நடிகர் ஆதியின் நடிப்பில் இயக்குநர் அறிவழகன் இயக்கியுள்ள ‘சப்தம்’ திரைப்படம் பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் ‘மரகத நாணயம்’ படத்தின் 2 ஆம் பாகத்தின் அப்டேட்டையும் நடிகர் ஆதி பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பாக, செய்தியாளர்களுடன் பேசிய நடிகர் ஆதி, “மரகத நாணயம் 2 படத்தின் பணிகள் விரைவில் தொடங்குவதற்கான பணிகள் மும்முரமாக நடந்துக் கொண்டிருக்கின்றன. படத்தின் முதல் பாகத்தின் குழுவினருடன் இன்னும் பெரிய குழுவினரும் இணைந்திருக்கிறார்கள்.
முதல் பாகத்தின் கதை சிறியதாக இருந்தது; ஆனால், இரண்டாம் பாகத்தின் கதை பெரியதாக இருக்கும்.

கண்டிப்பாக மரகத நாணயம் நல்ல படமாக வெளிவரும்’’ என்று கூறினார். அதோடு, மரகத நாணயம் 2 ஆம் பாகத்தில் அவரது மனைவி நிக்கி கல்ராணி நடிப்பதுடன், மற்றொரு முன்னணி நடிகையும் நடிக்கவிருப்பதாகக் கூறினார்.
2017-ம் ஆண்டில் இயக்குநர் ஏ.ஆர்.கே. சரவணன் இயக்கத்தில் வெளியான மரகத நாணயம் படத்தில் நடிகர்கள் ஆதி, நிக்கி கல்ராணி, அருண்ராஜா காமராஜ், ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்தனர்.
இந்தப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.