Take a fresh look at your lifestyle.

நடிகர் சங்கம் எப்படி இயங்க வேண்டும்?

எம்ஜிஆர் தந்த விளக்கம்.

நடிகர் சங்கம் எப்படி இயங்க வேண்டும் என்பது குறித்து நடிகன் குரல் இதழில் கேட்கப்பட்ட கேள்விக்கு எம்.ஜி.ஆர் தந்த பதில்.
 
கேள்வி:
 
ஆதியிலிருந்து நடிகர் சங்கத்திற்கு நீடித்த பல நற்றொண்டுகளைச் செய்து வந்திருக்கிறீர்கள்; சங்கத் தலைவராகவும் பொதுச் செயலாளராகவும் இருந்து நல்ல சாதனைகளையும் செய்திருக்கிறீர்கள்.
 
தற்போது மீண்டும் பொதுச்செயலாளராக இருக்கிறீர்கள். உங்கள் உள்ளத்தின் உள்ளே நடிகர் சங்க வளர்ச்சிக்கான எத்தனையோ உன்னத லட்சியங்கள் உள்ளன என்பதைப் பலரும் அறிவார்கள்.
 
அவைகள் எல்லாவற்றையும் உடனே நிறைவேற்ற முடியும் என்று யாரும் எதிர்பார்க்க முடியாது. ஆனால் காலப்போக்கில் ஆற்றப்பட வேண்டிய அப்பணிகளையும் லட்சியங்களையும் அறிவிக்க முடியுமா?
 
புதுமுக நடிகர்கள், நடிகையர்களின் எதிர்காலத்திற்குத் தாங்கள் வகுக்கும் திட்டம் என்ன?
 
எம்.ஜி.ஆரின் பதில்:
 
நடிகர் சங்கம் தோன்றியதற்கு அடிப்படைக் காரணமே, கலைஞர்கள் வளர்ச்சி முதல், அதற்குப் பிறகு கலை வளர்ச்சி என்பது தான்.
 
கலையைப் பற்றிய வளர்ச்சி முதல் நோக்கமானால் அதற்கு ஆராய்ச்சிக் கழகம் அமைப்பதுதான் முறை.
 
அறிஞர்கள், கலைஞர்கள், பண்டிதர்கள், இலக்கிய கர்த்தாக்கள் முதலானோர் அடங்கிய ஆய்வுக்குழு, அந்தத் துறையில் ஆழ்ந்து, சிந்தித்து புதுப் புதுப்புது வழிகளைக் கண்டுபிடித்து, நல்ல முடிவுகளையும் விளக்கங்களையும் வழங்க வேண்டும்.
 
தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய துணை நடிகர் சங்கம் என்ற பெயருடன் ஆரம்பமான அமைப்புதானே அன்றி கலை ஆராய்ச்சிக் கழகம் அன்று.
 
எல்லா நடிகர்களும் இணைந்து ஒருமித்த பயனடைய வேண்டும் என்ற நோக்கத்துடன், ‘துணை நடிகர் சங்கம்’ என்ற பெயர் நீக்கப்பட்டு, ‘நடிகர் சங்கம்’ என்ற பெயர் சூட்டப்படலாயிற்று.
 
ஆகவே, நடிகர்களின் வாழ்க்கைப் பிரச்சனை தான் நடிகர் சங்கத்தின் மூல நோக்கம். விளம்பரம் இல்லாத, தகுதி இருந்தும் வாழ்வில்லாத சமூகத்தில் இருந்து தள்ளி வைக்கப்பட்டிருக்கிற கலைஞர்களை வாழ வைப்பதற்குரிய வழிமுறைகளை வகுத்துச் செயலாற்ற வேண்டும்.
 
அதற்கு அடிப்படையான சில உண்மைகள் விளக்கம் பெற வேண்டும். நடிகர்களுக்குள் பேதம் கூடாது; உயர்வு தாழ்வு வேற்றுமைகள் அறவே கூடாது. இன்று உச்ச நிலையில் வாழ்பவர்களை எதிர்காலம் பராரியாக்கி விடக்கூடும்.
 
அதேபோல், இன்று முகவரியே தெரியாமல் இருப்பவர்களை வருங்காலம் மாபெரும் புகழ் படைத்தவர்களாக்கவும் செய்யும்.
 
ஆதலால் துணை நடிகர், சிறந்த நடிகர் என்ற பாகுபாட்டிற்கு பொருள் இல்லை என்பதைக் காலத்தின் அற்புத ஆற்றல் கண்கூடாகக் காட்டி வருவதை நாம் எல்லோரும் உணர வேண்டும்.
 
நடிகர் சமுதாயம் பேதமற்ற ஐக்கிய சமுதாயமாக வேண்டும் என்பதுதான் சங்கத்தின் உயிர்த் தத்துவம். இன்று புகழ் பெற்ற நடிகர்களை, புகழ் பெறாதவர்கள் சந்திப்பதற்கு ஏற்ற வாய்ப்பைத் தருவது சங்கம்.
 
அப்படி இரு தரத்தாரும் சந்திக்கும்போது, வாழ்பவர்கள், தங்கள் கடந்த கால நிலையை, அதாவது நொந்துபோன நிலையைத் தம்முன் இருப்பவர்களின் நிலையைப் பார்த்து நினைவுபடுத்திக் கொள்ளவும், வாழாத நிலையில் இருப்பவர்களுக்கு வாழ்பவர்கள் பாதுகாப்பு அளிக்கவும், கைதூக்கி விடவும் அல்லது ஆறுதல் அளிக்கவும் இடமேற்படும்.
 
அந்த அடிப்படையில் இயங்குவதற்கான நோக்கத்தில் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளும் சூழ்நிலை வாழ்பவர்களுக்கு ஏற்படும்; வாழாதவர்களுக்கு எதிர்கால நம்பிக்கை உதயமாகும்.
எல்லா நடிகர்களும் மாட மாளிகைகளையோ, கார் வசதிகளையோ, விளம்பரப் புகழையோ, பெற்றுவிட முடியுமா என்பது ஒரு கேள்வி. ஏறக்குறைய வருஷத்துக்கு 50 படங்கள் வருகின்றன என்று வைத்துக் கொள்வோம்.
 
வெவ்வேறு கதாநாயகர் அந்தந்த படங்களில் போடப்பட்டால் அதாவது, ஒவ்வொரு படத்திற்கும் ஒவ்வொரு புதிய நடிகரைக் கதாநாயகராக அமைத்தால் எந்த நடிகருக்கும் விளம்பரம் ஏற்படாது. வியாபாரிகளுக்குக் குறிப்பிட்டவர்கள் தாம் தேவை.
 
அப்போதுதான் அவர்களிடம் வினியோகஸ்தர்கள் வருவார்கள் என்பதும் கொட்டகைகள் அவர்களின் படங்களுக்குக் கிடைக்கும் என்பதும் அவர்கள் கூறும் காரணங்கள்.
 
ஆகவே, 50 நடிகர்கள் கதாநாயகர்களாக வருவதற்கு அவர்களின் திட்டம் இடம் தராது. ஐந்தாறு பேர்கள் வருவதே பெரிது.
 
மேலும் ஓராண்டுக்கு 50 புது நடிகர்கள், 50 படங்களில் தோன்றினால் அடுத்த ஆண்டு அதே முறையில் மற்றும் 50 புது நடிகர்கள் தோன்ற நேர்ந்தால், முதலாண்டு தோன்றிய 50 நடிகர்களின் நிலை என்ன? துணை நடிகர்களாகி விடுவார்கள்.
 
இப்படிப்பட்ட நிலை உண்டாக்கக் கூடாது என்றால், அரசாங்கம் நடிகர்களை வைத்துப் படம் எடுக்க முன்வரவேண்டும். சர்க்கார் உத்தரவாதம் இருந்தால் கொட்டகைக் கிடைக்கும். விநியோக வசதி உண்டாகும்.
 
இந்த வாய்ப்புடன் ஒவ்வொரு புது நடிகரும் அவரவருடைய கலைத் திறமை, பாத்திரத்துக்கு ஏற்ற உருவம், குரல் முதலிய தன்மைகளைக் கொண்டு முன்னேற முடியும். அவர்கள் செய்யும் தொழிலுக்கும் நிரந்தரமான, உத்திரவாதமுள்ள ஊதியம் கிடைக்கும்; வாழ்க்கையை செம்மையாக அமையவும் வழிகோலும்.
 
நாளடைவில் விளம்பரமாகிவிட்டால் புகழும் பணமும் கிடைக்க வழி உண்டாகும்.
 
புகழும் பணமும் எந்த வேடத்திற்கும் கிடைக்குமானால் போட்டி இராது. இப்படிப்பட்ட நிலைமையை உருவாக்குவதற்கு நடிகர் சங்கம் செய்யப்பட வேண்டும். திட்டமிட்டு அரசினரோடு பேசி முடிவு எடுக்கப்பட வேண்டும். வளமான ஏற்பாடுகள்.
 
இது என் மனத்திலே ஏற்படும் ஆசை. நடைமுறைக்கு வர ஒற்றுமையுடன் எல்லோரும் சேர்ந்து ஒருமித்த குரலாக முழங்க வேண்டும். அப்போது தான் நிம்மதியாக வாழ முடியும்.
 
இதுவரை நடிகர்களுக்குத் தேவையான தகுதி நடிப்புத்தான். அனுபவத்தைக் கொண்டு, நடிப்பவரை எடை போடுவது வழக்கம். முன்பெல்லாம், “நீ எந்தக் கம்பெனி நடிகன்?” என்று கேட்டு, அவன் சொல்லும் கம்பெனியைப் பொறுத்துத் தேர்ந்தெடுப்பார்கள்.
 
பி.ஏ., பி.எல் படித்த ஒரு நண்பர் வந்தார். அவர் தன்னுடைய படிப்பை ஒட்டிய தொழிலில் சைனிங் பெற முடியவில்லை என்றும் திரைக்கலையில் நுழைந்து சைனிங் பெற விரும்புவதாகவும் சொன்னார்.
 
நான் அவரிடம் “நண்பரே! எத்தனையோ பேராசிரியர்கள் சேர்ந்து ஒரு தகுதியும் பட்டமும் உங்களுக்குக் கொடுத்து, உங்களை அந்தத் தொழிலுக்குத் தான் அதிக தகுதியுடையவர் என்று முடிவு செய்திருக்கிறார்கள். அதிலேயே நீங்கள் சைன் செய்யவில்லை என்றால், வேறு எதில் பிரகாசிக்க முடியும்?” என்றேன்.
 
நடிப்புத் துறையில் பலருக்கும் நாட்டம் பிறக்கலாம். ஆனால் அதற்கு எத்தனை தகுதிகள் வேண்டும் என்பதை அவர்கள் எல்லோரும் அறிய மறந்து விடுகிறார்கள்.
 
நடிகன் மேடை எனும் உலைக் கூடத்தில் புடமிடப்பட்டு, கலைத்திறம் கைவரப் பெறுகிறவன். அத்தகையவனுக்கு உள்ளமும் உடலும் உறுதி பெற்றிருக்க வேண்டும். உணர்ச்சிக் கட்டங்களிலும் மற்றும் பலவகைக் காட்சிகளிலும் அவனுடைய உழைப்பு அசாதாரணமானது.
 
விஞ்ஞான ரீதியாக அவன் தன் உடற்கூற்றை நன்றாகப் புரிந்து கொண்டிருக்க வேண்டும். விளைவுகளுக்கு விளக்கம் தெரிந்து கொண்டிருக்க வேண்டும். அரசினர் இந்தப் பயிற்சியை நடிகர்கள் பெற வாய்ப்பளிக்க வேண்டும்.
 
அப்போதுதான் நடிகர்களும் தங்கள் தகுதியைப் புரிந்துகொண்டு பணியாற்றத் தலைப்படுவார்கள்.
 
கலையார்வம் மிக்கவர்கள் நடிப்புத் தொழிலில் ஊறியவர்கள். அவர்களுடைய நிலைமை பாதுகாப்பு அளிக்கப்படும் காலம் விரைவில் வர வேண்டியது அவசியம். எல்லோரும் கலைத் துறையில் புகுந்து விட நினைப்பதும் தவறு.
 
நடந்த ஒரு உண்மை நிகழ்ச்சியைக் கூற விரும்புகிறேன். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் ஓர் இளைஞரை வித்துவான் படிப்பு படிக்க வைத்தேன். பரீட்சையிலும் தேறினார்.
 
அதன்பின் அவர் என்னிடம் வந்து “நீங்கள் தான் பணம் கொடுத்தீர்கள்! என்னைப் படிக்க வைத்தீர்கள்” என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டார்.
 
பிறகு அவர் நடிக்க வந்ததாக என்னிடம் தெரிவித்தார். அதைக் கேட்டதும் எனக்கு அதிர்ச்சி ஆயிற்று.
 
“நடிக்கவா வந்தீர் நடிப்பதற்காக வித்துவான் படிப்பு படித்தீர்! இப்படி வீணாக்கி விட்டீரே. இன்னொருவர் படிக்கக் கூடிய நிலையையும் கெடுத்து, நீரும் படித்ததன் பயனைக் காணாமல் நிற்கிறீரே! வித்வான் பட்டம் வாங்கியது இதற்குத்தானா?” என்று கண்டித்தேன்.
 
5 அடி உயரமுடைய அவர், காலத்தையும் பொருளையும் நேரத்தையும் இன்னொருவரின் வாய்ப்பையும் கெடுத்திருக்கிறார் என்று எண்ணியபோது, அவர் தண்டனைக்கு உரியவன் என்று தான் தோன்றியது.
 
“யாரிடமும் உன்னை நடிப்பதற்கு என அறிமுகம் செய்து வைக்க இயலாது” என்று கூறி அனுப்பினேன்.
 
அவருக்குப் புகழிலும் பணத்திலும் ஆசையே தவிர, கலையில் ஆர்வம் கிடையாது. பொதுவாக நடிப்புத் தொழிலைச் சுலபமாகக் கைவரப் பெறும் எண்ணம் பலருக்கும் இருக்கிறது. அது எவ்வளவு தவறானது என்பதைச் சிந்திக்க வேண்டும்.
 
அரசாங்கம் நடிகர்களைத் தேர்ந்தெடுத்து வாய்ப்பும் வாழ்க்கை நம்பிக்கையும் அளிக்க வேண்டும் என்று நான் சொன்னேன் அல்லவா? சிறந்த நடிகர்களைத் தோற்றுவிப்பதற்காக செயல் முறைகளையும் வகுக்க வேண்டும்.
 
மேலும் நட்சத்திர நடிகர், சாதாரண நடிகர் என்ற பாகுபாடு ஏற்படாதவாறு, மக்கள் எல்லோரும் எல்லாப் படங்களையும் பார்ப்பதற்காக ஒரு வழியும் செய்ய வேண்டும்.
 
எல்லாத் தொழில் ஸ்தாபனங்களிலும் அலுவல் பார்ப்போருக்கு, அவர்களின் சம்பளத்திலேயே பிடித்தம் செய்து, படங்கள் பார்ப்பதற்கான டிக்கெட் அல்லது பாஸ் வழங்க வேண்டும். அந்தப் பணம் சர்க்காருக்கே திரும்பி வருகிறது என்பதை மறக்க வேண்டாம்.
எந்த நஷ்டமும் ஏற்பட இடமில்லை. மக்களுக்கும் படங்கள் பார்த்த களிப்பு ஏற்படும்.
 
இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் சர்க்கார் நல்ல லட்சியங்களை ஆணித்தரமாகக் கை கொண்டிருக்க வேண்டும்.
 
எந்தக் கட்சியினர் ஆட்சியில் இருந்தாலும் சரி, அவர்கள் தங்கள் கட்சி நலன்களுக்கு பயன்படுத்தாத வகையில், கலையை, கலைத் தொழிலை, அறிஞர்கள், இலக்கிய கர்த்தாக்கள், கலைஞர்கள் அடங்கிய நிரந்தரமான மாறுபடாத ஒரு குழுவிடம் ஒப்படைக்க வேண்டும்!
 
அந்தக் குழுவில் கட்சிச் சார்புடையவர்கள் இருக்கக் கூடாது.
 
சர்க்கார் பொருளாதாரத் துறையில் அக்குழுவிற்கு உதவ வேண்டுமே தவிர, கருத்துக் குறுக்கீடு செய்யக்கூடாது. எந்த அரசியல் நோக்கமும் இராத அமைப்புடைய அந்தக் குழுவினரின் முடிவுதான் அரசினரின் முடிவாக இருக்க வேண்டும்.
 
இந்தக் கருத்து பற்றி இன்னும் பல விளக்கங்கள் கொடுக்க வேண்டும். அவை செயல்படும் போது அந்த விளக்கங்கள் பெரிதும் பயன்படும் என்றும்,
 
முடிவாக நடிகர் சங்கம் கலைஞர்களின் செம்மையான வாழ்வுக்காக அமைக்கப்பட்ட அமைப்பு தான் என்றும், அந்த நோக்கமே அதன் உயிர்மூச்சு என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
நன்றி: நடிகன் குரல். 1966, மே.