Take a fresh look at your lifestyle.

என் வாழ்க்கையை மாற்றிய சினிமா!

‘டிராகன்’ இயக்குநரைப் பாராட்டிய நடிகை கயாடு

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘டிராகன்’. பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்த இந்தப் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகம் ஆனார் கயாடு லோஹர்.

இந்த ஒரே படம், தமிழ் சினிமாவில் அவரை உச்சியில் கொண்டுபோய் நிறுத்தியுள்ளது.

கடந்த மாதம் 21 ஆம் தேதி வெளியான ‘டிராகன்’ வசூலில் புதிய சாதனை படைத்து வருகிறது.

18 நாட்களில் ரூ.140 கோடி வரை வசூல் செய்துள்ளது. படத்தின் பட்ஜெட் 37 கோடி ரூபாய் மட்டுமே. போட்ட முதலீட்டை முதல் வாரம் நெருங்குவதற்குள் அள்ளியது இந்தப் படம்.

‘டிராகன்’ படத்தைத் தொடர்ந்து, இதன் நாயகி கயாடு லோஹர். ‘இதயம் முரளி’ படத்தில் அதர்வா ஜோடியாக நடித்து வருகிறார். இன்னும் சில படங்களில் நடிக்க பேச்சு வார்த்தை நடக்கிறது.

இந்த நிலையில், ‘டிராகன்’ இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவுக்கு நன்றித் தெரிவித்து லோஹர், தனது சமூக வலைத்தளமான ‘இன்ஸ்டாகிராம்’ பக்கத்தில் நீண்ட கடிதம் எழுதியுள்ளார்.

‘என் வாழ்க்கையை மாற்றிய திரைப்படம்’ என அந்த மடலுக்கு லோஹர் தலைப்பிட்டுள்ளார்.

அதில், ‘எனக்கு இப்போதும் பசுமையாக நினைவில் உள்ளது – டிராகன் படத்தின் கதை மற்றும் எனது கேரக்டர் குறித்து வீடியோ காலில் விளக்கினார் அஸ்வத் மாரிமுத்து – முதலில் நான் கீர்த்தி வேடத்தில் நடிப்பதாகச் சொன்னார்.

எனக்கு அந்தக் கேரக்டர் மிகவும் பிடித்திருந்தது – படம் செய்ய ஆவலாக இருந்தேன். ஆனால் ஒரு மாதம் எந்தத் தொடர்பும் இல்லை.

திடீரென ஒரு நாள் மீண்டும் செல்போனில் பேசினார் – இந்த முறை அஸ்வத், பல்லவி கேரக்டர் குறித்து விளக்கினார்.

எனக்குக் குழப்பம். கீர்த்தி என்ன ஆனாள்? என தெரியவில்லை – ஐந்து நிமிடம் கழித்து மீண்டும் அழைத்தார். ‘டிராகனும், பல்லவியும் உங்கள் வாழ்க்கையை திசை மாற்றும்’ என்றார்.

படம் வெளிவந்தபின் பல்லவியையும், லோஹரையும் தமிழ்நாட்டு மக்கள் பெரிதும் நேசிப்பார்கள் என்று உறுதி அளித்தார்.  அவர் வாக்கைக் காப்பாற்றி விட்டார்.

அஸ்வத்துக்கு காலமெல்லாம் நன்றியுடன் இருப்பேன்’ என்று தனது வலைத்தளத்தில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார் கயாடு லோஹர்.

– பாப்பாங்குளம் பாரதி.