Take a fresh look at your lifestyle.

‘தினம்தோறும்’ – ஓவியன் தீட்டிய ‘இசை’ ஓவியம்!

நடிகர் முரளி. எண்பதுகளில், தொண்ணூறுகளில் தனக்கென்று தனித்த ரசிகர் கூட்டத்தைக் கொண்டிருந்தவர்.

பிற நடிகர்களின் ரசிகர்களும் ரசிக்கிற ஒரு திரையாளுமையாகத் திகழ்ந்தவர். இவரது தோற்றம், குரல், நடிப்பு என்று அனைத்தும் சாதாரண மனிதர்களில் ஒருவராக எண்ண வைக்கும்.

அதுவே, இவரது படங்களை இன்றும் காணச் செய்வதாக இருக்கிறது. அவற்றில் பல குறிப்பிடத்தக்க அளவில் வசூல் வெற்றி பெற்றவை என்பது ஆச்சர்யமூட்டும் உண்மை.

விதவிதமான பாத்திரங்கள், கதைக்களங்கள் என்று முரளி அங்கம் வகித்த திரைப்படங்கள் பல. அவற்றுள் ஒன்றான ‘தினம்தோறும்’, 1998ஆம் ஆண்டு பிப்ரவரி 13ஆம் தேதியன்று ‘காதலர் தின பரிசாக’ வெளியானது.

அன்றைய காலகட்டத்தில் காதலர் தினம் கொண்டாடுவதென்பது மிகப்பெரிய சமூகத் திருவிழாவாக இருக்கவில்லை. ஆனபோதும், அத்தினத்தில் காதலர்கள் பார்ப்பதற்கு ஏற்ற உள்ளடக்கத்தைக் கொண்டிருந்தது அப்படம்.

அதற்காக, கவித்துவமான காதல் கதை என்று இப்படத்தைச் சொல்லிவிட முடியாது. ஏனென்றால், அன்றாடம் நாம் பார்க்கிற காதலர்களில் ஒருவராகத்தான் இதில் முரளி, சுவலட்சுமி ஏற்ற பாத்திரங்கள் வடிக்கப்பட்டிருந்தன.

அந்தப் பாத்திரச் சித்தரிப்பு இன்றைய காலகட்டத்திற்கு கொஞ்சம் அன்னியமாகத் தெரிந்தாலும், காதலர்களின் குணாதிசயங்களை, அவர்களுக்கு இடையேயான புரிதல்களை, சமூகம் அவர்களை நோக்கும் விதத்தைக் காட்டியதில் இப்போதைய ‘ஜென்ஸீ’ தலைமுறைக்கும் பாடமாக அமையக்கூடியது இப்படம்.

’தினம்தோறும்’ கதை!

ஒரு கிராமம். அங்கு வசிக்கிற ஒரு இளைஞன், தனது குடும்பத்தில் இருந்து சாதிரீதியாக, பொருளாதாரரீதியாக வேறுபட்டிருக்கிற பெண்ணை விரும்புகிறார்.

அவரிடம் காதலை நேரடியாகத் தெரிவிக்காமல், மனதுக்குள் ஒருதலைக்காதலை வளர்க்கிறார். அது அவரது நண்பர்கள், உறவினர்கள் சிலருக்குத் தெரியும்.

ஒருநாள் கல்லூரி விடுமுறையையொட்டி ஊர் திரும்பிய அப்பெண்ணிடம் தனது காதலைத் தெரிவிக்கிறார் அந்த இளைஞன். பெரும்பிரயத்தனத்திற்குப் பிறகே, அவர் அதற்கான தைரியத்தைப் பெற்றிருக்கிறார்.

அந்த இளைஞன் தனது காதலைச் சொன்னதும், அந்தப் பெண் ஏற்றுக்கொண்டாரா, இல்லையா? அதன்பின் அந்தக் காதல் என்னவானது என்பது இப்படத்தின் முடிவாக அமைக்கப்படவில்லை.

அந்தப் பெண் அந்தக் காதலை எப்படி அணுகினார்? ஊராருக்கு, குடும்பத்தினருக்கு அது தெரிய வருகிறபோதெல்லாம் அவர் என்ன பதில்களைச் சொல்கிறார் என்பதை நாயகனிடத்தில் ஏற்படுகிற மாற்றங்களைக் கொண்டு கதையாகச் சொல்கிறது ‘தினம்தோறும்’.

சுருக்கமாகச் சொன்னால், ‘காதலிச்சா போதுமா, வாழ்க்கை முழுக்க சேர்ந்து வாழ வேண்டாமா’ என்ற கேள்வியை எதிர்கொள்கிற வகையில் ஒரு காதல் ஜோடி தயாராவதைச் சொன்னது இப்படம். அதனாலேயே, இன்றைய காதல் யுகத்திற்கும் பொருத்தமானதாகத் திகழ்கிறது.

இந்தப் படத்தில் ஆதி எனும் பாத்திரத்தில் முரளியும், அவரது ஜோடியாக பூமா எனும் பாத்திரத்தில் சுவலட்சுமியும் நாயகன் நாயகியாக நடித்தனர்.

இதில் நாயகனின் மதினி பாத்திரத்தில் ரேணுகா நடித்திருந்தார். இது போக சௌந்தர், தினம்தோறும் இயக்குநர் நாகராஜ், சுரேஷ் ஆகியோர் முரளியின் நண்பர்களாக நடித்திருந்தனர்.

நகைச்சுவை, காதல், செண்டிமெண்ட் என்று ஒரு கமர்ஷியல் திரைப்படத்திற்குரிய அம்சங்கள் இந்தப் படத்தில் உண்டு. ஆனால், அது வழக்கமான விகிதத்தில் இருக்காது. அதுவே இப்படத்தினை வேறுபடுத்திக் காட்டியது.

இதில் வில்லனாக மகாநதி சங்கர் நடித்திருந்தார். இது போக மலேசியா வாசுதேவன் நாயகி சுவலட்சுமியின் தந்தையாகத் தோன்றியிருந்தார்.

இது போக கிட்டி, சுவலட்சுமி, வடிவுகரசி, தீபா வெங்கட், பாலாசிங், மணிவண்ணன், அல்வா வாசு என்று ஒரு நட்சத்திரப் பட்டாளமே இடம்பெற்றிருந்தது.

சாதாரணமாகக் கண்களால் காண்கிற ஒரு இடத்தை, கேமிரா மூலமாக அழகுபடுத்திக் காட்டும் வகையில் அமைந்திருந்தது அப்துல்ரகுமானின் ஒளிப்பதிவு. திரையில் கதை மிகஇலகுவாக விரியும் வகையில் இருந்தது பழனிவேலின் படத்தொகுப்பு.

ஓவியன் தந்த பாடல்கள்!

‘தினம்தோறும்’ படத்திற்கு இசையமைத்தவர் ஓவியன். ‘யார் இவர்’ என்று கேட்கும்விதமாக இருந்தன இப்படத்தில் அவர் அமைத்த பாடல்கள்.

“பூக்கள் மலருது தினம்தோறும்”, “தேவதைய கண்டுபுட்டான் நம்ம நண்பன் தான்”, “பட்டதாரிதான்.. புத்தகத்தைதான்”, “பேசாதே ரொம்ப பேசாதே” ஆகிய நான்கு பாடல்கள் திரைக்கதையின் போக்கினைத் தீர்மானிக்கும் விதத்தில் இருந்தன.

அதே நேரத்தில் ‘எவர்க்ரீன் ஹிட் பாடல்கள்’ எனும் வரிசையில் இடம்பெறுகிற வகையில் “என் வானம் நீதானா”, “நெஞ்சத்தில் வெகுநாட்களாய்”, “ஓ கண்ணுக்குள் சுகம் பாய்ந்ததென்ன” பாடல்களைத் தந்திருந்தார் இசையமைப்பாளர் ஓவியன்.

இம்மூன்று பாடல்களும் இன்றும்கூட “காதலர்களின் கீதமாக” ரசிக்கப்படக்கூடியவை.

இப்படத்திற்காக அவர் அமைத்த பின்னணி இசையும் கூட எளிமையானதாக, தனித்துவமானதாக இருக்கும். அந்தவகையில் ஒரு இசை ஓவியமாக இப்படத்தில் அவரது உழைப்பு இடம்பெற்றிருக்கும்.

‘தினம்தோறும்’ படத்திற்குப் பிறகு, ஓவியனுக்குப் பெயர் சொல்லும்விதமான வாய்ப்புகள் அமையாதது துரதிர்ஷ்டமே. இன்று அவர் நம்மிடையே இல்லை.

இயக்குநர் நாகராஜ் போன்றவர்கள் அவர் குறித்து தகவல்களைப் பகிர்ந்தால், பெரிதாகக் கொண்டாடப்படாமல் போன ஒரு ஜாம்பவானை அறிகிற வாய்ப்பு கிட்டலாம்.

மிக எளிமையான கதை, அதனை மிகச்சரியாகப் பிரதிபலிக்கிற வகையிலான வலுவான பாத்திர வார்ப்பு, வாழ்வியலோடு பொருந்துகிற வகையில் சற்றே யதார்த்தம் தெறிக்கிற திரைக்கதை ட்ரீட்மெண்ட், நறுக்கு தெறித்தாற் போலச் சமூகத்தையும் அரசியலையும் கிண்டலடிக்கிற வசனங்கள், அனைத்துக்கும் மேலாக இசை, ஒளிப்பதிவு உட்படச் சிறப்பாக அமைந்த தொழில்நுட்ப உள்ளடக்கம் என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டிருந்தது ‘தினம்தோறும்’.

ஒருநாள் நள்ளிரவில் தற்செயலாக நாயகன் முரளியை ஒரு படப்பிடிப்பில் சந்தித்து ‘தினம்தோறும்’ கதையைச் சொன்னாராம் இயக்குநர் நாகராஜ். அந்த அனுபவம், ஒரு சினிமா கதைக்கு நிகரானது.

அப்படியொரு இயக்குனரையும், இப்படத்தில் சம்பந்தப்பட்ட பல கலைஞர்களையும் நினைவூட்டிய வகையில் முக்கியத்துவம் பெறுகிறது ‘தினம்தோறும்’ எனும் ஒரு ‘சாதாரணமான’ காதல் படைப்பு.

-மாபா