Take a fresh look at your lifestyle.

மாணவிகளுக்கு தற்காப்புக் கலையைக் கற்றுக் கொடுக்க விருப்பம்!

- நடிகை அபர்ணா பாலமுரளி

தமிழில் ‘8 தோட்டாக்கள்’ படம் மூலம் அறிமுகமான அபர்ணா பாலமுரளி, ‘சூரரைப் போற்று’ படம் மூலம் பிரபலமானார்.

‘சர்வம் தாளமயம்’, ‘தீதும் நன்றும்’, ‘வீட்ல விசேஷம்’, ‘நித்தம் ஒரு வானம்’, ‘ராயன்’ படங்களில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி திறமையான நடிகையாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். மலையாளத்திலும் முன்னணிக் கதாநாயகியாக இருக்கிறார். 

அண்மையில் நடந்த நேர்காணல் ஒன்றில் பேசிய அபர்ணா பாலமுரளி, சிறு வயதிலிருந்து கமல்ஹாசன் சாருக்கு நான் தீவிர ரசிகை. ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் கமல்ஹாசன் படங்களைத்தான் பார்ப்பேன். வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கும் கமலை பார்த்துதான் நடிக்க வந்தேன்.

சினிமா ஆடிஷன் நடப்பதாக தெரிந்து ஒருமுறை சென்னை சென்றேன். அங்கே வந்த ஆயிரக்கணக்கானவர்களைப் பார்த்த பிறகு எனக்கு பயமாகிவிட்டது.

என் முறை வந்த பொழுது உள்ளே அழைத்தார்கள். அங்கே சென்ற பிறகுதான் தெரிந்தது சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு என்று.

எனக்கு இது நிச்சயம் வராது என்று நினைத்துக் கொண்டே ஆடிஷன் கொடுத்தேன். ஒரு வாரத்திற்கு பிறகு ‘சூரரைப் போற்று’ படத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டதாக சொன்னார்கள்.

ஆச்சரியம், ஆனந்தம். தலைகால் புரியவில்லை. நடிப்பு ரீதியாக அந்தப் படம் எனக்கு நல்ல பெயருடன், தேசிய விருதையும் பெற்றுத் தந்தது.

முதலில் ஒல்லியாக இருந்தேன். ஆனால் அதன்பிறகு மெல்ல மெல்ல குண்டாகி விட்டேன். அத்துடன் உனக்கு அம்மா கதாபாத்திரங்கள் தான் சூட்டாகும் என்று நிறைய பேர் என் முகத்தின் மீது அறைந்த மாதிரி சொல்வார்கள்.

சமூக வலைதளத்திலும் ட்ரோல் செய்தார்கள். அதற்காக முதலில் மிகவும் வருத்தப்பட்டேன். சிறிது காலத்திற்கு பிறகு அந்த வேதனையிலிருந்து வெளியே வந்தேன். என் நடிப்பை பார்த்து நிச்சயம் வாய்ப்புகள் வரும் என்று என் மீது நானே நம்பிக்கை ஏற்படுத்திக் கொண்டேன். அது உண்மையாகி விட்டது.

எனக்கு புத்தகங்கள் படிப்பது, டீ குடிப்பது என்றால் விருப்பம். ஓய்வு கிடைத்தால் போதும் எங்கள் வீட்டு பால்கனியில் உட்கார்ந்து கொண்டு புத்தகம் படித்துக் கொண்டே டீ குடிப்பேன்.

எனக்கு மார்ஷல் ஆர்ட்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். ஓய்வு கிடைத்த பொழுதெல்லாம் அவற்றை கற்றுக் கொள்கிறேன். பிட்னஸ்க்காக இல்லாவிட்டாலும் தற்காப்புக்காவது பெண்களுக்கு இது மிகவும் அவசியம். அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு தற்காப்புக் கலையைக் கற்றுக் கொடுக்க வேண்டும் என திட்டம் வைத்திருக்கிறேன்.

நன்றி: தினந்தந்தி