*
1950-ம் ஆண்டுக்கு முன்பு தமிழ்த் திரைப்படங்களில் பாடல்கள் எழுதிப் புகழ் பெற்றவர்களில் கவிஞர் மருதகாசி மிகவும் குறிப்பிடத்தக்கவர்.
ஆயிரம் திரையிசை பாடல்களுக்குமேல் எழுதி அழியாப் புகழ்பெற்ற செந்தமிழ் வித்தகர் கவிஞர் மருதகாசி, மேலக்குடிகாடு என்ற ஊரில் (தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டம்) 1920 ஆம் ஆண்டு பிப்ரவரி பதிமூன்றாம் தேதி பிறந்தார்.
அய்யம் பெருமாள் உடையார், மிளகாயி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்த மருதகாசி, விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.
1940ஆம் ஆண்டு தனக்கோடி அம்மாள் என்பவரை திருமணம் செய்துகொண்ட கவிஞருக்கு, ஆறு மகன்கள், மூன்று மகள்கள் என மொத்தம் 9 இளைய கவிகள் பிறந்தார்கள்.
கவிஞர் பாபனாசம் சிவனின் தமையனார் ராஜகோபாலின் சீடராக இருந்த இவர் ஏ.கே.வேலனின் ‘சூறாவளி’ நாடகத்திற்கும், கலைஞர் மு.கருணாநிதியின் ‘முதல் முத்தம்’, திருச்சி லோகனாதன் இசை அமைத்த ‘வானவில்’ போன்ற நாடகங்களுக்கும் பாடல்கள் எழுதி நாடகத்துறையில் அறிமுகமானார்.
மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர். சுந்தரம் தயாரித்து 1949 ஆம் ஆண்டு வெளிவந்த ‘மாயாவதி’ என்ற படத்திற்கு கவிஞர் எழுதிய “மாயப்பேயாம்…” என்ற முதல் பாடல் அவரை திரைத்துறையில் பிரபலமாக ஆக்கியது.
தொடர்ந்து டி.ஆர். சுந்தரம் தயாரித்த பொன்முடி, மந்திரிகுமாரி, அலிபாபாவும் 40 திருடர்களும், மகேஸ்வரி, குமுதம், வண்ணக்கிளி, பாசவலை, கைதி கண்ணாயிரம் போன்ற பல வெற்றிப் படங்களுக்குப் பாடல்கள் எழுதிப் புகழ் பெற்றார்.
1949 முதல் 1983ஆம் ஆண்டு வரையிலான 35 ஆண்டுகளில் சுமார் 250 படங்களுக்கு 2000 பாடல்கள் வரை எழுதி புகழின் உச்சியில் திரைத்துறையில் கோலேசியுள்ளார் கவிஞர் மருதகாசி.
1983ஆம் ஆண்டு கே.வி.மகாதேவன் இசையில் வெளியான “தூங்காத கண்ணின்று ஒன்று…” என்ற பாடல், கவிஞரின் வரிகளில் அனைவரையும் தாலாட்டியது.
காதல், சோகம், தத்துவம், தெய்வீகம், ஜனரஞ்சகம், வீரம் என, அனைத்திலும் சொற்சுவை பொருட்சுவை கலந்து, செந்தமிழில் ரீங்காரம் செய்த கவிஞா் மருதகாசி, உழவுத் தொழிலின் மேன்மையை சொல்லிய பாடல்கள் மருதகாசியை “மகத்தானகாசி” ஆக்கியது.
“ஏர்முனைக்கு நேர் இங்கே எதுவுமேயில்ல
என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமேயில்லை…”
1959 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த பாடல், உயர்நிலைப் பள்ளிகளின் பத்தாம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் இடம் பெற்று, கவிஞா் மருதகாசிக்கு வரலாற்று புகழ் சேர்த்தது.
ஒரு சினிமா பாடலை பாடமாய் மாற்றிய பெருமை வேறெந்த கவிஞருக்கும் வாய்த்திருக்க முடியாது.
“மணப்பாறை மாடுகட்டி
மாயவரம் ஏருபூட்டி
வயக்காட்டை உழுது போடு சின்னக்கண்ணு…” (1957)
இந்தப் பாடலைக் கேட்டு ரசித்த அன்றைய தமிழக முதல்வர் காமராஜர், கவிஞர் மருதகாசியை தன் வீட்டிற்கு அழைத்து கௌரவித்துள்ளார் என்பது கவிஞருக்கு கிடைத்த மிகப் பெரும் பாக்கியம் ஆகும்.
“பொதியை ஏத்தி வண்டியிலே… பொள்ளாச்சி சந்தையிலே
விருதுநகர் வியாபாரிக்கு சின்ன கண்ணு… நீயும் வித்து போட்டு
பணத்த எண்ணு செல்லக்கண்ணு…”
முதல்வர் காமராஜரை கவர்ந்த கவிஞரின் பாடல் வரிகளில் முக்கியமானவை இவை என்று கூறலாம்.
பிரபல இயக்குநர் ஏ.பி.நாகராஜன் கதை, வசனம் எழுதி இயக்கி தயாரித்த பல படங்களுக்கு கவிஞர் மருதகாசி பாடல்கள் எழுத, கே.வி.மகாதேவன் இசை அமைத்துள்ளார்.
குறிப்பாக எம்.ஏ.வி. பிக்சர்ஸ் தயாரித்து 1958-ல் வெளிவந்த சம்பூர்ண ராமாயணம் படத்தில் கவிஞர் எழுதியுள்ள 14 பாடல்களில் உள்ள அற்புத வரிகளும், கே.வி.மகாதேவனின் இனிய இசையும் இன்ப வெள்ளத்தில் அனைவரையும் மூழ்கடிக்க வைத்தது.
“வீணைக் கொடியுடைய வேந்தனே…”
“சங்கீத சௌபாக்கியமே…”
“இன்று போய் நாளை வா…”
ஆகிய பாடல்கள் இவற்றுள் குறிப்பிடத்தக்கவை.
மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்துள்ள சில படங்களின் பாடல்களிலும் கவிஞர் முத்திரை பதித்துள்ளார்.
1956ஆம் ஆண்டு வெளிவந்த பாசவலை என்ற படத்தில் மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசையில் சிதம்பரம் ஜெயராமன் பாடியுள்ள பாடல்கள் அனைத்தும் கவிஞரின் கருத்துக் கருவூலம் என்று கூறினால் அது மிகையாகாது.
கே.வி. மகாதேவன் இசையில் கைதி கண்ணாயிரம் படத்தில் பி. சுசீலா பாடும் “கொஞ்சி கொஞ்சி பேசி மதி மயக்கும் வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்”
நீலமலைத் திருடன் படத்தில்,
“சத்தியமே லட்சியமாய் கொள்ளடா…”,
“கொஞ்சும் மொழிப் பெண்களுக்கு
அஞ்சா நெஞ்சமும் வேணுமடி…”
வண்ணக்கிளி படத்தில்,
“அடிக்கிற கை தான் அணைக்கும்…”,
“சித்தாடை கட்டிக்கிட்டு சிங்காரம் பண்ணிக்கிட்டு
மத்தாப்பு சுந்தரி ஒருத்தி மயிலாட வந்தாளாம்…”
இப்படி மருதகாசியின் மகத்தான பாடல்களை வரிசைப்படுத்த தொடங்கினால் கட்டுரையில் அடங்காது.
கவிஞர் எழுதிய பாடல்களிலேயே ரசிகர்கள் மனதில் ஆழமாக இடம் பெற்று இன்றளவிலும் கொண்டாடப்படும் பாடல் ‘ரம்பையின் காதல்’ படத்தில் டி.ஆர். பாப்பா இசையில் உருவான,
“சமரசம் உலாவும் இடமே – இவ்வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே” என்ற பாடல்தான்.
இப்பாடலின் கருத்தாழமிக்க வரிகள் இன்றளவும் பல்வேறு சோக நிகழ்வுகளில் நினைவு கூறப்படுகின்றன.
கவிஞா் மருதகாசியின் பாடல்களுக்காகவே நூறு நாட்கள், வெள்ளி விழாக்கள் கண்ட படங்களுமுண்டு.
காதல் பாட்டு எழுதுவதிலும் கைதேர்ந்த மருதகாசியின் வரிகளில் ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’ படத்தில் ஏ.எம். ராஜா – பானுமதி இணைந்து பாடிய,
“மாசிலா உண்மைக் காதலே
மாறுமோ செல்வம் வந்த போதிலே…” என்ற பாடல், ஆண்டுகள் 64 கடந்த போதும் ரசிகர்களின் செவிகளில் இன்பத் தேனை பாய்ச்சுகின்றன.
‘மந்திரி குமாரி’ படத்தில் திருச்சி லோகநாதன் – ஜிக்கி பாடும் “வாராய் நீ வாராய்…”,
“உலவும் தென்றல் காற்றினிலே…” ஆகிய பாடல்களை எளிதில் மறந்து விட முடியாது.
மெட்டுக்குப் பாட்டு எழுதும் திறன் கொண்ட கவிஞர் மருதகாசி, அனைத்து இசையமைப்பாளர்களின் பாராட்டுக்களையும் பெற்றவர்.
கவிஞரின் திரை இசைப்பாடல்களையும் புத்தகங்களையும் 2007 மே 4 ஆம் தேதியன்று தமிழக அரசு அரசுடமை ஆக்கியது.
1955ஆம் ஆண்டு முதல் 1961 வரை, தமிழ் படங்களில் அதிகமான பாடல்களை எழுதி இணையற்ற திரைப்பாடல் மன்னராகத் திகழ்ந்த கவிஞர் மருதகாசி, 1989 நவம்பர் 29ஆம் நாளன்று தனது 69ம் வயதில் உயிர் நீத்து, அவரது வரிகளின்படியே சமரசம் உலாவும் இடத்தை நோக்கிப் பயணித்தார்.
*
-நன்றி: அந்தோணிராஜ் பதிவு
#கவிஞர் #மருதகாசி #மணப்பாறை #செந்தமிழ்வித்தகர் #பாபனாசம்சிவன் #கேவிமகாதேவன் #விஸ்வநாதன்_ராமமூர்த்தி #maruthakasi #Poet #ModernTheatres