தமிழ்த் திரையுலகில் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படம் என்ற வகையில் மர்மர் சாதனை படைக்க இருக்கிறது. இந்தப் படத்தை ஹேம்நாத் நாராயணன் எழுதி, இயக்கியுள்ளார்.
எஸ்.பி.கே. பிக்சர்ஸ் சார்பில் பிரபாகரன் மற்றும் ஸ்டான்ட் அலோன் பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளன. இந்தப் படத்தின் இரண்டு போஸ்டர்கள் வெளியாகி பெரும் பாராட்டைப் பெற்றது.
இந்த நிலையில் மர்மர் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
அதில், திரைப்படத்தின் இயக்குநர் ஹேம்நாத் நாராயணன், ஒளிப்பதிவாளர் ஜேசன் வில்லியம்ஸ், ஒலி வடிவமைப்பாளர் கெவின் ஃபிரடெரிக், படத்தொகுப்பாளர் ரோஹித் மற்றும் இதர தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய மர்மர் படத்தின் சிறப்பு ஒப்பனையாளர் செல்டன், “இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் சிறப்பாக பணியாற்றி இருக்கிறார். மிகவும் சவாலாக இருந்தது.
இந்தப் படத்தில் வரும் உண்மை கதாபாத்திரத்தை மூன்று நாட்கள் தொடர்ச்சியாக உண்மையில் பார்த்தது நான் தான். இதனால் எனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது.
பிறகு திருவண்ணாமலை கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து, அங்கு எனக்கு சுத்திப் போட்டார்கள். அதன்பிறகு வந்துதான் இந்தப் படத்தில் பணியாற்றினேன்.
ஆனால் நான் அதை அவர்களிடம் கூறவேயில்லை. படம் முடிந்த பிறகு இதைச் சொன்னதும் எல்லோரும் அலறினார்கள். இந்தப் படத்தில் பணியாற்ற எனக்கு வாய்ப்பு கொடுத்த படக்குழுவுக்கு நன்றி.
என்னைப் போல் மேலும், பல இளைஞர்கள் இந்தத் துறையில் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கும் வாய்ப்பளித்து, ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அனைவருக்கும் நன்றி,” என்று தெரிவித்தார்.
புதுமையான படங்களை விரும்பும் சினிமா ரசிகர்களுக்கு மர்மர் சிறப்பான திரை அனுபவத்தை வழங்கும். கதாபாத்திரங்கள் வழியே ஆழமான மற்றும் மர்மங்கள் நிறைந்த கதையம்சம் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
உண்மைக்கும், கற்பனைக்கும் இடையில் உள்ள மெல்லிய கோட்டை அழிக்கும் வகையில், பிரத்யேக ஸ்டைல் மற்றும் நுணுக்கங்களை கொண்டு இந்தப் படம் ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை வழங்கும். இந்தப் படம் வருகிற மார்ச் 7 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.