தமிழ்த் திரைக்கூடம் தயாரிப்பில், பிரபல பாடலாசிரியர் பிரியன் எழுதி, இயக்கி, நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ‘அரணம்’.
ஒரு மாறுபட்ட ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.
விழாவில் பேசிய பாடலாசிரியர் பாலா, இது எனது முதல் திரைப்படப் பாடல். சிறு வயதிலிருந்து பாடலாசிரியர் ஆக வேண்டும் என்பது கனவு. எனது ஆசான் நாயகனாக அறிமுகமாகும் படத்தில் நானும் பாடலாசிரியராக அறிமுகமாவது மகிழ்ச்சி. காத்துல என்ன தூத்துது எனும் பாடல் அனைவரையும் கவரும் என்றார்.

அடுத்து பேசிய ஒளிப்பதிவாளர் நௌஷத், அரணம் என்றால் கவசம் என்பது அர்த்தம்.
பிரியன் சார், ஷாட் நன்றாக வரும் வரை விடவே மாட்டார். நான் நிறையப் படங்கள் செய்துள்ளேன். ஆனால் இவர் பக்கத்தில் வந்தால் பயம் வரும்.
அவர் சிரித்துக்கொண்டே தனக்குத் தேவையானதை வாங்கி விடுவார். கச்சிதமாகப் படத்தை உருவாக்கியிருக்கிறார் என்றார்.
பின்னர், பேசிய பாடலாசிரியர் சுப்பா ராவ் தமிழ்பா கூடத்தில் பாடல் எழுத பயிற்சி பெற்றேன். உலகத்திலேயே பாடல் எழுதப் பயிற்சி தருவது இவர் மட்டும் தான். அரணம் எடுத்தபோது எனக்கு வாய்ப்புத் தந்தார்.
அரணம் படத்தை எல்லோருக்கும் பிடிக்கும் வண்ணம் ஹாரர், காமெடி, திரில்லர் சேர்த்து அருமையாக எடுத்துள்ளார். அவரிடம் 250க்கு மேற்பட்ட பாடலாசிரியர்கள் மாணவர்களாக உள்ளனர்.
அவருக்கு மாணவர்களை வளர்த்துவிட வேண்டும் என்பது தான் ஆசை. இப்படம் இரண்டாவது ஷெட்யூல் எடுக்க முடியாத சூழ்நிலை இருந்தது, பல இரவுகள் அவர் தூங்கவில்லை. இந்தப் படத்திற்காக நிறைய உழைத்திருக்கிறார் என்றார்.
படத்தைப் பற்றிப் பேசிய இயக்குநர், நடிகர், பாடலாசிரியர் பிரியன், அரணம் ஒரு பெரும் தவம். இந்தப்படம் எனக்கு மிகப்பெரும் அனுபவம்.
20 வருடம் சினிமாவில் இருப்பவனையே இந்த அளவு அடிக்கிறார்கள் என்றால் புதிதாக சினிமாவுக்கு வருபவர்களை என்ன செய்வீர்கள்?.
ஒரு கலையை அந்த துறையிலிருந்து கொண்டே அழிப்பது சினிமாவில் தான். அரணம் நிறையக் கற்றுத் தந்துள்ளது. தன்னுடைய படத்தின் விழாவிற்கே வராமல் இருக்கிறார்கள் நாயகிகள்.
ஆனால் வர்ஷா இந்தப்படத்தில் ஒரு உதவி இயக்குநராக பணியாற்றினார். இப்போது வரை படத்திற்காக பணியாற்றிக்கொண்டுள்ளார்.

ஒளிப்பதிவாளர் நௌஷத் என்ன சொன்னாலும் உடனே செய்துவிடுவார்.
பிகே சம்பளமே வேண்டாம், இந்தக் கதைக்காக நான் வேலை செய்கிறேன் என்று வந்து எடிட் செய்தார்.
இசையமைப்பாளர் உடல்நிலை காரணமாக வரமுடியவில்லை. நல்ல பாடல்கள் தந்துள்ளார்.
படத்தில் பணியாற்றிய எல்லோரும் தங்கள் படமாக நினைத்துத் தான் உழைத்தார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி.
படம் படைப்பாளிகள் கையில் இல்லை, கார்பரேட் கையில் இருக்கிறது. நல்லப் படத்திற்கு இங்கு இடமில்லை. ஒரு பெரிய படம் வந்தால் நன்றாக ஓடும் சின்னபடங்களை எடுத்து விடுகிறார்கள்.
கலைஞனுக்கு அறம் வேண்டாமா? காசு மட்டும் இருந்தால் போதும், என்ன வேண்டாலும் செய்யலாமா? வெளிப்படங்கள் வருவது கூட பொறுத்தக்கலாம். 10, 20 வருடம் ஆன முத்து, ஆளவந்தான் எல்லாம் இப்போது வந்து தியேட்டரில் ஓடுகிறது. அதெல்லாம் டிவியில் 300 தடவை போட்ட படம்.
எதற்கு மீண்டும் மீண்டும் இப்படி சம்பாதிக்க நினைக்கிறீர்கள். புதுப்படங்களுக்கு கொஞ்சமாவது வழி விடுங்கள். ஒரு தரமான படைப்பை நாங்கள் தந்துள்ளோம்.
இது ஒரு எழுத்தாளனின் படைப்பு. இந்தப் படத்தின் முதல் பாதியைப் பார்த்து இரண்டாம் பாதியைக் கணிக்கவே முடியாது என்றார்.