ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர். எஸ். இயக்கத்தில் இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் மற்றும் மமிதா பைஜூ நடிப்பில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘ரெபல்’.
இப்படம் மார்ச் 22ஆம் தேதி திரைக்கு வரும் நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய படத்தின் கலை இயக்குநர் உதய்குமார்:
இந்தப் படத்தின் கதை 1980 இல் நடப்பது போல் இருந்தது. அந்த காலகட்டத்தைத் திரையில் கொண்டுவருவது எங்களுக்கு சவாலாக இருந்தது. ஒவ்வொரு ஃபிரேமும் பார்த்துப் பார்த்து உருவாக்கியுள்ளோம். படம் கண்டிப்பாக ஒரு புதுமையான உணர்வைக் கொடுக்கும் என்றார்.
இயக்குநர் – நடிகர் சுப்பிரமணிய சிவா பேசியது:
முதல் படம் ஒரு அரசியல் மயப்படுத்தப்பட்ட படமாக, பொதுவுடைமை கருத்தைத் தைரியமாகச் சொல்லும் படமாக இயக்கியிருக்கிறார் நிகேஷ். முதல் படத்தில் இதை செய்வது மிகப்பெரிய விசயம். தமிழை முதல் படத்தில் இவ்வளவு தைரியமாகப் பேசி எடுப்பது பெரிய விசயம் நிறைய ஹீரோக்கள் இதைச் செய்யப் பயந்திருப்பார்கள்.
ஆனால் மிகத் தைரியமாகச் செய்துள்ள ஜீவிக்கு நன்றி. அவர் சமூகத்தில் சின்ன சின்ன விசயங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார். இவரால் மட்டும் தான் இப்படி ஒரு படத்தில் நடிக்க முடியும்.
இந்தப் படம் பார்க்கும் போது எனக்கு நாயகன் படம் தான் ஞாபகம் வருகிறது. அந்தப் படமும் மும்பையில் தமிழர்கள் படும் கஷ்டங்களைப் பேசும். ரஜினிக்கு பில்லா மாதிரி ஜீவிக்கு இது பெயர் சொல்லும் ஆக்சன் படமாக இருக்கும்.
ரஞ்சித் எனக்கு மிகப்பிடித்த இயக்குநர். தமிழ் சினிமாவில் ஆர்.பி சௌத்திரிக்குப் பிறகு அதிக இயக்குநர்களை அறிமுகப்படுத்தி வருகிறார் ரஞ்சித் அவருக்கு என் நன்றி.
இந்தப்படம் தான் உண்மையான மஞ்ஞும்மள் பாய்ஸ். தமிழ் பசங்க கேரளா போவது தான் கதை. ஒரு அருமையான போராளிப்படம்.
இயக்குநர் பா.ரஞ்சித்:
“ஜீவியை எனக்கு தங்கலான் மூலமாகத் தான் தெரியும். எல்லோரும் அவரை நல்ல மனிதன் எனச் சொல்வார்கள். ஆனால் நேரில் பழகியபிறகு தான் தெரிந்தது, மிகமிக நல்ல மனது கொண்ட மனிதர். அவர் இன்னும் நிறைய ஜெயிக்க வேண்டும், நிறையப் பேருக்கு நல்லது செய்ய வேண்டும்.”

