போர் முனையில் நிகழ்கிறவை அனைத்தும் திரைப்படங்களில் சொல்லப்படுவதில்லை. உலகின் பிற மொழிகளில் வருகிற அவ்வகைமைப் படங்கள் அளவுக்குக் கூடத் தமிழிலோ, இதர இந்திய மொழிகளிலோ வருவதில்லை.
இந்தியில் சில படங்கள் உண்டு. ஆனால், அவற்றில் பெரும்பாலானவை ‘வரும்.. போகும்..’ ரகம் தான்.
எல்லைப்பகுதியை, போர்முனையைக் காட்டுகிற படங்கள் பலப்பல சாகசங்கள் நிறைந்த சண்டைக்காட்சிகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு, அதன் வெற்றியைத் தீர்மானிப்பதாக இருப்பதே அதற்குக் காரணம்.
அதனை எதிர்கொண்டு அமரன் மாதிரியான மிகச்சில படங்களே பெருவெற்றிகளைப் பெறுகின்றன.
இம்ரான் ஹாஷ்மி, சாய் தமங்கர், ஜோயா ஹுசைன், முகேஷ் திவாரி உள்ளிட்ட பலர் நடிப்பில், ரித்தேஷ் சித்வானி மற்றும் பர்ஹான் அக்தர் தயாரிப்பில், தேஜாஸ் பிரபா விஜய் தியோஸ்கர் இயக்கத்தில் வெளியாகியிருக்கிற ‘கிரவுண்ட் ஜீரோ’ திரைப்படம் அப்படியொரு வெற்றியைப் பெறுகிற வகையில் அமைந்திருக்கிறதா?
பதற்றமான நிலப்பகுதியில்..!
காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிற ராணுவ வீரர்கள் அடுத்தடுத்து பொதுமக்கள் நடமாடும் பகுதிகளில் சுட்டுக் கொல்லப்படுகின்றனர்.
இதன் பின்னிருப்பவர்களை ‘பிஸ்டல் கேங்’ என்று வகைப்படுத்துகிறது ராணுவம். அவர்களைப் பிடிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் பலனளிப்பதில்லை.
அந்த ‘பிஸ்டல் கேங்’கின் தகவல் தொடர்பு பரிமாற்றங்களைப் பின்தொடர்ந்து சில ‘கோட்’களை கண்டறிகிறது பிஎஸ்எஃப் படை. என்.என்.டி.துபே எனும் நரேந்திர நாத் தார் துபே தலைமையிலான பிரிவு இதனைச் செய்து வருகிறது.

ஒருமுறை அவ்வாறு கிடைக்கும் ‘கோட்’ வழியாக, தலைநகரில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருப்பதாக உணர்கிறார் என்.என்.டி.துபே.
ஸ்ரீநகரில் இருக்கும் முதலமைச்சர், ஆளுநர், அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு பாதுகாப்பு தர ஏற்பாடு செய்கிறார்.
அவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியின்போது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
ஆனால், துபேயின் கணிப்பு சற்றே பிசகிவிடுகிறது.
அன்றைய தினம், டெல்லியில் நாடாளுமன்றத்திற்குள் புகுந்து ஒரு தீவிரவாதக் கும்பல் தாக்குதல் நடத்துகிறது. இந்த சம்பவம் நடக்கிற ஆண்டு 2001.
அதன்பிறகே, பிஸ்டல் கேங் கும்பலுக்கும் நாடாளுமன்றத் தாக்குதலை நடத்திய ஜெய்ஸ் இ முகம்மது தீவிரவாத அமைப்புக்கும் இடையே தொடர்பிருப்பதைக் கண்டறிகிறார் என்.என்.டி. துபே.
ஆனால், அவர் சொல்வதை டெல்லியில் இருக்கும் உள்துறை அமைச்சக அதிகாரிகள் ஏற்பதாக இல்லை.
நாடாளுமன்றத் தாக்குதலுக்குக் காரணமான ‘ஹாஸி பாபா’ ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருப்பதாகச் சொல்கிறது உளவுத்துறை.
ஆனால், தமக்குக் கிடைக்கிற தகவல்கள் அவர் அருகிலேயே இருப்பதை உறுதிப்படுத்துவதாகச் சொல்கிறார் என்.என்.டி. துபே.
தனது கருத்தை அவர் அழுத்தமாகத் தெரிவிப்பது மேலதிகாரிகளோடு முரண் கொள்ள வைக்கிறது. அதனை மீறி, அவர் எவ்வாறு அந்த ‘ஹாஸி பாபா’வை நெருங்கினார் என்று சொல்கிறது ‘தி கிரவுண்ட் ஜீரோ’வின் மீதி.
இது ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம். மேற்சொன்ன என்.என்.டி.துபே 2022ஆம் ஆண்டு வாக்கில் எல்லை பாதுகாப்பு படையில் இருந்து ஓய்வு பெற்றிருக்கிறார்.
இவரது பங்களிப்பு 2015ஆம் ஆண்டுக்குப் பிறகே வெளியுலகத்திற்குத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இத்தனைக்கும் 2003ஆம் ஆண்டு பிரதமராக இருந்த அடல் பிஹாரி வாஜ்பாய் காஷ்மீரில் பயணம் மேற்கொண்டிருந்த காலகட்டத்தில், இந்த ‘ஹாஸி பாபா’வைச் சுற்றி வளைத்து பிடிப்பதற்கான முயற்சிகளை என்.என்.டி. துபே மேற்கொண்டிருக்கிறார்.

அதனாலேயே, ஐம்பது ஆண்டுகளில் பாதுகாப்புப் படையினர் நடத்திய முக்கியமான ‘ஆபரேஷன்’களில் முதன்மையானதாக இது கருதப்படுகிறது.
இந்தத் தகவல்களை அறிந்தபிறகு, ‘கிரவுண்ட் ஜீரோ’ பார்த்தால் ஜிவ்வென்று இருக்கும். அதுவே இப்படத்தின் யுஎஸ்பி.
துரதிர்ஷ்டவசமாக, இந்த விஷயங்கள் எதுவுமே அறியாமல் நேராக ‘போர்முனையில் ஒரு சாகசம்’ பார்க்கிற உத்வேகத்தோடு இப்படம் பார்க்க வருகின்றனர் ரசிகர்கள்.
அசத்தும் ‘காட்சியாக்கம்’!
இதில் நாயகனாக இம்ரான் ஹாஸ்மி நடித்திருக்கிறார். ஆக்ஷன், ரொமான்ஸ், த்ரில்லர் படங்களில் அசத்துகிற அனுபவம் அவருக்கு ஏற்கனவே உண்டு. இதிலும் அதனைச் செய்திருக்கிறார்.
சாய் தமாங்கர் இதில் நாயகியாக வருகிறார். இம்ரானின் மனைவியாக, அவருக்கான காட்சிகள் குறைவு. இருந்தாலும், அவர் ஸ்கோர் செய்வதற்கான காட்சிகள் இதிலுள்ளன.
‘போக்கிரி’யில் வில்லன்களில் ஒருவராக வந்த முகேஷ் திவாரி, இதில் நாயகனின் மேலதிகாரியாக வருகிறார். இதர ராணுவ வீரர்களாக தீபக் பரமேஷ், லலித் பிரபாகர் உள்ளிட்டோர் வருகின்றனர்.
ஹுசைன் எனும் காஷ்மீரி இளைஞனாக வரும் மிர் மெஹ்ரூஸ் நடிப்பு ஈர்க்கிறது.
டெல்லி அதிகாரிகளாக ஸோயா ஹுசைன், ராகுல் வோஹ்ரா நடித்திருக்கின்றனர். இது போகச் சுமார் மூன்று டஜன் பேராவது இதில் வந்து போயிருப்பார்கள். பின்னணியில் வரும் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் தனிக்கணக்கு.
இத்தனை பேர் நடித்தாலும், சுமார் பத்துக்கும் குறைவான பாத்திரங்களுக்குத் திரையில் பிரதான இடம் தருவதில் வெற்றி பெற்றிருக்கிறது திரைக்கதை.
அதேநேரத்தில், அப்பாத்திரங்களைத் தலையில் வைத்துக் கொண்டாடுவதற்கு ஏற்ற ‘சினிமாத்தனமான’ சாகச சித்தரிப்பு திரைக்கதையில் இல்லை.
‘ஆபரேஷன் ஹாஸி பாபா’ என்பதனை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இதன் திரைக்கதை வசனத்தை சஞ்சித் குப்தா, பிரியதர்ஷி ஸ்ரீவஸ்தவா இருவரும் ஆக்கியிருக்கின்றனர்.
அதில் தென்படுவது யதார்த்தமா, மட்டுப்பட்ட சினிமாத்தனமா என்றால் நம்மிடம் பதில் இல்லை.
அவ்வளவு ஏன்? இது சுவாரஸ்யம் தருமா என்கிற கேள்விக்குக் கூட பதில் தர விடுவதில்லை திரைக்கதை. அதாகப்பட்டது ‘இருக்கு.. ஆனா இல்ல..’ என்கிற ரேஞ்சில் அமைந்திருக்கிறது.
கமல்ஜீத் நேஹியின் ஒளிப்பதிவு, சந்திரசேகர் பிரஜாபதியின் படத்தொகுப்பு, ஜான் ஸ்டீவர்ட் எடூரியின் படத்தொகுப்பு, சஷாங்க் தேரேவின் தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் ஒலி வடிவமைப்பு,
சண்டைக்காட்சி அமைப்பு, பாடல்கள் என்று தொழில்நுட்ப அம்சங்கள் ஒன்றிணைந்து நல்லதொரு திரையனுபவத்ஹ்டைத் தருகின்றன.
இயக்குநர் தேஜாஸ் பிரபா விஜய் தியோஸ்கர் இப்படத்தில் ‘ரியாலிட்டி’ தெரிய வேண்டுமென்று விரும்பியிருக்கிறார்.
அந்தக் காலகட்டத்தில், காஷ்மீரில் குடும்பத்தோடு வாழ்ந்த ராணுவ வீரர்கள் ஒவ்வொரு நாளும் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத வாழ்வை மேற்கொண்டிருந்தனர் என்பதை நாமே உணர வேண்டுமென்று விரும்பியிருக்கிறார்.
ஆனால், எல்லைப்பகுதியில் நிகழ்வதாகக் காட்டப்படுகிற திரைப்படங்களில் இருக்கிற ‘ஹீரோயிசம்’, எதிரிகளைத் தாக்குகிற வேட்கை இதெல்லாம் இப்படத்தில் இல்லை.
அதனால், இதனை உண்மைக்கு நெருக்கமான புனைவு என்றே கருத வேண்டியிருக்கிறது.
படம் தொடங்கும்போதும் கூட, ‘உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு திரைப்படத்திற்கு ஏற்ற வகையில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது’ என்றே கார்டு காட்டப்படுகிறது.
‘நாம காஷ்மீர் நிலத்தைச் சொந்தமா நினைக்கறோமா அல்லது இங்க இருக்கிற மக்களை நம்மோட சொந்தமா நினைக்கறோமா’ என்ற கேள்வியை எழுப்பிவிட்டு,
‘நாம ரெண்டையுமே சொந்தமா நினைக்கறோம்’ என்கிற பதிலையும் தருகிறது இப்படம்.
வழக்கமாக நாம் பார்க்கிற இவ்வகைமை படங்களில் இருந்து ’கிரவுண்ட் ஜீரோ’ வேறுபடுவது இவ்வகையில்தான்.
ஐம்பது ஆண்டுகளில் இல்லாத வகையில் நிகழ்ந்த ஒரு பாதுகாப்பு படை நடவடிக்கையை மையப்படுத்தி அமைந்த இப்படத்தில், அதுவும் ஒரு காட்சியாக இறுதியில் வந்து போகிறது.

ஆக்ஷன் பட ரசிகர்கள் எதிர்பார்க்கிற ‘ஹை பீலிங்’ அவ்விடத்தில் லேசாகத்தான் வந்து போகும். அது சிலருக்குப் பலவீனமாகத் தெரியலாம்.
அதையெல்லாம் பொருட்படுத்தாமல், எல்லையில் வாழ்கிற ராணுவத்தினரின் தினசரி உலகைக் காண விரும்புபவர்கள் இந்தக் ‘கிரவுண்ட் ஜீரோ’வை தாராளமாகக் கண்டு ரசிக்கலாம்!
-உதயசங்கரன் பாடகலிங்கம்