சினிமா உலகில் தலைசிறந்த விருதாகக் கருதப்படுவது ஆஸ்கர் விருது. இந்த விருதை அடைய ஒவ்வொரு திரைப்படக் கலைஞனுக்கும் மிகப்பெரிய கனவாக உள்ளது. அதை நோக்கியும் அவர்கள் பயணிக்கிறார்கள்.
இந்த விருதில் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த திரைக்கதை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில், ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இந்தாண்டும் 97-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலகலமாக நடைபெற்றது.
ஆஸ்கர் என்னும் மிக உயரிய விருதைப் பெற பல்வேறு நாடுகளிலிருந்து திரைப்படக் கலைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.
நகைச்சுவை நடிகர் கானன் ஓ பிரையன் ஆஸ்கர் விழாவைத் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் டோஜா கேட், அரியானா கிராண்ட் உள்ளிட்ட பிரபல பாடகர்கள் இசையரங்கேற்றினர்.
கடந்த 2024ம் ஆண்டு வெளியான திரைப்படங்கள் மற்றும் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
இதில், ‘அனோரா’ திரைப்படம் 5 விருதுகளை அள்ளிக் குவித்தது. இப்படம் சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றது. ‘அனோரா’ படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதை ஷான் பேக்கர் வென்றார்.
சிறந்த நடிகைக்கான விருதை ‘அனோரா’ படத்தில் நடித்த மைக்கி மேடிசன் வென்றார். மேலும், இப்படம் சிறந்த படத்தொகுப்பு, சிறந்த திரைக்கதை என 5 ஆஸ்கர் விருதுகளை வென்றது.