Take a fresh look at your lifestyle.

தமிழுக்கு வரும் மோகன்லால் படம்!

மலையாளத் திரையுலகில் சுமார் 45 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்கிறது நடிகர் மோகன்லாலின் பயணம். இதுவரை 360 படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

‘அந்த 360வது படமாக வந்திருக்கிறது இயக்குநர் தருண் மூர்த்தியின் ‘துடரும்’.

கடந்த மாதம் 25ஆம் தேதியன்று வெளியான இப்படம் இப்போதுவரை மக்களின் அபிமானத்தைத் தொடர்ந்து பெற்று வருகிறது.

தொடரும் பயணம்..!

தொண்ணூறுகளுக்கு முன்பே தொடங்கிவிட்ட மம்முட்டி – மோகன்லால் இடையிலான போட்டி.

‘நீயா நானா’ என்கிற இந்தத் ‘தள்ளுமுள்ளு’வுக்கு நடுவே இருவரும் இணைந்து சுமார் 55 படங்களில் நடித்திருக்கின்றனர். அவற்றில் பல சூப்பர்ஹிட் என்பது தனிக்கதை.

ஹீரோயிசம் தூக்கலாக அமைந்த கமர்ஷியல் சினிமா, கதையம்சத்திற்கு முக்கியத்துவம் தருகிற படங்கள், கலையார்வத்திற்குத் தீனி போடுகிற படைப்புகள் என்று இருவரும் மாறி மாறித் தந்த படங்கள் நூற்றுக்கணக்கில் இருக்கும்.

இந்தப் போட்டிக்கு நடுவே, இருவரும் அடுத்த தலைமுறைக்கான உதாரணங்களாகவும் மாறியிருக்கின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக ‘ரோர்சா’, ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ என்று வித்தியாசமான கதைக்களங்களில் தன்னைப் பொருத்திக்கொண்டு, வழக்கத்திற்கு மாறான திரையனுபவங்களைத் தந்து வருகிறார் மம்முட்டி. இப்படங்கள் அவரது தயாரிப்புகளாகவும் இருக்கின்றன.

இன்னொரு புறம் பிரமாண்ட படங்களுக்கான கதைகளில் தன்னைப் பொருத்திக்கொள்ள முயன்று வருகிறார் மோகன்லால்.

கடந்த ஆண்டு ‘பரோஸ் 3டி’ மூலம் இயக்குநராகவும் அறிமுகமானார். இதோ, இப்போது ‘எல்2: எம்புரான்’ வசூல் சாதனைக்கு நடுவே ‘துடரும்’ தந்திருக்கிறார்.

இந்தப் படத்தைக் கண்ட ரசிகர்கள் ‘விண்டேஜ் மோகன்லால் இஸ் பேக்’ என்று கும்மாளமிட்டு வருகின்றனர். படத்தின் வெற்றி அவரிடத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அதனாலேயே, சமீபத்தில் நடந்த இப்படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறார். இது, அவரது ரசிகர் நற்பணி மன்றங்களின் சார்பில் நடத்தப்பட்டிருக்கிறது.

சத்யன் அந்திக்காடு இயக்குகிற ‘ஹ்ருதயபூர்வம்’, தமிழ் மற்றும் தெலுங்கு பைலிங்குவலான ‘விருஷபா’, பான் இந்தியா படமான ‘கண்ணப்பா’ என்று அடுத்தடுத்து மோகன்லாலின் படங்கள் வரவிருக்கின்றன.

படத்தொகுப்பாளர், இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்குகிற படத்தில் மம்முட்டி, குஞ்சாக்கோ போபன், பகத் பாசில், நயன்தாரா உடன் நடிக்கிறார்.

ஆக, தொடரும் மோகன்லாலின் திரைப்பயணமானது அவரது வெற்றிகரமான ‘தேர்வினை’ நமக்கு நிரூபிக்கிறது.

இந்த நேரத்தில், அவர் நடித்த ‘துடரும்’ மலையாளத் திரைப்படம் தமிழில் வெளியாகப் போவதாக அறிவித்திருக்கிறது அதன் தயாரிப்பு நிறுவனமான ரெஜபுத்ரா விஷுவல் மீடியா.

தமிழில் வெற்றி பெறுமா?!

ஏற்கனவே தமிழில் அஜித்குமார், தேவயானி, ஹீரா நடிப்பில், ரமேஷ் கன்னா இயக்கத்தில் ‘தொடரும்’ வெளியாகியிருக்கிறது.

அதனால், அதே டைட்டிலில் இப்படம் தமிழிலும் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். ஏனென்றால், ‘துடரும்’ என்பதற்கு அதுதான் அர்த்தம்.

‘தானுண்டு தனது குடும்பமுண்டு தனது பழைய அம்பாசிடர் கார் உண்டு’ என்று கேரளாவின் பசுமை நிறைந்த கிராமமொன்றில் வாழ்ந்து வருகிற ஒரு நடுத்தர வயது மனிதன், சந்தர்ப்ப சூழலால் அங்கிருக்கிற போலீஸ் அதிகாரிகளோடு மோத நேர்வதைச் சொன்னது ‘துடரும்’ திரைப்படம்.

இந்தப் படத்தில், ஒருகாலத்தில் சினிமா ஸ்டண்ட் ஆர்ட்டிஸ்டாக இருந்தவராக மோகன்லால் நடித்திருந்தார்.

சுமார் 80 சதவிகிதத்திற்கும் மேலாக யதார்த்தத்துடன் நகர்கிற திரைக்கதை கிளைமேக்ஸில் ‘ஹீரோயிசம்’ காட்ட, அப்பாத்திர வார்ப்பு உதவியாக இருந்தது.

முழுக்க யதார்த்தம் அல்லது அதற்கு நேரெதிராக ‘லாஜிக் சிறிதுமில்லா சினிமாத்தனம்’ என்றிருக்கிற தமிழ் திரைப்படங்களுக்கு மத்தியில், இந்த கலவை நிச்சயம் வித்தியாசமானதாகவே நோக்கப்படும்.

மோகன்லால் நடித்த ‘த்ருஷ்யம்’ படம் கூட கிட்டத்தட்ட இதே பாணியிலான ‘திரைக்கதை ட்ரீட்மெண்ட்’ கொண்டதுதான்.

அப்படம் தமிழில் ‘பாபநாசம்’ ஆனது. ஆனால், அதன் இரண்டாம் பாகம் தமிழில் தயாரிக்கப்படவில்லை. இப்போது ‘த்ருஷ்யம் 3’ தயாரிப்புக்கான முன்கட்டப் பணிகள் நடந்து வருகின்றன.

மலையாளத்தில் வெளியான அன்றே, இப்படம் தெலுங்கிலும் வந்துவிட்டது. அங்கும் ஓரளவுக்கு வரவேற்பைப் பெற்று வருகிறது.

ஒரிஜினல் மலையாளப் படத்திலேயே தமிழில் சில வசனங்கள் இடம்பெற்றிருக்கும். காரணம், இதில் ஸ்டண்ட் மாஸ்டர் பாத்திரங்களில் பாரதிராஜா, இளவரசு நடித்திருந்தனர்.

அவர்களோடு இணைந்து பணியாற்றியதாக மோகன்லால் பாத்திரம் வார்க்கப்பட்டிருந்தது.

அவரது ஜோடியாக நடித்த ஷோபனா, தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக அப்படத்தில் காட்டப்பட்டிருந்தார்.

அது போக மோகன்லாலின் காரில் இளையராஜாவின் 80’ஸ் ஹிட் பாடல்கள் ஒலிப்பதாக வரும் காட்சிகள், முருக பக்தராக வரும் அப்பாத்திரத்தின் வார்ப்பு, ரஜினி கமல் பட ரெஃபரென்ஸ்கள் என்று சில விஷயங்கள் தமிழ்நாட்டோடு பிணைப்பதாக இருக்கும்.

ஒரு காட்சியில் கமல் உடன் மோகன்லால் இருக்கிற புகைப்படத்தைப் பார்த்துவிட்டு, ‘இது எந்த படம் அங்கிள்’ என்று சந்தோஷ் பிரதாப் கேட்பார்.

அதர்கு ‘விக்ரம்’ என்பார் மோகன்லால். ‘லோகேஷோட படமா’ என்று அவர் கேட்க, ‘இல்ல, இது பழைய விக்ரம். நம்ம ராஜசேகர் சாரோட படம்’ என்று இவர் சொல்வார்.

இப்படிப்பட்ட விஷயங்கள் நிச்சயம் தமிழ் சினிமா ரசிகர்களை ஈர்க்க வாய்ப்பியிருக்கிறது.

இப்படத்தின் இன்னொரு சிறப்பம்சமாகத் திகழ்பவர் வில்லனாக அறிமுகமாகியிருக்கும் பிரகாஷ் வர்மா. ‘வோடஃபோன்’ ஜூஜூ விளம்பரங்கள் உட்படப் பல விளம்பரப்படங்களைத் தந்த இவர், இதில் முதன்முறையாக நடித்திருக்கிறார்.

ஆனால், படம் பார்க்கிற எவரும் ‘இதுதான் இவரது அறிமுகம்’ என்று சொல்லிவிட முடியாது. அப்படியொரு வில்லத்தனத்தைத் திரையில் காட்டியிருக்கிறார்.

இந்தப் படத்தை ‘ரீமேக்’ செய்தால், இவரது பாத்திரத்தில் இன்னொருவர் நடிக்க முடியுமா எனும் அளவுக்கு அவரது நடிப்பு அமைந்திருக்கிறது. அதுவும் கூட, ‘துடரும்’ படத்தைத் தமிழில் வெளியிடக் காரணமாக இருக்கலாம்.

அனைத்துக்கும் மேலாக, இன்னும் சில வாரங்கள் கழித்து ஓடிடியில் வெளியாகிறபோது இப்படம் தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்படலாம்.

அதற்கு முன்னதாக, தியேட்டரிலும் அந்த அனுபவம் கிடைக்கட்டுமே என்று தயாரிப்பு தரப்பு நினைத்திருக்கலாம்.

தமிழில் ‘பாண்டிய நாடு’ உட்பட மிகச்சில படங்களே யதார்த்தத்துடன் கலந்த ‘ஹீரோயிசத்தை’ நமக்கு காட்டியிருக்கின்றன.

அப்படிப்பட்ட வகையறா படங்களில் ‘வித்தியாசம்’ காட்டுவதாக ‘துடரும்’ நிச்சயம் இருக்கும்.

உலகம் முழுக்க, இதுவரை இப்படம் சுமார் 150 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்திருக்கிறது.

‘மஞ்ஞும்மள் பாய்ஸ்’ பாணியில் அந்த எண்ணிக்கையை உயர்த்த இந்த தமிழ் வெளியீடு உதவியாக அமையலாம்.

தமிழில் இப்படம் வரும் 9ஆம் தேதி வரவிருக்கிறது. ‘இது போன்ற படங்களைப் பார்த்து ஹீரோயிசம் இப்படித்தான் இருக்க வேண்டுமென்ற முடிவுக்கு ரசிகர்கள் வந்துவிடுவார்களோ’ என்று பயந்தாவது நம்மூர் ஹீரோக்கள் இப்படிப்பட்ட கதைகளுக்கு ‘இடம்’ தர வேண்டும். அதற்காகவாவது, ‘தொடரும்’ தமிழில் வெற்றி பெற வேண்டும்..!

– மாபா