Take a fresh look at your lifestyle.

‘கிங்ஸ்டன்’ – படத்தொகுப்பு மேஜையில் ’கவிழ்ந்த’ படம்!

‘அபூர்வ சகோதரர்கள்’ திரைப்படம் தயாரிப்பில் இருக்கும்போது அதுவரை படம்பிடிக்கப்பட்ட காட்சிகளைத் திரைக்கதையாசிரியர் பஞ்சு அருணாசலம் பார்த்ததாகவும், ‘இந்தக் கேரக்டர்களை வச்சுகிட்டு வேற மாதிரி கதை பண்ணலாம்’ என்று சொன்னதாகவும் ஒரு தகவல் திரையுலகில் சொல்லப்படுகிறது.

அதையடுத்து, அதற்கு முன்னர் எடுத்த காட்சிகளைக் கடாசிவிட்டு புதிய காட்சிகளோடு அப்படம் உருவாக்கப்பட்டு மாபெரும் வெற்றியைப் பெற்றது.

அதுபோன்று பல ‘கமர்ஷியல் படங்களின்’ வெற்றியில் சில கதாசிரியர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் பங்கேற்றிருக்கின்றனர்.

திரைப்பட உருவாக்கத்தின் போது மட்டுமல்லாமல், மொத்தப்படமும் தயாரானபிறகும் கூடச் சிலர் அப்படி உதவியிருக்கின்றனர்.

சில படத்தொகுப்பாளர்களின் பெயர்கள் அப்படித் திரையுலகில் சிலாகிக்கப்படுகின்றன.

அதற்கு இணையாக, மோசமான படத்தொகுப்பின் காரணமாகக் குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெறக்கூடிய தகுதி இருந்தும் சில திரைப்படங்கள் ‘சோதனைடா சாமி’ என்று ரசிகர்களை அலற வைத்திருக்கின்றன.

இரண்டாவது வகை அனுபவத்தை நமக்குத் தருவதாக உள்ளது ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்ததோடு தயாரிப்பாளராகவும் களமிறங்கியிருக்கும் ‘கிங்ஸ்டன்’.

அப்படியென்ன திரையனுபவத்தைத் தருகிறது ‘கிங்ஸ்டன்’?

‘கிங்ஸ்டன்’ கதை!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தூவத்தூர் எனும் கடலோரக் கிராமம்.

அங்குள்ள மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

அதற்குக் காரணம், நாற்பதாண்டுகளுக்கு முன்னர் அப்படிக் கடலுக்குச் சென்ற மீனவர்கள் பலர் அதே படகுகளில் பிணங்களாகத் திரும்பி வந்தது தான்.

அந்தக் கிராமத்தைப் பழிவாங்கக் கடலுக்குள் ஒரு பேய் காத்திருப்பதாகவும் கதை சொல்லப்படுகிறது.

அதனால், அந்த ஊரைச் சேர்ந்த பலர் தூத்துக்குடி துறைமுகத்தில் கடத்தல் வேலைகளில் ஈடுபடும் சாலமனிடம் (சாபுமோன் அப்துசமத்) கைகட்டி வேலை பார்க்கின்றனர். அவர் தரும் பணத்திற்காகக் காத்துக் கிடந்தே அவர்களது பொழுதுகள் விடிகின்றன.

சாலமனிடம் வேலை பார்க்கும் தூவத்தூர் மக்களில் ஒருவர் கிங்ஸ்டன் எனும் கிங் (ஜி.வி.பிரகாஷ்குமார்). முதலாளிக்கு விசுவாசமாக இருக்கும் அவருக்கு, சொந்தமாகப் படகு வாங்க வேண்டும் என்பதைத் தவிர வேறெந்த ஆசையும் இல்லை. அதற்காக, ‘எப்படி வேண்டுமானாலும் பணம் சம்பாதிக்கலாம்’ என்றிருக்கிறார்.

இந்த நிலையில், அவரிடம் வேலை கேட்டு வருகிறார் ஒரு பதின்ம வயதுச் சிறுவன். அவனைச் சாலமனிடம் அழைத்துச் செல்கிறார் கிங்.

சாலமனுக்கு அந்தச் சிறுவனை வேலைக்குச் சேர்ப்பதில் துளியும் விருப்பமில்லை. காரணம், அந்தச் சிறுவனின் தந்தை அவரிடத்தில் வேலை செய்தவர் தான்.

திடீரென்று அவர் காணாமல் போனது அவ்வட்டாரத்தில் இன்றும் பேசுபொருளாக இருந்து வருகிறது. இருந்தும், கிங்ஸ்டனுக்காக அந்தச் சிறுவனின் வருகையைப் பொறுத்துக் கொள்கிறார் சாலமன்.

சில நாட்கள் கழித்து கிங்ஸ்டன், அவரது நண்பர்களுடன் அந்தச் சிறுவனும் கடலுக்குள் செல்கிறார். திடீரென்று அங்கு வரும் கடற்படையினர் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துகின்றனர். அதில் அந்தச் சிறுவன் இறந்து போகிறான்.

அப்போதுதான், சாலமன் தன்னிடம் தந்து அனுப்பிய பெட்டிகளில் போதைப்பொருட்கள் இருப்பதை அறிகிறார் கிங்ஸ்டன். அது பற்றிக் கேட்டதும் இருவருக்கும் மோதல் ஏற்படுகிறது.

இந்த நிலையில், கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றால் மட்டுமே தூவத்தூர் மக்கள் நிம்மதியான வாழ்வை மேற்கொள்ள முடியும் என்று முடிவு செய்கிறார் கிங்ஸ்டன். அதனைச் செயல்படுத்துவதில் ஒரு சிக்கல் இருக்கிறது.

கடலுக்குள் சென்றால் சாவு நிச்சயம் என்ற அந்த ஊர் மக்களின் நம்பிக்கையை உடைக்க வேண்டும். அதற்காக, தானே அந்தச் செயலில் ஈடுபடுவது என்று அவர் முடிவு செய்கிறார்.

கிங்ஸ்டன் உடன் அவரது நண்பர்களும் செல்லத் துணிகின்றனர். அதற்காக, ஒரு படகைத் திருடுவது என்றும் முடிவு செய்கின்றனர்.

அது சாலமன் ஆட்களுக்குத் தெரிந்ததும், அவர்கள் பின்னால் துரத்துகின்றனர். அதற்குள் படகில் கிங்ஸ்டனும் அவரது நண்பர்களும் ஏறுகின்றனர்.

அதன்பிறகே, அவர்கள் சாலமன் உள்ளிட்ட சிலரைக் கடத்திச் சென்றது துரத்தி வந்தவர்களுக்குத் தெரிகிறது. கடலில் கிங்ஸ்டன் குழுவினருக்காக எத்தகைய அனுபவம் காத்திருந்தது?

கடலுக்குள் பேய் இல்லை என்று கிங்ஸ்டன் நிரூபித்தாரா? அந்தப் பயணத்தில் அவருக்கும் அவரைச் சார்ந்தவர்களுக்கும் என்ன நிகழ்ந்தது?

இதனை விலாவாரியாகச் சொல்கிறது இப்படத்தின் மீதி.

உண்மையில், நல்லதொரு ‘பேண்டஸி த்ரில்லர் அட்வெஞ்சர்’ வகைமை படத்திற்கான கதை இது.

அதற்குத் தோதுவாகச் சில காட்சிகளும் இருக்கின்றன.

அவற்றை முறையாகத் திரையில் காட்டியிருந்தாலே ரசிகர்களுக்கு ’நல்லதொரு விருந்து’ கிடைத்திருக்கும்.

ஆனால், நமக்குக் காணக் கிடைத்திருப்பதோ ‘விருந்துண்ட பிறகு உணவிட்ட இடத்தில் தாறுமாறாகக் கிடக்கும் காலிப் பாத்திரங்களை’ எட்டிப் பார்த்தாற் போலிருக்கிறது.

யார் காரணம்?

இந்தப் படத்தில் ‘கிங்ஸ்டன்’ எனும் நாயகப் பாத்திரத்தில் ஜி.வி. பிரகாஷ்குமார் நடித்திருக்கிறார். இப்பாத்திரம் அவருக்கு ஏற்றாற் போலில்லை என்பதே உண்மை. ஆனாலும், அப்பாத்திரமாகத் தெரிய அவர் மெனக்கெட்டிருக்கிறார்.

போலவே, இந்தப் படத்தில் திவ்யபாரதியின் இருப்பும் ரசிக்கும்படியாக இல்லை. அவரும் இக்கதையில் ‘ஆறாவது விரலாகவே’ தெரிகிறார்.

இவர்களோடு சேத்தன், அழகம்பெருமாள், இளங்கோ குமரவேல், சாபுமோன் அப்துசமத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஜி.வி. பிரகாஷின் நண்பர்களாக வருபவர்களும் சரி, இதரப் பாத்திரங்களில் நடித்தவர்களும் சரி, அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

கலை இயக்குநர் மூர்த்தியும் அவரது குழுவினரும் இக்கதையில் வரும் சூழலைக் காட்டச் சிரமப்பட்டிருப்பது திரையில் தெரிகிறது.

பின்பாதியில், நடுக்கடலில் தவிக்கும் படகில் நிகழ்வதாகக் காட்டப்பட்டிருக்கும் காட்சிகள் நல்லதொரு அனுபவத்தைத் தருகின்றன.

கோகுல் பினோய் ஒளிப்பதிவு இப்படத்தில் சிறப்பாக அமைந்திருக்கிறது. விஎஃப்எக்ஸ் மற்றும் டிஐ பணிகளை மனதில் கொண்டு அவர் பணியாற்றியிருப்பதால், மொத்தப்படமும் ஒரே மாதிரியான உணர்வலையை ஏற்படுத்துகிறது.

பாடல்களைப் பொறுத்தவரை, ஜி.வி.பிரகாஷின் பங்களிப்பைக் குறை சொல்ல முடியவில்லை. அதேநேரத்தில், சட்டென்று திரும்பிப் பார்க்கிற வகையிலும் அவை அமையவில்லை.

ஒவ்வொரு காட்சியையும் எப்படியாவது மக்களிடம் கொண்டுபோய் சேர்த்துவிடும் நோக்கோடு, அதன் தன்மையை அடிக்கோடிடும் வேட்கையோடு அவர் பின்னணி இசையை அமைத்திருப்பது அருமை. சில காட்சிகளில் அதற்குப் பலன் கிடைத்திருக்கிறது.

இன்னும் நடனம், சண்டைக்காட்சி வடிவமைப்பு, ஒலி வடிவமைப்பு உட்படப் பல நுட்பங்களில் பெரும் உழைப்பு கொட்டப்பட்டிருக்கிறது.

இயக்குநர் கமல் பிரகாஷின் கதை, திரைக்கதைக்குக் கடலோரக் கிராமத்தின் வட்டார மொழி வழக்கின் வழியே உயிரூட்ட முயன்றிருக்கிறார் வசனகர்த்தா திவேக் சேகர்.

ஆனாலும், ‘ஏலே’ என்ற வார்த்தைகள் மட்டுமே சில இடங்களில் அடுத்தடுத்து வரும்போது காதுகளுக்குள் ‘குய்ங்..’ என்ற சத்தம் பரவுகிறது.

‘கிங்ஸ்டன் மற்றும் சாபக்கடல்’ எனும் தலைப்பும் இப்படத்தின் டைட்டிலில் குறிப்பிடப்படுகிறது.

கடலுக்குள் ஒரு சாபம் காத்திருப்பதாகச் சொல்லப்படுவதே இக்கதையில் இருக்கும் ‘பேண்டஸி அட்வெஞ்சர்’ அம்சங்களைச் சுட்டிக்காட்டிவிடும். அதனால், இதில் பிளாஷ்பேக் பகுதி இருக்குமென்பதையும் ரசிகர்கள் அறிவார்கள்.

ஆனால், அந்த பிளாஷ்பேக்கை எப்படிச் சொல்வது என்பதில் ரொம்பவே குழம்பியிருக்கிறார் இயக்குநர் கமல் பிரகாஷ். திரும்பத் திரும்ப அக்காட்சிகள் வரும்போது அயர்ச்சி பெருகி நிற்கிறது.

முன்பாதியிலும் சரி, பின்பாதியிலும் சரி, அவரது திரைக்கதையில் ‘சொதப்பல்கள்’ அதிகம்.

ஒருவேளை படத்தொகுப்பாளர் சான் லோகேஷ் முயன்றிருந்தால், முன்பாதியை மிக சுவாரஸ்யமானதாக ஆக்கியிருக்க வாய்ப்புகள் அதிகம்.

‘எதெல்லாம் ரசிகர்களை ஈர்க்கும்’ என்று யோசித்து, ‘இந்தக் கதையில் இதையெல்லாம் சொன்னால் போதும்’ என்று முடிவெடுத்திருந்தாலே ‘முதல் பாதி’ சிறப்பானதாக மாறியிருக்கும். அதனைச் செய்யத் தவறியிருக்கிறார் சான் லோகேஷ்.

இரண்டாம் பாதியானது காட்சியாக்கத்திலேயே பல தடுமாற்றங்களைச் சந்தித்திருக்கிறது.

‘யார் வில்லன்’ என்பதை ‘சஸ்பென்ஸ்’ உடன் சொல்வதாக நினைத்து திரைக்கதையைக் குழப்பியடித்திருக்கிறார் இயக்குநர். மொத்தப் படத்தையும் அது சில்லு சில்லாக நொறுக்கியிருக்கிறது.

படத்தொகுப்பு மேஜையில் தீர்மானமாக ஒரு முடிவினை எடுத்திருந்தால், சில காட்சிகளை அகற்றியிருந்தால், இந்த அசம்பாவிதத்தையும் கூடத் தவிர்த்திருக்கலாம்.

இப்படத்தின் தொழில்நுட்பக் குழுவைச் சார்ந்தியங்குபவர்களில் பலர் தற்போது வெற்றிகளைக் குவித்திருக்கும் திரையாளுமைகள் எனும்போது, ஒரு கலந்தாலோசனைக்குப் பிறகு நல்லதொரு முடிவை மேற்கொண்டிருக்கலாம்.

மூத்த படத்தொகுப்பாளர் பி.லெனின் போன்ற எத்தனையோ ஜாம்பவான்கள் நம் திரையுலகில் பல வெற்றிகளைத் தந்திருக்கின்றனர். அவர்களது ஆலோசனைகளைப் பெற்று இப்படத்தைத் திருத்தி அமைத்திருக்கலாம்.

அதனை நிகழ்த்தாத காரணத்தால், ஓரளவுக்குச் சிறப்பான உள்ளடக்கம் இருந்தும் வெற்றிக்கோட்டைத் தொட முடியாமல் சரிந்திருக்கிறது ‘கிங்ஸ்டன்’.

‘நல்லா படிக்கிற’, ‘சூப்பரா விளையாடுற’, ‘எப்பேர்ப்பட்ட திறமை இது’ என்று பாராட்டுகளைப் பெற்ற ஒரு சிறுவனோ, சிறுமியோ பள்ளியில் மோசமாகத் தோல்வியடைவது போன்றதொரு உதாரணத்தைத் தந்திருக்கிறது ‘கிங்ஸ்டன்’.

மோசமான படத்தொகுப்புதான் இப்படத்தின் தோல்விக்குக் காரணமே ஒழிய, குறிப்பிட்ட படத்தொகுப்பாளரைக் குறை சொல்வது நம் நோக்கமில்லை. அதன் பின்னணி என்ன என்பது படக்குழுவினருக்கு மட்டுமே தெரியும்.

திரைக்கதை மற்றும் படத்தொகுப்பு மேஜைகளில் ஒரு திரைப்படத்தின் வெற்றி முடிவு செய்யப்படும் என்று திரையுலகில் சொல்லப்படுவதுண்டு.

‘கிங்ஸ்டன்’ இரண்டாவது மேஜையில் நிறையவே குதறப்பட்டு, திரையரங்கில் நம்மைச் சோதனைக்கு உள்ளாக்கியிருக்கிறது..!

– உதயசங்கரன் பாடகலிங்கம்