‘அல்டிமேட் ஸ்டார்’ அஜித்தின் புதியபடம், ஏகப்பட்ட திருப்பங்கள் மற்றும் திருத்தங்களுடன், ஆரம்பான நிலையில் மேலும் சில மாற்றங்கள் செய்யப்படுவதாக தகவல் கிடைத்துள்ளன.
முதலில் இந்த அஜித் படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, விக்னேஷ் சிவன் மாற்றப்பட்டார்.
அஜித் படத்தை, மகிழ் திருமேனி இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. கதை முழுமையாக தயாராகததால், ‘ஷுட்டிங்’ தாமதமானது. ஒரு படியாக கதை உருவாகி, படத்துக்கு ‘விடா முயற்சி’ என பெயர் சூட்டப்பட்டது.
அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிப்பார் என அறிவிக்கப்பட்டது. ரெஜினா கசட்ன்ரா, பிரியா பவானி சங்கர் உள்ளிடோரும் படத்தில் இணைந்தனர்.
அஜர்பைஜான் நாட்டில், அக்டோபர் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், அங்கு அரங்கம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்த கலை இயக்குனர் மிலன் காலமானார்.
படக் குழுவினர் மத்தியில், இந்த நிகழ்வு மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு அஜித், சென்னை திரும்பினர். இரண்டு வாரங்களாக ஓய்வில் இருந்த அஜித், படப்பிடிப்புக்காக மீண்டும் சென்னையில் இருந்து அஜர்பைஜான் புறப்பட்டுச் சென்றார்.
அவர் தொடர்ச்சியாக 70 நாட்கள் இந்தப் படத்துக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார். படப்பிடிப்பு தொடங்கியபோது நீரவ்ஷா ஒளிப்பதிவாளராக இருந்தார். இப்போது அவர் மாற்றப்பட்டு, பிரகாஷ் ஒளிப்பதிவு செய்து வருகிறார். காரணம் தெரியவில்லை.

இந்தப் படத்தில் நடிக்க ஆக்ஷன் கிங் அர்ஜுனும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவர் வில்லன் வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்.
அஜித்தும், அர்ஜுனும் இணைந்து இதற்கு முன்பு ‘மங்காத்தா’ படத்தில் நடித்திருந்தனர். 2011 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் அமோக வெற்றி பெற்றது. மீண்டும் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் இணைந்துள்ளனர்.
இன்னொரு வில்லனாக ஆரவ் நடிக்க உள்ளதாக கோடம்பாக்கத்தில் ஒரு செய்தி உலா வருகிறது. மகிழ் திருமேனி இயக்கத்தில், உதயநிதி கதாநாயகனாக நடித்த ‘கலகத்தலைவன்’ படத்தில் முக்கிய வேடத்தில் ஆரவ் நடித்திருந்தார்.
அஜித்துடன் ஆரவ் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதால், அவர், விடா முயற்சியில் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளிலும் ஷூட்டிங் நடத்த முதலில் திட்டமிட்டிருந்தனர். ஆனால், இப்போது முழு படத்தையும் அஜர்பைஜானிலேயே முடித்து விட திட்டமிட்டுள்ளார் மகிழ் திருமேனி.
– பாப்பாங்குளம் பாரதி.