சினிமாவில் குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு நடிகைகள் திருமணம் செய்து கொண்டு சினிமாவுக்கு முழுக்கு போடுவதும், மார்க்கெட் இழந்து ஒதுங்குவதும், அதுவும் இல்லை என்றால் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிப்பதும் சகஜம்.
ஆனால், ஆண்டுகள் பல கடந்த பிறகும் ரசிகர்கள் நெஞ்சில் இடம்பெற்று, கதாநாயகிகளாகவே தங்களது தனித்துவ நடிப்பால் கவனம் ஈர்ப்பவர்களாக சீனியர் நடிகைகள் சிலர் வலம் வருகிறார்கள்.
இந்தப் பட்டியலில் முன்னணியில் இருப்பவர் நயன்தாரா. திருமணத்திற்கு பிறகும் பிசியாக நடித்து வருகிறார்.
ஷாருக்கான் ஜோடியாக நடித்து வெளியான ‘ஜவான்’ படம் ரூ.1,000 கோடி வசூலை ஈட்டி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. தற்போது ‘அன்னபூரணி படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. ‘டெஸ்ட்’, ‘மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’ ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அடுத்து, சினிமாவில் 20 ஆண்டுகளாக தாக்குப்பிடித்து வரும் திரிஷா, ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் அழகுப் பதுமையாக வந்தார். சமீபத்தில் ‘லியோ’ படம் வெளியானது. தற்போது அஜித்குமார் ஜோடியாக ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மலையாளத்தில் ‘ராம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
உடல் எடை அதிகரித்து அவதிப்பட்டு வந்த அனுஷ்கா, மூன்று ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி படத்தில் நடித்து கம்பேக் கொடுத்தார்.
படத்தின் வெற்றி தந்த நம்பிக்கையில் தற்போது மலையாளத்தில் நடிக்க வருகிறார். தமிழிலும் கதைகள் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
திருமணம் ஆகி குழந்தை பெற்ற பிறகு மீண்டும் காஜல் அகர்வால் நடிக்க வந்துள்ளார். தற்போது கமல்ஹாசன் ஜோடியாக ‘இந்தியன்-2’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். தெலுங்கில் ‘சத்தியபாமா’, இந்தியில் ‘உமா’ ஆகிய படங்களும் கைவசம் வைத்துள்ளார்.
தமன்னா ‘ஜெயிலர்’ படத்தில் ஆடிய ‘காவலா…’ பாடல், அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது.
தெலுங்கு, மலையாள படங்களும் ஹிட் அடித்தன. இதனால் பூரிப்போடு வலம் வரும் தமன்னா தமிழில் ‘அரண்மனை- 4’, இந்தியில் ‘வேதா’ ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
கீர்த்தி சுரேஷ் தமிழில் ‘சைரன்’, ‘ரகு தாத்தா’, ‘ரிவால்வர் ரீட்டா’, ‘கண்ணிவெடி’ ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
‘குஷி’ படத்தில் நடித்த சமந்தா நடிப்புக்கு தற்காலிகமாக ஓய்வு அளித்து, தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தயாராகி வருகிறார்.
திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடிப்பேன் என்று சந்தோஷ செய்தி அளித்த ஹன்சிகா மோத்வானி, அடுத்தடுத்து ‘மகா’, ‘பாட்னர்’ படங்களில் நடித்து வியப்பூட்டினார்.

தற்போது தமிழில் ‘105 மினிட்ஸ்’, ‘ரவுடி பேபி’, ‘கார்டியன்’, ‘மேன்’ ஆகிய படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழில் ‘மோகன்தாஸ்’, ‘தீயவர் கொலைகள் நடுங்க’ ஆகியப் படங்களில் நடித்து வருகிறார்.
நடிகை டாப்சி தமிழ்ப் படங்களில் நடிக்க கதைகளை கேட்டுக் கொண்டிருக்கிறார்.
தற்போது ‘டங்கி’ உள்பட 3 பாலிவுட் படங்களில் நடிக்கிறார்.
புதுவரவாக தமிழ் சினிமாவுக்கு எத்தனை பேர் வந்தாலும், அனுபவ நடிப்பால் தமிழ் சினிமாவில் இன்றளவும் முன்னணி நடிகைகள் கோலோச்சி வருகிறார்கள் என்பதற்கு இவர்களே சான்று.
-நன்றி: தினந்தந்தி