Take a fresh look at your lifestyle.

தனுஷின் 50-வது படத்தின் தலைப்பு ‘ராயன்’!

நடிகர் தனுஷுக்குள் பல்வேறு முகங்கள் இருப்பதை அவர் படிப்படியாக வெளிக்கொணர்ந்துள்ளார்.

பாடகர், பாடல் ஆசிரியர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர் என பல அவதாரங்கள் எடுத்த தனுஷ், ‘பவர் பாண்டி’ என்ற படம் மூலம் இயக்குநர் அவதாரமும் எடுத்தார்.

காதலை மையமாகக் கொண்ட அந்தப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தனுஷ் நடிக்கும் 50-வது படத்தை அவரே இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே. சூர்யா, அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். கடந்த டிசம்பர் மாதமே இதன் படப்பிடிப்பு முடிந்து விட்டது.

வட சென்னையை கதைக்களமாகக் கொண்ட இந்தப் படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக உருவாகி இருக்கிறது.

இந்தப் படத்துக்கு ‘ராயன்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள பட நிறுவனம், படத்தின் முதல் தோற்றத்தையும் வெளியிட்டுள்ளது.

‘ஃபர்ஸ்ட் லுக்’ போஸ்டரில் முறுக்கிக்கொண்டு நிற்கும் தனுஷின் கையில் ரத்தம் படிந்திருக்கிறது. அவருக்குப் பின்னால், சந்தீப் கிஷணும், காளிதாஸ் ஜெயராமும் கையில் கத்தியுடன் எட்டிப் பார்க்கின்றனர்.

வன்முறைக் காட்சிகளுக்கு படத்தில் பஞ்சம் இருக்காது என்பதை போஸ்டர் உறுதி செய்கிறது.

‘பான் இந்தியா’ படமாக தயாராகியுள்ள ‘ராயன்’ தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது.
மக்களவை தேர்தலுக்கு பிறகு கோடை விடுமுறையில் இந்த படம் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது.

-பாப்பாங்குளம் பாரதி.