Take a fresh look at your lifestyle.

‘தக் லைஃப்’: ஜெயம் ரவியும் விலகல்!

கமல் – மணிரத்னம் சேர்ந்து உருவாக்கும் ‘தக் லைஃப்’ சினிமா, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

44 ஆண்டுகளுக்கு முன்பாக கமல்ஹாசனும், மணிரத்னமும் இணைந்து வழங்கிய ‘நாயகன்’ திரைப்படமும் பிரச்சினைகளில் சிக்கி, பஞ்சாயத்துக்கு பிறகே மீண்டும் வளர்ந்தது.

‘நாயகன்’ படத்தை முதலில் தயாரிக்க ஆரம்பித்தவர் முக்தா சீனிவாசன். படத்தின் ’பட்ஜெட்’ எகிறியதால் மிரண்டு போனவர், படத்தை கை விடும் நிலைக்கு போய் விட்டார்.

மணிரத்னம் அண்ணன் ஜீவி, ‘நாயகன்’ திரைப்படத்தின் முழு உரிமையையும் வாங்கி அதன் தயாரிப்பு பணியைத் தொடர்ந்தார். படம் வெளியாகி, பெரும் சாதனைப் படைத்தது ஊரறிந்த செய்தி.

இந்த நிலையில் கமலும், மணிரத்னமும் மீண்டும் ‘தக் லைஃப்’ படத்தில் இணைந்தனர்.

கமலின் ராஜ்கமல் நிறுவனம், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ், உதயநிதியின் ரெட்ஜெயண்ட் ஆகிய மூன்று பெரிய நிறுவனங்களும் இந்தப் படத்தை தயாரிக்கின்றன.

இந்தப் பிரமாண்ட படத்தில் நடிக்க ஜெயம் ரவி, துல்கர் சல்மான், திரிஷா, கௌதம் கார்த்திக், மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்ஷ்மி, விருமாண்டி புகழ் அபிராமி, நாசர் உள்ளிட்டோர் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.

இதன் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாத இறுதியில் தொடங்கியது. சென்னையில் முதல் ‘ஷெட்யூல்’ நடத்தப்பட்டது. அடுத்தகட்டப் படப்பிடிப்புக்காக படக்குழு செர்பியா நாட்டுக்கு சென்றது.

சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில், அமெரிக்காவில் இருந்து செர்பியா வருவதாக சொன்ன கமல், திட்டமிட்டபடி அங்கே செல்லவில்லையாம்.

மக்களவைத் தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதால், தேர்தல் முடிந்த பின்பு படப்பிடிப்பில் கலந்து கொள்வதாக அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மணிரத்னம் உள்ளிட்ட படக்குழு சென்னை திரும்பியுள்ளனர்.

கால்ஷீட் பிரச்சினையால், இந்தப் படத்தில் இருந்து துல்கர் சல்மான் ஏற்கனவே விலகி விட்டார். அவருக்கு பதிலாக சிம்பு நடிப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் ‘தக் லைஃப்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க இருந்த ஜெயம் ரவியும் படத்தில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டுள்ளார்.

அவர், இப்போது ஜெனி, பிரதர் ஆகிய இரு படங்களில் நடித்து வருகிறார்.

‘தக் லைஃப்’பில் தனது போர்ஷன் முடிந்ததும், இந்தப் படங்களில் அவர் நடிக்க இருந்தார். ஆனால் ‘தக் லைஃப்’ ஷுட்டிங் எப்போது? என தெரியாத நிலையில், அதில் இருந்து ஜெயம் ரவி, விலகி விட்டதாக கோடம்பாக்கம் வட்டாரங்கள் தெரிவித்தன.

– பாப்பாங்குளம் பாரதி.