ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்துள்ள புதிய படம் ‘ஜெனி’. பேன்டசி பொழுதுபோக்கு படமாக 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில், இது உருவாகி உள்ளது.
ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் கிருத்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், வாமிகா கபி, தேவயாணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
மிஷ்கினிடம் உதவியாளராக பணியாற்றிய, அர்ஜூனன் ஜூனியர் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.
துப்பாக்கி, ரத்தம் ஆகிய அம்சங்களே இன்றைய வெற்றிப்படத்தின் சூத்திரம் என்றாகிவிட்ட நிலையில் ‘ஜெனி’ எப்படி இருக்கும்?’ என கேட்டபோது, டைரக்டர் அர்ஜுனன் அளித்த பதில் இது:
‘எனக்கு வன்முறை அறவே பிடிக்காது. இப்போதைய பெரிய படங்கள் எல்லாம் ரத்தம், போதைபொருள், மாஃபியா, கேங்க் ஸ்ட்ர்ஸ் என ஒரே மாதிரியாக வந்து கொண்டிருக்கும் சூழலில் ஃபேண்டசியான படத்தை ரசிகர்களுக்கு கொடுக்க விரும்பினேன்.
இந்தப் படத்தின் கதையை கமல்ஹாசனை மனதில் வைத்தே எழுதினேன். கதையை எழுதி முடித்ததும் மூன்று ஆண்டுகள் கமல் சாரிடம் கதை சொல்ல முயற்சித்து வந்தேன்.
நான் அறிமுக இயக்குநர் என்பதால் அவரை சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்போது ஐசரி கணேஷ் சாரிடம் இந்தக் கதையை சொன்னேன். அவரும் அந்த நேரத்தில் கமலுடன் இணைந்து ஒரு படம் செய்வதாக திட்டம் இருந்தது.
ஆனால் கொரோனாவால், எல்லா திட்டமும் வீண் ஆகி விட்டது என பெருமூச்சு விட்ட, அர்ஜூனன் தொடர்ந்தார்.
கடைசியாக ஜெயம் ரவியிடம் கதை சொன்னேன். அவருக்கு பிடித்துப் போயிற்று. நான் தான் உங்கள் ‘ஜெனி’ என உற்சாகத்துடன் ஓகே சொன்னார். படத்தை ஆரம்பித்து முடித்து விட்டோம்’ என குதூகலமாக தனது படம் உருவான கதையை சொல்லி முடித்தார் அர்ஜூனன்.
பாப்பாங்குளம் பாரதி.