Take a fresh look at your lifestyle.

அஜித்தின் புதிய படத்தின் பெயர்- ‘குட் பேட் அக்லி’!

‘அல்டிமேட் ஸ்டார்’ அஜித்தின் 63 -வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

படத் தலைப்பு, இயக்குநர், இசை அமைப்பாளர், ஷுட்டிங் தொடங்கும் நாள், ரிலீஸ் தேதி என முழு விவரங்களையும் அஜித்தின் படக்குழு வெளியிட்டுள்ளது.

அஜித்தின் இந்த அதிரடி அறிவிப்புக்கு காரணம் இல்லாமல் இல்லை. அஜித்தின் ‘துணிவு’ திரைப்படம் கடந்த ஆண்டு பொங்கல் திருநாளில் வெளியானது. அதே நாளில் விஜய் நடித்த ‘வாரிசு’ திரைப்படமும் ‘ரிலீஸ்’.

அதன் பிறகு, ‘லியோ’ திரைப்படத்தில் நடித்து முடித்து, அது ரிலீஸ் ஆகி, அடுத்தப் படத்திலும் நடித்து முடிக்க உள்ளார் விஜய்.
ஆனால் அஜித்தின் சினிமா பயணத்தில் நீண்ட இடைவெளி உருவாகி விட்டது.

அதற்கு அவர் காரணமல்ல. ‘துணிவு’ படத்தைத் தொடர்ந்து, லைகா நிறுவனத்துக்கு ‘கால்ஷீட்’ கொடுத்த அஜித், விக்னேஷ் சிவனை இயக்குநராக ஓகே செய்திருந்தார்.

கதையில் தாமதம், படப்பிடிப்புக்கு விக்னேஷ் சிவன் விதித்த நிபந்தனைகள், அஜித்துக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

அந்தப் படத்தில் இருந்து விக்னேஷ் சிவனை கழற்றி விட்டார். பின்னர் இயக்குநர் மகிழ் திருமேனி சொன்ன கதை பிடித்துப்போக, அவரது இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் அஜித். தயாரிப்பு அதே – லைகா நிறுவனம்தான்.

விக்னேஷ் சிவன் செய்த குளறுபடிகளால் ஒராண்டு அஜித், சும்மாவே இருக்க வேண்டியதாகி விட்டது. 100 + கோடி அஜித்துக்கு நஷ்டம் என்பதோடு, அவரது ரசிகர்களும் சோர்ந்து போனார்கள்.

இனிமேல் இதுபோன்ற நிகழ்வுகள் உண்டாகி விடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்த அஜித், ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அஜித்குமார் இப்போது நடிக்கும் ‘விடாமுயற்சி’ படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வந்தது. 90 சதவீத ஷுட்டிங் முடிந்து விட்டது.

கடைசி கட்டப் படப்பிடிப்புக்கு அஜித் உள்ளிட்ட படக்குழு வேறொரு வெளிநாட்டுக்கு செல்கிறது. இத்துடன் முழு படப்பிடிப்பும் நிறைவு பெற்று விடும்.

இந்நிலையில்தான், அஜித்தின் 63-வது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.

2015 ஆம் ஆண்டு வெளியான ‘திரிஷா இல்லனா நயன்தாரா’ என்ற படத்தின் மூலம் ஆதிக் ரவிச்சந்திரன் சினிமாவில் அறிமுகமனார்.

பின்னர் சிம்புவின் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’, ‘பகீரா’ ஆகிய படங்களை இயக்கியிருந்தார்.

மூன்று படங்களுமே ஆதிக்கின் பெயர் சொல்லாத நிலையில், கடந்த ஆண்டு வெளியான ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் ரவிச்சந்திரனுக்கு மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுக்கொடுத்தது.

இதனை அடுத்து ‘அல்டிமேட் ஸ்டாரை’ வைத்து படம் இயக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார், ஆதிக். இந்தப் படத்துக்கு ‘குட் பேட் அக்லி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

மைதிரி மூவீ மேக்கர்ஸ் என்கிற தெலுங்கு பட நிறுவனம் படத்தை தயாரிக்க, தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

ஜூன் மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என்றும், 2025 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது, படம் வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது.

ஆங்கில ‘டைட்டில்’ அஜித், தனது படங்களுக்கு ஆங்கிலப்பெயர் வைப்பதை பொதுவாக விரும்புவது கிடையாது.

2002 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன ‘ரெட்’, வில்லன்’ ஆகிய படங்கள் அஜித் நடித்து ஆங்கில பெயர் தாங்கி வந்த படங்கள். அதன் பின், 22 ஆண்டுகள் கழித்து அஜித் படத்துக்கு ஆங்கில ‘டைட்டில்’ சூட்டப்பட்டுள்ளது.

‘குட்..பேட்..அக்லி’ குறித்து அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திராவிடம் கூடுதல் விவரங்கள் கேட்டபோது, ‘மார்க் ஆண்டனி’ படம் முடியும் முன்பாகவே, அஜித்திடம், ஆதிக் ரவிச்சந்திரன், கதை சொல்லி சம்மதம் பெற்று விட்டார். ஜுன் முதல் வாரத்தில் ஷுட்டிங் ஆரம்பம்’ என்று தெரிவித்தார்.

கடந்த 1966 ஆம் ஆண்டு, ஹாலிவுட் நடிகர் கிளின்ட் ஈஸ்ட்வுட் நடிப்பில் வெளியான திரைப்படத்தின் டைட்டில் “The Good The Bad And The Ugly”.

அதே தலைப்பை அஜித் படத்துக்கு ஆதிக் ரவிச்சந்திரன் வைத்துள்ளார். மூன்று குணாதிசங்களை சித்தரிக்கும் வகையில் தலைப்பு உள்ளதால், அஜித், இதில் மூன்று வேடங்களில் நடிக்கிறாரா என்பது தெரியவில்லை.

– பாப்பாங்குளம் பாரதி.