.

ஆனால், பல ஆண்டுகளாக உழைப்பையும் சிரத்தையையும் கொட்டுகிற கலைஞர்கள் ஒரு கணப்பொழுதில் தங்களில் இருந்து உதிர்க்கிற சிறு துளி கேமிராவில் பதிவாகிப் பல மாற்றங்களைச் சேர்த்துக்கொண்டு திரையில் தெரிகிறபோது,

அது ரசிகனைக் கனவுலகுக்கு இழுத்துச் செல்கிறது. அந்த இன்பத்தைத் தருகிறவர்களே ‘கமர்ஷியல் சினிமா நட்சத்திரங்களாக’ ஆகின்றனர்.

இயக்குநர் ராகவேந்திரராவ், இளையராஜா தொடங்கி சிரஞ்சீவி, மறைந்த ஸ்ரீதேவி என்று இப்படம் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் இது பொருந்தும்.

அனைத்துக்கும் மேலே, பிரபஞ்சத்திலேயே சிறந்த வீரனையும் அனைத்துலகிலும் அழகிய சுந்தரியையும் எவருக்குத்தான் பிடிக்காமல் இருக்காது.

அந்த வகையில், எல்லா காலத்திலும் ‘எவர்க்ரீன்’ அந்தஸ்துடன் திகழும் ‘ஜ.வீ.அ.சு.’. 2டி மற்றும் 3டி நுட்பங்களில் சிறப்பான ஒளி, ஒலி அமைப்போடு நவீனப்படுத்தப்பட்டிருக்கிற இப்படத்தின் தமிழ் பதிப்பும் விரைவில் வெளியானால் நன்றாக இருக்கும்..!

– மாபா